Patteeswaram Temple: எடுத்த காரியம் வெற்றியை அடைய பட்டீஸ்வரம் கோயில் இருக்கே!!!
குடும்ப பிரச்னையில் பிரிந்து போன தம்பதி மீண்டும் இணைய திருவலஞ்சுழி செல்ல வேண்டும்.
தஞ்சாவூர்: கோயில்கள் அனைத்தும் ஏதாவது ஒரு சிறப்பை பெற்று இருக்கும். அந்த வகையில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள பகுதி கோயில்களின் சிறப்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டம் முழுவதும் திரும்பும் இடமெல்லாம் கோயில்கள்தான். காரணம் அனைத்து ஊர்களிலும் பிரபலமாக, பக்தர்கள் தேடி வந்து தரிசனம் செய்யும் கோயில்கள் ஏராளமாக உள்ளன. அந்த வகையில் சில கோயில்கள் எதற்காக என்று பார்ப்போம்.
கருத்தரிக்க வேண்டுவோர் கருவளர்ச்சேரிக்கு செல்ல வேண்டும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும் பாக்கியம் உண்டாகும். கருத்தரித்த பின் அது நன்கு வளர்ந்து சுகப்பிரசவம் கிடைக்க வேண்டுவோர் திருக்கருக்காவூர் செல்ல வேண்டும்.
யாரெல்லாம் நோயில்லா வாழ்வு வேண்டும் என நினைக்கிறார்களோ அவர்கள் செல்ல வேண்டிய கோயில் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயில். இங்கு வழிபட்டால் நோய் நொடிகள் தீண்டாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஞானம் பெற சுவாமிமலை கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும். படிக்கும் குழந்தைகள் கல்வி, கலைகளில் வளர்ச்சி பெற்று வர கூத்தனூர் சென்று வழிபட வேண்டும்.
எடுத்த காரியம் வெற்றியை அடைய, மனதைரியம் கிடைக்கப் பெற பட்டீஸ்வரம் சென்று வழிபட வேண்டும். உயர் பதவி வேண்டும் என முயற்சி செய்பவர்கள் கும்பகோணம் பிரம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டால் போதும். நல்ல வழி பிறக்கும்.
செல்வ, செழிப்பு பெற ஒப்பிலியப்பன் கோயில், கடன் சுமை குறைய திருச்சேறை சரபரமேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்ய வேண்டும். இழந்த செல்வம் திரும்ப கிடைக்க திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலுக்கு செல்ல வேண்டும்.
பெண்கள் ருது ஆவதற்கும், ருது பிரச்சனைகள் முழுக்க தீரவும் கும்பகோணம் காசி விஸ்வநாதர் (நவ கன்னிகை) கோயிலில் வழிபட வேண்டும். திருமணத்தடைகள் நீங்க திருமணஞ்சேரி, நல்ல கணவனை பெற கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் மங்களாம்பிகை கோயிலுக்கு செல்ல வேண்டும்.
குடும்ப பிரச்னையில் பிரிந்து போன தம்பதி மீண்டும் இணைய திருவலஞ்சுழி செல்ல வேண்டும். இப்படி கோயில்கள் அனைத்தும் பக்தர்களை நல்வழிப்படுத்துகின்றன. அவர்களின் வேண்டுதல் நிறைவேறும் இடமாக உள்ளது.