Thiruppavai 9: மார்கழி 9ஆம் நாள்... இன்றைக்கான திருப்பாவை பாடல்.. சுகத்தை துறந்தால்தான் வெற்றி
Margali 9: மார்கழி மாதம் ஒன்பதாவது நாளான இன்று, இந்நாளுக்கு உரிய திருப்பாவை பாடலாக ஆண்டாள் இயற்றியதை காண்போம்.
மார்கழி மாத்தில் கண்ணபிராணை போற்றி, 30 நாட்களும் 30 பாடல்கள் கொண்ட திருப்பாவையை ஆண்டாள் இயற்றியுள்ளார்.
எட்டாவது பாடல் மூலம் வெளிப்புறத்தில் நிகழும் நிகழ்வை சுட்டி காட்டி எழுப்பும் ஆண்டாள், ஒன்பதாவது பாடல் மூலம் சுகத்தை தவிர்த்தால் தான் இறைவன் அருள் கிடைக்கும் என தோழியிடம் கூறுகிறார்.
ஒன்பதாவது பாடல் பொருள்:
திருப்பாவை ஒன்பதாவது பாடலில், தன்னுடைய தோழி எப்படி தூங்குகிறார் என்பதை ஆண்டாள் காட்சி படுத்துகிறார்.
அவருடைய தோழி அருமையான விளக்குகளை ஏற்றி வைத்து, நவரத்தினங்களால் செய்யப்பட்ட கட்டிலில், நல்ல மணம் கமல என தூங்குவதற்கு தேவையான சுகங்களை ஏற்படுத்தி கொண்டு உறங்குவதாக காட்சி படுத்துகிறார். இதையடுத்து பெண்ணே, இந்த சுகங்களை எல்லாம் துறந்தால்தான் இறைவன் அருள் கிடைக்கும் என தோழிக்கு கூறுகிறார்.
மேலும், மாமன் மகளே கதவை திற. சரி, நீ எந்திரிப்பது போல் தெரியவில்லை . பின் தோழியின் அம்மாவிடம் கூறுகிறார், அத்தையே, நீயும் பார்த்து கொண்டு இருக்கின்றாயே, உன் மகளை எழுப்பு, உன் மகளுக்கு காது கேட்காமல் போய்விட்டதா, ஊமையாகி விட்டாளா, மந்திரத்துக்கு ஏதும் கட்டுப்பட்டு இப்படி உறங்குகிறாளா என கேட்கிறாள்
சரி, இத்தனைக்கும் உட்பட்டிருந்தாலும் கூட, அத்துன்பத்திலிருந்து நிவர்த்தி செய்ய இறைவனின் நாமத்தை சொன்னால் நீங்கி விடும். எனவே, அவளை எழுப்பி விடு என அத்தையிடம் ஆண்டாள் தெரிவிக்கிறார்.
இப்பாடல் மூலம், சாதனைகள் மற்றும் வெற்றி பெற வேண்டும் என்றால், சில சுகங்களை தவிர்க்க வேண்டும் என ஆண்டாள் குறிப்பால் உணர்த்துகிறார்.
திருப்பாவை ஒன்பதாவது பாடல்:
தூமணி மாடத்து
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்த னென்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.
ஆண்டாள்:
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் மிகவும் தமிழ் புலமை மிக்கவராக திகழ்ந்துள்ளார்.
பக்தி இயக்கம்:
கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர். தமிழுக்கு பங்காற்றியதில், பக்தி இலக்கியங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.
மார்கழி மாதத்தில், கண்ணபிரானை வைத்து, இலக்கியம் நயம் மிகச் சிறப்பாகவும், உவமை- உருவகத்தை நேர்த்தியாகவும், தமிழை அழகுப்படுத்தியிருப்பதை காணும்போது ஆண்டாளின் தமிழ் வளத்தை அறியலாம்.
தொடர்ந்து படிக்க: Thiruppavai 4: மார்கழி 4ஆம் நாள்..." வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல" கண்ணனிடம் மழையை கேட்கும் ஆண்டாள்...வியக்க வைக்கும் அக்கால அறிவியல்..