சிறப்பு ஹோமங்கள்... இனிப்பு அலங்காரம்: ஆஷாட நவராத்திரியால் களைகட்டிய தஞ்சை பெரிய கோயில்
மாலை ஆஷாட நவராத்திரி முதல் நாள் விசேஷ அலங்காரமான இனிப்பு அலங்காரத்தில் வாராஹி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலில் இன்று முதல் ஆஷாட நவராத்திரி விழா தொடங்கியது. இதை ஒட்டி காலையில் சிறப்பு ஹோமங்கள் நடந்தன. மாலை இனிப்பு அலங்காரத்தில் வாராஹி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து ஏராளமான வெற்றிகளை குவித்தவர் மாமன்னன் ராஜராஜ சோழன். உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு கட்டிடக்கலையில் வானுயுர தமிழர்களின் பெருமைய உயர்த்தும் வகையில் பெரிய கோயிலை எழுப்பிய மாமன்னன் ராஜராஜ சோழனால் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்றதும், கட்டிடக்கலைக்கு சான்றாய் விளங்கும் இக்கோயிலுக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து சுவாமி தரிசனம் செய்து, கட்டிடக்கலையை பார்த்து வியந்து செல்கின்றனர்.

மாமன்னன் ராஜராஜன் உலகமே கண்டு வியக்கும் வண்ணம் பிரமாண்டமான பெரிய கோயில் கட்டி அங்கு ஓர் மாபெரும் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். அத்தகைய பெருமை பெற்ற தஞ்சாவூரும், வானளாவ எழுந்து நிற்கும் இராஜராஜேச்சரம் எனப்படும் பிரஹதீஸ்வரருக்கான பெரிய கோயிலும் ஒவ்வொரு பகுதியிலும் ஆச்சரியங்களையும் அதிசயங்களை கொண்டுள்ளது என்றால் மிகையில்லை.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா, நவராத்திரி விழா, சதய விழா, ஆஷாட நவராத்திரி விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் விமரிசையாக நடைபெறுவது உண்டு. அதன்படி, இந்த ஆண்டுக்கான 23-வது ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா இன்று (புதன்கிழமை) காலை தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவானது அடுத்த மாதம் (ஜூலை) 5-ந்தேதி வரை நடைபெறுகிறது. முன்னதாக இன்று காலை 8 மணிக்கு மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர், மஹா வாராஹி அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வராஹி அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து, மாலை ஆஷாட நவராத்திரி முதல் நாள் விசேஷ அலங்காரமான இனிப்பு அலங்காரத்தில் வாராஹி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, 2-ம் நாளாள நாளை (வியாழக்கிழமை) மஞ்சள் அலங்காரமும், 27-ந்தேதி குங்கும அலங்காரமும், 28-ந்தேதி சந்தன அலங்காரமும், 29-ந் தேதி தேங்காய்ப்பூ அலங்காரமும், 30-ந்தேதி மாதுளை அலங்காரமும் அம்மனுக்கு செய்யப்படுகிறது.
முறையே ஜூலை 1-ந்தேதி நவதானிய அலங்காரத்திலும், 2-ந்தேதி வெண்ணெய் அலங்காரத்திலும், 3-ந்தேதி கனிவகை அலங்காரத்திலும், 4-ந்தேதி காய்கறி அலங்காரத்திலும், 5-ந்தேதி புஷ்ப அலங்காரத்திலும் வாராஹி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். அன்றைய தினம் மாலை வாணவேடிக்கையுடன் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் வாராஹி அம்மன் எழுந்தருளி 4 ராஜவீதிகளில் வீதிஉலா காட்சிகளும் நடைபெறுகிறது. 11 நாட்கள் நடக்கும் இந்த ஆஷாட நவராத்திரி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள்.
விழா நாட்களில் தினமும் மாலையில் இசை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் சத்தியராஜ், கண்காணிப்பாளர் ரவி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.





















