"பலநூறு ஆண்டுகள் பழமையான பரிகார மரம்" - 2 துண்டாக பிளந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி..
திருவெண்காடு கோயில் பக்தர்களின் வேண்டுதலைகளை நிறைவேற்றிய அரசமரம் சூறாவளி காற்றில் இரண்டு துண்டுகளாக பிளந்து சாய்ந்துள்ளது.

திருவெண்காடு கோயில் பக்தர்களின் பரிகார மரமாக விளங்கி வந்த பலநூறு ஆண்டுகள் பழமையான அரசமரம் இரண்டு துண்டுகளாக உடைந்து சாய்ந்த சம்பவம் பக்தர்களை கலக்கமடைய செய்துள்ளது.
பிரசித்தி பெற்ற சிவாலயம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயம் இதுவாகும். இது சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம். மேலும் புதனுக்கு உரிய புதன் ஸ்தலமாகவும் இது விளங்குகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11 வது சிவத்தலமாகும். காசிக்கு இணையான 6 ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலம் இதுவாகும்.

மேலும் பல சிறப்புகள்
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் சிவ பெருமான் அகோரமூர்த்தியும், ஆதி நடராஜர் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளனர். நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாகவும் உள்ளது. இக்கோயிலில் உள்ள சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று குளங்களில் புனிதநீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டால் ஞானம், குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், எம பயம் நீங்கும் என்பது ஐதீகம். தீர்த்தம், தல விருட்சம் அனைத்தும் மூன்றாக அமைந்துள்ளது. பட்டினத்தடிகளார் சிவதீட்சை பெற்ற, மெய்கண்டார் அவதரித்த இத்தலம் ஆதி சிதம்பரம் என போற்றப்படுகிறது.

மருத்துவா சூரனால் தாக்குதலுக்கு உள்ளான நந்தி பகவான்
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் உள்ள நந்தி பகவான் உடலில் காயங்கள் ஏற்பட்டதற்கான வடுக்கள் காணப்படுகின்றன. முன்பு ஒரு காலத்தில் மருத்துவா சூரன் என்ற அசுரன் தனது தவ வலிமையால் சிவபெருமானிடம் காட்சி பெற்று சூலாயிரத்தை பெற்றார். தொடரும் அந்த சூலாயுதத்தால் தேவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினான். அப்போது நந்தி பகவான் சென்று மருத்துவர சூரனிடம் முறையிட்ட போது மருத்துவா சூரன் சூலாயத்தால் நந்தி பகவானையும் தாக்கியதாக புராண வரலாறு. அந்த சூலாயத்தால் தாக்கப்பட்ட வடுக்கள் தற்போது இக்கோயிலில் உள்ள நந்தி சிலையின் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.

பூர்வ ஜன்ம பாவங்கள் நீங்கும் இடம்
இத்தலத்திலுள்ள ருத்ர பாதம் மற்றும் நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவானை வழிபட்டால் பூர்வ ஜன்ம பாவங்கள் யாவும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. யுகம் பல கண்ட கோயில் இதுவாகும். நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களும் தீர்க்கும் தலமாக இது கருதப்படுகிறது. காசியில் உள்ள ருத்ர கயாவை வழிபட்டால் வழிபட்டால் 7 தலைமுறைகளின் பூர்வ ஜன்ம பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். ஆனால் திருவெண்காட்டிலுள்ள ருத்ர கயாவை வழிபட்டால் காசியைவிட 3 மடங்கு அதாவது 21 தலைமுறைகளின் பிதுர் சாபங்கள் நீங்கும்" என்கிறார்கள்.
மரத்தடியில் ருத்ர பாதம்
இத்தலத்தில் சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோரமூர்த்தியை இக்கோயிலில் மட்டுமே காணலாம். காசியில் உள்ள 64 ஸ்நானக் கட்டடங்களுக்கு இணையான மணிகர்ணிகை ஆறு இங்குள்ளது. புதன் பகவானுக்கு தனி சந்நிதி உள்ளது. இத்தலத்திலுள்ள அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்களில் வளர்பிறை புதன் கிழமைகளில், புதன் ஹோரையில், தலைக்கு பச்சை பயிறு வைத்து முழுகி, புதனை தரிசனம் செய்யவேண்டும். அதன்பின் சந்திரத் தீர்த்தம் அருகில் ஆலமமர விருட்சத்தின் அடியில் ருத்ர பாதம் உள்ளது. இவ்விடத்தில் சிவபெருமானின் திருவடிகள் வரையப்பட்டுள்ளன. இங்கு முன்னோர்க்கு திதி, தர்ப்பணம் செய்தால் அந்தக் குடும்பத்தினர்க்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சூறாவளி காற்று
இங்கு வழிபடுவோர்க்கு 21 தலைமுறைகளின் பிதுர் சாபங்கள் நீங்கி சகல செல்வங்களும் பெறுவார்கள் என்பதை பக்தர்கள் நம்புவதால் பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இக்கோயிலுக்கு நாள்தோறும் குவிந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தீடீர் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழையில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ருத்ர பாதம் தல விருட்ச ஆலமரம் அருகில் குழந்தை பாக்கியம் வேண்டி பெண்கள் சுற்றிவந்து பரிகாரம் மேற்கொள்ளும் அரசமரம் அமைந்துள்ளது. இந்த மரம் இரண்டாக பிளந்தது சாய்ந்துள்ளது. இதனால் பக்தர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.























