அர்த்தநாரியே... சித்த நாடியே... அன்னாபிஷேகத்தில் அருள்பாலிக்கும் சிவனே போற்றி: பக்தர்கள் பரவசம்
அன்னம் பிராணன் என்றும், அஹமன்னம் எனவும் வேதங்கள் போற்றுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தைக் கொஞ்சம் கூட வீணாக்கலாகாது என்பதை உணர்த்தவும், அன்னத்தின் தெய்வீகத் தன்மையை எடுத்துக் காட்டவுமே அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயில் பெருவுடையாருக்கு 1000 கிலோ பச்சரிசி, 500 கிலோ காய், கனிகளால் அன்னாபிஷேக விழா நடந்தது. பிரமாண்ட பெருவுடையார் அன்னாபிஷேகத்தில் அருள்பாலிக்க பக்தர்கள் மெய் சிலிர்த்து தரிசனம் செய்தனர்.
சிவபெருமான், சதா அபிஷேகப் பிரியர். அதனால் அவருக்குப் பதினொரு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வது வழக்கம். அவை தூய நீர், பசும்பால், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள், அன்னம் ஆகியன. இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகமே.
அன்னம் பிராணன் என்றும், அஹமன்னம் எனவும் வேதங்கள் போற்றுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தைக் கொஞ்சம் கூட வீணாக்கலாகாது என்பதை உணர்த்தவும், அன்னத்தின் தெய்வீகத் தன்மையை எடுத்துக் காட்டவுமே அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
அது மட்டுமல்ல, நமது பேரண்டம் நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு எனும் பஞ்ச பூதங்களால் ஆனது. அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் என்ற திருமூலர் வாக்குப்படி நமது உடலுக்கும் பஞ்சபூதங்களுக்கும் தலைவன் சிவபிரான்.
அந்தப் பஞ்சபூதங்களை சரியான வகையில் செயல்படச் செய்து, உயிர்களுக்கு உணவும் நீரும் குறைவின்றி கிடைக்க அருள் செய்த ஈசனுக்கு நன்றி சொல்லும் வகையிலும், நாட்டிலும் வீட்டிலும் எக்காலத்திலும் உணவுப் பஞ்சம் வராமல் இருக்கவும் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தினர். அன்னம் என்பது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உண்டாவது. நிலத்தில் விழும் நெல், ஆகாயத்திலிருந்து பெய்யும் மழை நீரின் உதவியால் வளர்ந்து, காற்றினால் கதிர்பிடித்து, சூரியனின் வெப்பத்தீயினால் பால் இறுகி விளைச்சலைத் தருகிறது.
காற்றின் உதவியுடன் கதிரடித்து எடுக்கப்படும் நெல், உமி நீக்கப்பட்டு அரிசியான பிறகு, மண்ணால் ஆன பானையில் நீரில் இடப்பட்டு, காற்றின் துணையால் எரியும் நெருப்பில் வெந்து, அன்னமாகி ஆகாயத்தின் கீழ் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவாகிறது. அந்த அன்னத்தினால் செய்யப்படுவதால்தான், அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. அந்த வகையில் உலக பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில், லிங்கம், 12 அடி உயரமும், ஆவுடையார், 54 அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட பிரமாண்டத் திருமேனியாகத் மூலவரான பெருவுடையார் திகழ்கிறார்.
ஆண்டுதோறும் தஞ்சை பெரிய கோயில் பெருவுடையாருக்கு ஐப்பசி பெளர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறும். அந்தவகையில் இந்தாண்டு இன்று பக்தர்களால், 1,000 கிலோ பச்சரிசி, 500 கிலோ காய்,கனி வழங்கப்பட்டன. பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து தீபாராதனைக் காண்பிக்கப்பட்டது.
அன்னாபிஷேகத்தில் அருள்பாலித்த அர்த்தநாரியும், சித்த நாடியுமான சிவபெருமானை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பிறகு இரவு லிங்கத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கும், கால்நடைகளுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. மீதமுள்ள அன்னம், அருகில் உள்ள கல்லணைக் கால்வாயில் நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவாகப் போடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தானம், அறநிலையத்துறையினர் செய்து இருந்தனர்.