Aadi Festival 2023: புகழ்பெற்ற சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோயில்.. விமர்சையாக நடந்த பூச்சாட்டு நிகழ்ச்சி..!
பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்த பத்து டன் மலர்களைக் கொண்டு கோட்டை மாரியம்மனுக்கு பூச்சாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் ஆடி பண்டிகை என்பது மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களில் ஆடிப் பண்டிகை தொடக்கமாக அம்மனுக்கு பூச்சாட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கோட்டை மாரியம்மன் திருக்கோவில் சுற்றியுள்ள அனைத்து மாரியம்மன் கோவிலுக்கும் பெரிய மாரியம்மனாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் பூச்சாட்டு நிகழ்ச்சி விமர்சியாக நடைபெற்றது. கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு. பின்னர் பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்த பத்து டன் மலர்களைக் கொண்டு பூச்சாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வரிசையில் நின்று கோட்டை மாரியம்மனுக்கு தாங்கள் கொண்டு வந்த மலர்களால் அபிஷேகம் செய்தனர். இதன்பின் வருகின்ற 07 ஆம் தேதி இரவு சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பின்னர் 09, 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் விழாவில் முக்கிய நிகழ்வாக பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் மற்றும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. தொடர்ந்து 15 ஆம் தேதி அன்று பால்குட ஊர்வலம் மற்றும் மகா அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறும்.
இந்த மாதம் முழுவதும் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் திருக்கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படும். அம்மாபேட்டையில் உள்ள அருள்மிகு பலபட்டறை மாரியம்மன் திருக்கோவிலில் கோவில் முழுவதும் பூக்கள் மற்றும் பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பலபட்டறை மாரியம்மன் திருக்கோவிலுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரு வி க சாலை, குமரகிரி சாலை, கூச்சிக்கள் முனியப்பன் கோவில் வழியாகச் சென்று கோவில் வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
இதேபோன்று குகை, செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அம்மன் திருக்கோவில்களிலும் சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து 22 நாட்கள் நடைபெறும் ஆடி பண்டிகை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஆடி இரண்டாம் வாரம் கம்பளி நடுவது, மூன்றாம் வாரம் பூ கரகம் எடுப்பது, அலகு குத்துதல், பொங்கல் வைப்பது, வண்டி வேடிக்கை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களில் பசம்பாவிதங்களை தடுக்க கோவில்களில் சிசிடிவி பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பாதுகாப்பு பணியில் 1000 கணக்கான காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.