Tiruvannamalai Deepam 2025: கார்த்திகை தீபத்துக்கு கிரிவலம் செல்லும் பக்தர்களே! உங்களுக்கான முக்கிய அறிவிப்புகள்! தவறினால் ஆபத்து
Tiruvannamalai Deepam 2025: திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம் 2025 முன்னிட்டு கிரிவலப்பாதை செல்லும் பக்தர்களுக்காக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத்தை முன்னிட்டு கிரிவலப்பாதையில் செல்லும் பக்தர்களுக்காக மாவட்ட காவல்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
கிரிவலப்பாதை - வழிகாட்டு நெறிமுறைகள்
திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத்தை முன்னிட்டு 02.12.2025-ந் தேதி முதல் 05.12.2025-ந் தேதி வரை போக்குவரத்து நெரிசல் ஏதுமின்றி பக்தர்கள் கிரிவலம் செல்ல ஏதுவாக 24 தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் 130 கார் நிறுத்தும் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள். அவற்றை முறையாக பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
பக்தர்கள் தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் கார் நிறுத்தும் இடங்கள் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை WhatsApp உதவி எண். 9487851015-க்கு Hello Message மூலம் தொடர்புகொண்டு Google Map Link-ஐ பெற்று Google Map உதவியுடன் அந்தந்த தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் கார் பார்க்கிங் இடத்திற்கு செல்லலாம்.
1. பக்தர்களுக்கு நீர்மோர் வழங்குதல், திலகமிடுதல், ஆசிர்வதித்தல் என்ற போர்வையில் ஏமாற்றியும் மற்றும் மிரட்டியும் பக்தர்களிடமிருந்து பணம் வசூலிப்பது குற்றமாகும். அக்குற்றச் செயல்களை கண்காணிக்க கிரிவலப்பாதையில் பிரத்யேகமாக காவல் அதிவிரைவுப் படைகள் (QRT) ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அக்குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் உடனடியாக கைது செய்யப்பட்டு கடும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என எச்சரிக்கப்படுகிறது.
2. பக்தர்கள் நான்கு கோபுரங்களுக்கு முன்போ, கிரிவலப்பாதையிலோ எங்கும் கற்பூரம் ஏற்றுதல் கூடாது.
3. கால்நடை உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக உலாவவிடக்கூடாது. பக்தர்களும் கால்நடைகளுக்கு அகத்திக்கீரை உள்ளிட்டவற்றை வழங்குவதை தவிர்க்கவும்.
4. உரிய அனுமதியின்றி அன்னதானம் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் அன்னதானம் வழங்க அறிவுறுத்தப்படுகிறது.
5. கிரிவலம் செல்வோர் அன்னதானம் வழங்கப்படும் இடங்களில் அங்கேயே சாப்பிட்டு விட்டு, தட்டுகளையும், அதன் கழிவுகளையும் அதற்காக அமைக்கப்பட்டுள்ள குப்பை கூடையில் போட வேண்டும், மக்கள் நடந்துகொண்டே சாப்பிட்டு விட்டு தட்டுகளை கண்டிப்பாக ரோட்டில் போடக்கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
6. கிரிவலம் செல்லும் பக்தர்கள் தங்களது குழந்தைகளையும் உடன்வரும் வயதானவர்களையும் பத்திரமாக பாதுகாத்துக்கொள்ளவேண்டும். உடன் வருபவர்கள் காணாமல் போய்விட்டால் அதுகுறித்து தகவல் தெரிவிக்க கிரிவல பாதையில் உள்ள தி.மலை நகரம் 9498100438 தி.மலை மேற்கு 08379235735) மற்றும் தி.மலை தாலுகா 9498100438 ஆகிய காவல் நிலையங்களையோ அல்லது கிரிவல பாதையில் உள்ள காவல் உதவி மையங்களையோ அணுகலாம்.'
7. பக்தர்கள் தங்களது செல்போன் ஆபரணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் ஆகியவற்றை தாங்களே பாதுகாத்துக்கொள்ளவேண்டும். யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். சந்தேகத்திற்கிடமான நபர்களையோ அல்லது பொருட்களையோ கண்டால் உடனடியாக அருகில் உள்ள காவல்துறை அலுவலரிடம் தெரிவிக்கவும்.
8. பக்தர்கள் உதவிக்கு அருகிலுள்ள காவல் உதவி மையத்தை (May I Help You Booth) அணுகலாம். கீழ்க்காணும் அலைபேசி எண்களுக்கும் தொடர்பு கொள்ளலாம். இந்த உதவி எண்கள் 24 மணி நேரமும் செயல்படும்.
1. உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் - 9498100431
2. திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு காவல் நிலையம் - 7904117036
3. அவசர உதவி எண் - 100
4. தீபம் காவல் கட்டுப்பாட்டு அறை எண் - 9150534600, 7695878100
9. பக்தர்கள் கிரிவலப்பாதையை ஒட்டியுள்ள நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்கவும்.
10. கிரிவலப்பாதையில் நிறுவப்பட்டுள்ள தற்காலிக கழிப்பிடங்களை முறையாக பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. மற்ற பொது இடங்களில் கண்டிப்பாக சிறுநீர் கழிக்கக்கூடாது.
11. குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவும்.
12. பக்தர்கள் தங்களது காலணிகளை 4 கோபுரங்களின் முன்பும், மாடவீதிகளிலும் விடுவதை தவிர்க்கவும் கடைகள் அல்லது அந்தந்த தற்காலிக பேருந்து நிலையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காலணி பாதுகாப்பகங்களில் விட அறிவுறுத்தப்படுகிறது.
13. கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக தற்காலிக கடைகள் அமைக்க தடை செய்யப்பட்டுள்ளது. மீறும்பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
14. கிரிவலப்பாதை மற்றும் மாடவீதிகளில் பக்தர்களுக்கு தொல்லை கொடுக்கும் விதமாக அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களான பீப்பி மற்றும் ஊதுகுழல் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதும், பயன்படுத்துவதும் குற்றமாகும்.
15. பக்தர்களுக்கு இடையூறாக கிரிவலப்பாதை மற்றும் மாட வீதிகளில் உள்ள நிரந்தர கடைகளில் அதிக ஒலியுடன் கூடிய விளம்பர ஆடியோக்கள் ஒலிபரப்ப தடை செய்யப்பட்டுள்ளது.
16. கிரிவலப்பாதையில் தற்காலிகமாக கடைகள் அமைத்தோ, தங்கியோ அனுமதியின்றி கேஸ் சிலிண்டர் பயன்படுத்தி சமையல் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சமையல் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும்.
17. அனுமதியின்றி வனப்பகுதியில் பிரவேசிப்பதும், மலை மீது ஏற முயற்சிப்பதும் குற்றமாகும். மீறுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
18. ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்படின் அருகில் உள்ள மருத்துவ முகாம்களில் மருத்துவ உதவி பெறலாம். உதவிக்கு அருகில் உள்ள காவல் உதவி மையத்தையும் (May I Help You Booth) அணுகலாம்.
19. மின் இணைப்பு பெட்டி, மின்சார இணைப்புகளில் கை வைக்ககூடாது. மின் கம்பிகள் அறுந்து விழுந்து கிடந்தால் மின் பெட்டியில் கை வைக்காமல் அருகில் பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்களிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
20. அவசரகால மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல ஏதுவாக கிரிவல பாதையில் ஆங்காங்கே ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எவருக்கேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டால் ஆம்புலன்ஸ் உதவி எண். 102 ஐ தொடர்பு கொள்ளவும்.
21. குறி சொல்பவர்கள் மற்றும் தம் கவனத்தை திசை திருப்புவோர்களை நம்பி நகை மற்றும் விலை மதிப்புள்ள உடமைகள் எதையும் கொடுக்க வேண்டாம்.
22. கிரிவல பாதையில் கிரிவலம் செல்லும் மக்கள் கூட்டத்திலுள் செல்ல இரு சக்கர வாகனங்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை, மீறி செல்வோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்
23. மக்கள் அதிமாக கூடுவதால் ஜன நெருக்கடி ஏற்படும் பகுதிகளான சக்கர குளம் (இராஜகோபுரம் எதிரில், இந்திர லிங்கம், கற்பக விநாயகர் கோயில் சந்திப்பு, அக்னி லிங்கம், மகா சக்தி மாரியம்மன் கோயில் (சோமததிஞளம் அருகில், நிருதிலிங்கம், திருநேர் அண்ணாமலை, குபேர லிங்கம், இடுக்கு பிள்ளையார் கோயில் மற்றும் பூதநாராயணன் கோயில் சந்திப்பு போன்ற இடங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு அதிக நேரம் நின்று தரிசனம் செய்ய வேண்டாம் என்று விரும்பி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.





















