ஆதிதிராவிடர் பகுதிக்கு சென்ற கந்தசாமி.. மலர் தூவி, நடனம் ஆடி வரவேற்ற கிராம மக்கள்
இரண்டாம் ஆண்டு வருதால் மலர் தூவி, பட்டாசு வெடித்து, மேளதாளத்துடன் மக்கள் ஆரவாரமாக உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு திருப்போரூர் கந்தசாமி உற்சவர் தேர் ஆதிதிராவிடர் பகுதியில் சுமார் 400 வருடங்களுக்கு பிறகு இரண்டாம் ஆண்டு வந்ததை மலர் தூவி, பட்டாசு வெடித்து, மேளதாளத்துடன் மக்கள் ஆரவாரமாக உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருப்போரூர் கந்தசாமி முருகர் கோயில்
செங்கல்பட்டு (Chengalpattu News) திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக முத்துக் குமாரசாமி உற்சவர் வீதி உலா பரிவேட்டை நடத்துவதற்காக ஆலத்தூர், தண்டலம் கிராமங்களுக்குச் செல்வது வழக்கம். இந்த கிராமங்களுக்கு சென்று விட்டு திரும்பும்போது திருப்போரூரில் உள்ள ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் தெருவிலும் வீதி உலா நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக அப்பகுதி மக்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது கடந்த ஆண்டு முதல் அப்பகுதிக்கு சுவாமி செல்ல வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை அடுத்து கடந்த ஆண்டு முதல்முறையாக அப்பகுதிக்கு சுவாமி ஊர்வலம் சென்றது. இதில் கடந்த ஆண்டு நீதிமன்ற உத்திரப்படி படவேட்டம்மன் கோவில் தெரு பகுதி மக்கள் வசிக்கும் இடத்திற்கு முருகர் வள்ளி தெய்வானையுடன் தேர் வீதிஉலா வந்தது. அதில் ஒரு சில சலசலப்பு ஏற்பட்டது. இந்தாண்டு அப்பகுதிக்கு சுமூகமாக சென்று, அப்பகுதி மக்கள் வழிபாடு செய்த பின் மீண்டும் கோவில் வந்தடையும் வரை அனைத்து சமூக மக்களிடம் சம்பந்தமான சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிரம்மோற்சவ விழா
இந்தநிலையில், கந்தசாமி திருக்கோயில், பிரம்மோற்சவ திருவிழா இந்தாண்டு கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்வான 8ஆம் நாள் பரிவேட்டைத் திருவிழா துவங்கி கோயிலிலிருந்து, புறப்படும் முத்துக்குமார சுவாமி மயில் வாகனத்தில் ஒரு காலை தரையிலயும் மற்றொரு காலை மயில் மேலேயும் வைத்துக்கிட்டு, கையில் வில் அம்பு ஏந்தி போர்க் கோலத்தில் சென்று ஆலத்தூர் கிராமத்துக்குச் சென்று பக்தர்கள் வழிபட்டனர். தண்டலம், மேட்டுதண்டலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பின்னர் திருப்போரூர் படவேட்டம்மன் கோயில் தெருவில் கோயில் தேர்விற்கு தேர் உற்சவ வருகை தந்தது.
நீதிமன்ற தீர்ப்பு
நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து பலத்த போலீசார் பாதுகாப்புடன், வருவாய்த்துறை, இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் முன்னிலையில் முருகப்பெருமான் தேர் உற்சவத்தை அப்பகுதி மக்கள் மலர் தூவியும், பட்டாசு வெடித்தும், மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். 108 தேங்கா உடைத்து சாமியை வரவேற்றனர்.
கொண்டாடித் தீர்த்த கிராம மக்கள்
பின்னர் ஆதிதிராவிடர் மக்கள் தாய் வீட்டு சீர்வரிசை நாதஸ்வரம் முழங்க எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு பட்டு வேட்டி உடுத்தி, சுமார் 30 கிலோ எடையுள்ள ஆள் உயர மாலை அணிவித்து முருகப்பெருமானை வழிபட்டனர். திருப்போரூர் கந்தசாமி உற்சவர் தேர் ஆதிதிராவிடர் பகுதியில் சுமார் 390 வருடங்களுக்கு பிறகு இரண்டாம் ஆண்டு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்து அரோகரா முழக்கமெட்டு, இளைஞர்கள் நடனமாடியும் சாமியை வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பகுதியில் எந்தவித அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க, நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.