Thiruppavai 24: மார்கழி 24... ” மலையை குடையாக வைத்து தூங்கியவனே... அருள் புரிவாயாக”- ஆண்டாள்
Margali 24: மார்கழி மாதம் 24வது நாளான இன்று, இந்த நாளுக்கு உரிய திருப்பாவை பாடலாக ஆண்டாள் இயற்றியதை காண்போம்.
மார்கழி மாதத்தில் கண்ணபிரானை போற்றி, 30 நாட்களும் 30 பாடல்கள் கொண்ட திருப்பாவையை ஆண்டாள் இயற்றியுள்ளார். இருபத்து நான்காவது பாடல் மூலம், கண்ணனின் குண நலன்களையும் வீரத்தையும் புகழ்ந்து போற்றி, அருளை பெறும் படியாக ஆண்டாள் பாடல் அமைத்துள்ளார்.
திருப்பாவை இருபத்து நான்காவது பாடல் விளக்கம்:
உலகத்தை அளந்தவனே, ராவணனை அழித்தவனே, உனது புகழ் பல்லாண்டு நீடிக்கட்டும். கோவர்த்தன மலையை குடையாக வைத்து தூங்கியவனே…உன்னுடைய சீலமும் நிறைந்த குணங்கள் போற்றி..
பகைமையை அழிக்கவல்ல, உன் கையில் உள்ள வேல் வாழ்க..
புகழும், வீரமும் கொண்ட கண்ணபிரானே, உன்னுடைய அருளை பெறுவதற்காக வந்துள்ளோம், எங்களுக்கு அருள் புரிவாயாக என கண்ணனை ஆண்டாள் போற்றி பாடுகிறார்.
திருப்பாவை இருபத்து நான்காவது பாடல் :
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
கொன்றடச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்
ஆண்டாள்:
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் மிகவும் தமிழ் புலமை மிக்கவராக திகழ்ந்துள்ளார்.
பக்தி இயக்கம்:
கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர். தமிழுக்கு பங்காற்றியதில், பக்தி இலக்கியங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.
மார்கழி மாதத்தில், கண்ணபிரானை வைத்து, இலக்கிய நயம் மிக்கதாகவும், உவமை- உருவகத்தை நேர்த்தியாகவும், தமிழை அழகுப்படுத்தி பாடல் அமைத்திருப்பதை காணும்போது, ஆண்டாளின் தமிழ் வளத்தை அறியலாம்.
தொடர்ந்து படிக்க: Thiruppavai 23: மார்கழி 23... சிங்கம் போல் எழுந்து அருள் தருவாயாக, காயம்பூ நிற கண்ணனே... அழைக்கும் மகளிர்..