தஞ்சை பெரியகோயிலில் தொடங்கிய மாமன்னன் ராஜராஜசோழனின் 1038ம் ஆண்டு சதய விழா
சைவம், வைணவம், சமணம், பௌத்தம் என நான்கு சமயங்களையும் தன்னகத்தே கொண்டு நல்லாட்சி புரிந்தவர் ராஜராஜ சோழன்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோயிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1038ம் ஆண்டு சதய விழா இன்று காலை தொடங்கியது.
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டியவர் மாமன்னன் ராஜராஜசோழன். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது பெரிய கோயில் என்றால் மிகையில்லை. ராஜ ராஜ சோழனின் பிறந்தநாளை சதயவிழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர். தஞ்சை பெரிய கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா ஐப்பசி மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது.
விழாவுக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்து பேசியதாவது: இம்மண்ணின் பெருமையை உலகறியச் செய்தவர் மாமன்னன் ராஜராஜ சோழன். மன்னராட்சியை மக்களாட்சியாக மாற்றி நடைமுறைப்படுத்தினார். சோழ பேரரசு நிர்வாகத்தில் பல்வேறு புதுமைகளையும், புத்தெழுச்சியையும் தோற்றுவித்தார்.
.
சிவபாத சேகரன், திருமுறை கண்ட சோழன், ஜெகநாதன் என பல சிறப்புப் பெயர்களுடன் அழியா புகழ் கொண்டுள்ளார் மாமன்னன் ராஜராஜ சோழன். இக்கோயில் ஆன்மீகத்துக்கு மட்டுமல்லாமல், நமது கட்டடக்கலை, கலாசாரம், பண்பாடு மற்றும் நாகரீகத்தின் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. நடப்பாண்டு சதய விழா அரசு விழாவாக முதல்வரின் வழிகாட்டுதலில் சிறப்பாக நடக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து சூரியனார்கோவில் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் பேசுகையில், சைவம், வைணவம், சமணம், பௌத்தம் என நான்கு சமயங்களையும் தன்னகத்தே கொண்டு நல்லாட்சி புரிந்தவர் ராஜராஜ சோழன். தஞ்சைத் தரணியில் ஆயிரக்கணக்கான கோயில்களைக் கட்டி ஆகமங்களையும், வேதங்களையும், திருமுறைகளையும், சித்தாந்த சாஸ்திரங்களையும், புராணங்களையும் வழிநடத்த பெரும் உதவி செய்தவர். அவருக்கு விழா எடுப்பது மிகவும் சிறப்புக்குரியது.
சோழ நாட்டை சோறுடைத்து எனக் கூறுவர். சோறு என்பது அறிவு திறன் சார்ந்தது என்கிற பொருளை உள்ளடக்கியதாக ராஜராஜ சோழனின் ஆட்சி இருந்தது. ராஜராஜசோழன் பிறந்த மண்ணாகிய உடையாளூரில் மணிமண்டபம் அமைப்பதற்கு மக்களும், அரசும் முன் வந்து உதவிகள் செய்ய வேண்டும் என்றார்.
முன்னாள் எம்.எல்ஏ., எம். ராமச்சந்திரன் பேசினார். மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, சதய விழாக் குழுத் துணைத் தலைவர் மேத்தா, கோட்டாட்சியர் இலக்கியா, அறநிலையத் துறை இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சதய விழாக் குழுத் தலைவர் து. செல்வம் வரவேற்றார். அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா நன்றி கூறினார்.
விழாவில் கருத்தரங்கம், திருமுறைப் பண்ணிசை, நாத சங்கமம், திருமுறை இசை, கவியரங்கம் போன்றவை நடந்தன. நாளை காலை மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல், 8 மணிக்கு திருமுறை வீதி உலா, பெருவுடையார், பெரியநாயகிக்கு பேரபிஷேகம், மதியம் 1.40 மணிக்கு பெருந்தீப வழிபாடு, நடன நிகழ்ச்சி, மாலை நாட்டியாஞ்சலி, நாத சங்கமம், இரவு சுகிசிவத்தின் பட்டிமன்றம் போன்றவை நடக்கிறது.