திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் இவ்வளவு உண்டியல் காணிக்கை வசூலா?
திருச்சி மாவட்டத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.1.04 கோடி ரூபாயும், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவிலில் 66 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது.
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். இந்த கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அவ்வாறு பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி, கோயிலின் மண்டபத்தில் நடைபெற்றது. கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். 1 கோடியே 4 லட்சத்து 24 ஆயிரத்தி 485 ரூபாயும், 2 கிலோ 759 கிராம் தங்கமும், 5 கிலோ 117 கிராம் வெள்ளியும், 113 வெளிநாட்டு கரன்சிகள், 264 வெளிநாட்டு நாணயங்கள் காணிக்கையாக கிடைக்கப் பெற்றன. காணிக்கை எண்ணிக்கை மாதம் இருமுறை எண்ணப்படுகிறது. இதற்கு முன் மே மாதம் 9-ந்தேதி எண்ணிக்கை நடைபெற்றது.
இதேபோன்று வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அனைவராலும் அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வந்து செல்லும் பக்தர்கள் ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக பணம் நகை உள்ளிட்ட பொருட்களை கோவில் உண்டியல்களில் செலுத்திவிட்டு செல்கின்றனர். இவ்வாறு பக்தர்களிடம் இருந்து பெறப்பட்டு உள்ள காணிக்கைகளை தற்போது ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்படுகிறது - அந்த வகையில் இன்று காலை முதல் உண்டியல்கள் என்னும் பணி நடைபெற்று வந்தது. இதில் 66,05,011 ரூபாயும்... தங்கம் -201 கிராம் , வெள்ளி - 1452 கிராம் மற்றும் 241 அயல் நாட்டு ரூபாய் நோட்டுகளும் பக்தர்களிடமிருந்து காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக கோவில் இனை ஆனையர் மாரி முத்து தெரிவித்துள்ளார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்