Thiruppavai 21: மார்கழி 21... இன்றைக்கு சூடி கொடுத்த சுடர்கொடியான ஆண்டாள் என்ன சொல்கிறார்
Maargali 21: மார்கழி மாதம் 21வது நாளான இன்று, இந்த நாளுக்கு உரிய திருப்பாவை பாடலாக ஆண்டாள் இயற்றியதை காண்போம்.
மார்கழி மாதத்தில் கண்ணபிரானை போற்றி, 30 நாட்களும் 30 பாடல்கள் கொண்ட திருப்பாவையை, சூடி கொடுத்த சுடர் கொடியான ஆண்டாள் இயற்றியுள்ளார். இருபத்தொன்றாவது பாடல் மூலம் கூற வருவதை காண்போம்.
பாடல் விளக்கம்:
பால் கறக்கும் போது எல்லாம், பாத்திரம் நிரம்பும் வகையில், பால் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக்களை உடையவனே; உலகிற்கு ஒளிகாட்டும் சுடராக விளங்கும் கண்ணனே…எழுந்து வருவாயாக…
உன்னை எதிர்ப்பவர்கள் எல்லாம் வலிமையிழந்து, உன் திருவடியில் விழ காத்து கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியை புகழ்ந்து பாட காத்து கொண்டிருக்கிறோம். எங்களது வேண்டுகோளை ஏற்று எழுந்துவந்து அருள் புரிவாயாக என ஆண்டாள் பாடல் அமைத்திருக்கிறார்.
திருப்பாவை இருபத்தொன்றாவது பாடல்:
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்!
ஊற்றம் உடையாய் ! பெரியாய் ! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே ! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடிபணியுமா போலே,
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்
ஆண்டாள்
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் மிகவும் தமிழ் புலமை மிக்கவராக திகழ்ந்துள்ளார்.
கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர். தமிழுக்கு பங்காற்றியதில், பக்தி இலக்கியங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.
மார்கழி மாதத்தில், கண்ணபிரானை வைத்து, இலக்கிய நயம் மிக்கதாகவும், உவமை- உருவகத்தை நேர்த்தியாகவும், தமிழை அழகுப்படுத்தி பாடல் அமைத்திருப்பதை காணும்போது, ஆண்டாளின் தமிழ் வளத்தை அறியலாம்