வேப்பமரத்தில் திடீரென வடிந்த பால்.. கீழ்பென்னாத்தூரில் அதிசயம்.. மக்கள் குவிந்ததால் பரபரப்பு
கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள வேப்பமரத்தில் பால் வடிந்ததால் கிராம மக்கள் பூஜைசெய்து படையலிட்டு வழிபட்டனர்.
திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த நம்மியந்தல் கிராமத்தில் வேடியப்பன் கோயில் உள்ளது. இந்த கோவிலின் அருகே உள்ள வேப்பமரத்தில் திடீரென பால் வடிந்தது. இந்த அதிசயம் சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்களுக்கு பரவியது. பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து, பக்தி பரவசத்துடன் வேப்ப மரத்தில் திரவம் போன்று வடியும் பாலை கண்டு வழிபட்டனர். அப்போது ஒரு பெண்ணுக்கு அருள் வந்து, 'நான் இங்குதான் இருப்பேன், எனக்கு தினமும் கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்திட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அதை தொடர்ந்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். குலதெய்வ கோயிலான வேடியப்பன் கோயிலில் காலங்காலமாக பொதுமக்கள் வழிபட்டு வந்த நிலையில் தற்போது கோயில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், அங்கு இருந்த வேப்ப மரத்தில் பால் வடிந்ததால் மரத்தில் கடவுள் இருப்பதாக எண்ணி அப்பகுதி மக்கள் திரண்டு வழிபட்டு வருகின்றனர். இந்த அதிசயத்தைப் பார்க்க அப்பகுதியில் பொதுமக்கள் குவிந்தனர். அத்துடன், வேப்ப மரத்தில் கசிந்த பாலை அம்மனின் தீர்த்தமாக கருதி வழிபாடு செய்து தலையில் தெளித்துக் கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேப்ப மரத்தில் பால் வடிவது ஏன்?
இந்த பகுதியில் இருக்கும் மக்கள் , வேப்பமரத்தில் இருந்து வழிந்த இனிப்பான பால் அம்மனின் பிரசாதம் என்ற நம்பிக்கையில் இருக்க வேலூரை சேர்ந்த தாவரவியல் பேராசிரியர் ஒருவர் இந்த சம்பவத்திற்கு அறிவியல் பூர்வமாக வேறு விளக்கத்தை தந்துள்ளார். “பொதுவாக வேப்பமரத்தில் உள்ள மாவுச்சத்தை , வேப்பமர இலைகள் சர்க்கரையாக மாற்றும். இந்த நேரத்தில் வேப்பமரத்தின் வேர்களுக்கு அதிகப்படியான தண்ணீர் கிடைத்தால், தண்ணீரின் அளவு அதிகமாகி வேப்பமரப் பட்டையின் அடியிலுள்ள திசு பாதிக்கப்பட்டு, மரத்திலுள்ள மாவுச்சத்து , மரத்தின் பட்டைகளை பிளந்துகொண்டு இனிப்புப் பால் போன்று வடியும். மரத்திலுள்ள தண்ணீரின் அளவு குறையும்போது, பாதிக்கப்பட்ட திசு வளர்ந்து ஓட்டை அடைபட்டு, பால் போன்ற திரவியம் வடிவது நின்றுபோகும். இது வேப்பமரத்தின் இயல்பான தன்மைதான் , அம்மன் இறங்கியுள்ளார் என்பதெல்லாம் மக்களின் நம்பிக்கை மட்டுமே" என்று தெரிவித்தார் .
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.”உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்