Thiruvannamalai: சிவ பக்தர்களே.. செப்டம்பரில் பெளர்ணமி எப்போது? கிரிவலம் எப்போது போகலாம்?
திருவண்ணாமலையில் செப்டம்பர் மாதத்தில் பெளர்ணமி நாள் எப்போது வருகிறது? என்றும் கிரிவலம் எப்போது செல்ல வேண்டும்? என்றும் கீழே விரிவாக காணலாம்.

ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி நன்னாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது பக்தர்களின் வழக்கம் ஆகும். சிவபெருமானுக்கு மிகவும் உகந்த மாதங்களில் ஒன்று ஆவணி மாதம்.
இந்த ஆவணி மாதத்தில் சிவபெருமானை வணங்கினால் நன்மைகள் பயக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். அந்த வகையில் இந்த ஆவணி மாதம் நடக்கும் செப்டம்பர் மாதத்தில் பெளர்ணமி எப்பாேது வருகிறது? கிரிவலம் எப்போது செல்லலாம்? என்று கீழே விரிவாக காணலாம்.
பெளர்ணமி எப்போது?
இந்த செப்டம்பர் மாதத்தில் வரும் 7ம் தேதி பெளர்ணமி வருகிறது. 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகும். செப்டம்பர் 6ம் தேதி நள்ளிரவு 1.49 மணிக்கு இந்த பெளர்ணமி திதி தொடங்குகிறது. அந்த திதி செப்டம்பர் 7ம் தேதி இரவு 12.32 மணி வரை நீடிக்கிறது. சூரியோதய கணக்கீட்டின்படி, செப்டம்பர் 7ம் தேதி சூரிய உதயத்தில் பெளர்ணமி திதி இருப்பதால் 7ம் தேதி பெளர்ணமி நாள் ஆகும்.
கிரிவலம் எப்போது செல்லலாம்?
இதனால், செப்டம்பர் 7ம் தேதி நள்ளிரவு 1.41 மணி முதல் தொடங்கி செப்டம்பர் 7ம் தேதி இரவு 11.38 மணி வரை கிரிவலம் செல்லலாம். திருவண்ணாமலையில் இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் சென்றால் நன்மைகள் பயக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்த ஆவணி மாத பெளர்ணமி நன்னாளில் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிரிவலம் செல்வதால் கூடுதல் நன்மை உண்டாகும். ஏனென்றால், இந்த பெளர்ணமி திதியும், சதய நட்சத்திரமும் சேர்ந்து வருகிறது. சதயம் என்றால் மிருத்யுஞ்ஜேஸ்வரர் என்று பொருள் ஆகும். மிருத்யுஞ்ஜய என்றால் அது சிவபெருமானின் ஒரு அவதாரம் ஆகும். மிருத்யுஞ்ஜய என்பதற்கு மரணத்தை வென்றவர் என்பது பொருள் ஆகும். இந்த நன்னாளில் சதய நட்சத்திரத்தினர் சிவபெருமானை வணங்கி கிரிவலம் சென்றால் நன்மை அடைவார்கள்.
குவியும் ஆந்திர பக்தர்கள்:
சமீபகாலமாக திருவண்ணாமலையில் தமிழக பக்தர்கள் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா பக்தர்கள் அதிகளவு குவிந்து வருகின்றனர். இதனால், கிரிவல நன்னாளில் அவர்கள் பல்லாயிரக்கணக்கில் குவிவார்கள் என்று கருதப்படுகிறது. திருவண்ணாமலையில் கிரிவல நன்னாளில் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் குவிவார்கள் என்பதால் கோயிலிலும், கிரிவல பாதையிலும் ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை கிரிவல பாதை சுமார் 14 கிமீட்டர் ஆகும். இந்த 14 கி.மீட்டரில் சிவபெருமான் அஷ்ட லிங்கமாக காட்சி தருகிறார். இந்த அஷ்ட லிங்கத்தையும் சிவ பக்தர்கள் கிரிவலத்தின்போது சென்று வணங்குகிறார்கள்.

கிரிவல பாதையில் பார்வதி தேவி சிவபெருமானை வணங்கியதை குறிப்பிடும் கோயிலும் உள்ளது. மேலும், கிரிவல பாதையில் அடி அண்ணாமலையார் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்குச் சென்றும் பக்தர்கள் சிவபெருமானை வணங்குகிறார்கள்.
கிரிவல நன்னாளில் கிரிவல பாதை முழுவதிலும் சிவ பக்தர்களுக்காக சிறப்பு அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருக்கும். வெளிநாட்டு பக்தர்கள் பலரும் கிரிவலம் வருகின்றனர். அவர்கள் திருவண்ணாமலை உண்ணாமலையாரையும் வணங்குகின்றனர்.




















