Melmalayanur Masi Festival: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசிப்பெருவிழா எப்போது தொடக்கம்? - விழா விவரம் இதோ உங்களுக்காக
Melmalayanur Masi Festival 2025: வரும் 26ம் தேதி கோலாகலமாக தொடங்கும் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசி பெருவிழா.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசிப்பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டுக்கான விழா வருகிற 26-ந்தேதி (புதன்கிழமை) அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்று காலையில் கோபால விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகளும். இரவு 9 மணிக்கு கொடியேற்றம், அதன் பிறகு சக்தி கரகமும் நடைபெறும். 27-ந்தேதி, காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் மயானக்கொள்ளை விழாவும், இரவு ஆண் பூதவாகனத்தில் சாமி வீதி உலாவும்,
28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலையில் தங்கநிற மரப் பல்லக்கிலும், இரவு பெண்பூத வாகனத்திலும், 01-ந்தேதி (சனிக்கிழமை) காலையில் தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு சிம்ம வாகனத்தில் சாமி வீதி உலாவும் நடக்கிறது. 02-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணிக்கு மேல் தீமிதி விழாவும், இரவு அன்ன வாகனத்தில் அம்மன் வீதி உலா நடக்கிறது. 03-ந் தேதி (திங்கட்கிழமை) காலையில் தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு யானை வாகனத்தில் சாமி வீதி உலாவும், 04-ந் தேதி (செவ்வாய்கிழமை) பிற்பகல் 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் தேரோட்டமும் நடைபெற உள்ளது.
05-ந் தேதி (புதன்கிழமை) காலையில் தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு குதிரை வாகனத்திலும், 06-ந் தேதி (வியாழக்கிழமை) காலையில் தங்க நிற மரப் பல்லக்கிலும் இரவு சத்தாபரணம் என்னும் புஷ்ப பல்லக்கில் சாமி வீதிஉலாவும், 07-ந் தேதி (வெள்ளிக் கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தீர்த்தவாரி மண்டகப்படியும், இரவு தெப்பல் உற்சவமும் நடக்கிறது. 8-ந் தேதி (சனிக்கிழமை) காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மாலையில் சாமி வீதி உலா, இரவு கும்பப் படையல், காப்புகளைதல், கொடியிறக்க விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் பூசாரி, பூசாரி தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
மேல்மலையனூர் அங்காளம்மன் வரலாறு
ஒரு முறை பிரம்மாவின் மனைவியான சரஸ்வதி, பார்வதி மற்றும் சிவபெருமானுக்கு சாபமிட, சாப விமோசனம் பெற பார்வதி விஷ்ணுவை வேண்டிக் கொள்ள அவரும் அவளை மேல்மலையனூரில் உள்ள நதிக் கரையில் சென்று ஒரு ஐந்து தலை நாகமாக புற்றில் இருந்தால் சிவ பெருமான் அங்கு வந்து அவளுக்கு சாப விமோசனம் தந்து மீண்டும் மணப்பார் என்றார்.
அவர் கூறியது போலவே அங்கு வந்த பார்வதி வெகு காலம் சிவனுக்காக காத்திருந்தாள். சிவனும் மேல்மலையனூரில் இருந்த நதியைத் தாண்டி வந்தபோது அகோர உருவில் பாம்பாக இருந்த பார்வதியும் மேலும் சிவபெருமானும் சாப விமோசனம் பெற்றனர் .
அதே நேரத்தில் தான் மேல்மலையனூரில் அதே அதி பயங்கர உருவுடன் இருந்தவாறு அங்கு வந்து அவளை வேண்டித் துதிக்கும் பக்தர்கள் சாப விமோசனம் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் தீமைகளை அழித்து, பக்தர்களுக்கு ஏவப்படும் பில்லி சூனிய தீமைகளை ஒழித்து, அவர்கள் நலனைக் காத்தருளிக் கொண்டு இருப்பேன் எனவும் கூறிவிட்டு மறைந்தார். அதனால் பார்வதி அதே இடத்தில் பூமியில் புற்றில் பாம்பாக உள்ளதாக ஒரு ஐதீகமும் நம்பிக்கையும் உள்ளது.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் செல்வது எப்படி?
மேல்மலையனூர் திருவண்ணாமலையில் இருந்து கிழக்கே 35 கிலோ மீட்டர் தூரத்திலும், செஞ்சிக்கு வடக்கே 20 கிலோ மீட்டர் தூரத்திலும்,சென்னையில் இருந்து தென்மேற்கில் திண்டிவனம் வழியாக 170 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.மேல்மலையனூரில் இருந்து-சென்னைக்கு செஞ்சி திண்டிவனம் வழியாகவும், சேத்துப்பட்டு, வந்தவாசி வழியாகவும் அடிக்கடி செல்ல பஸ் வசதி உள்ளது. மற்றும் மேல்மலையனூர் - செஞ்சி, திண்டிவனம், பாண்டிச்சரிக்கும் மேல்மலையனூர் - விழுப்புரம் கடலூர் சிதம்பரத்திற்கும், மேல்மலையனூர் -ஆரணி வேலூர் செல்லவும், மேல்மலையனூர் - அவலூர்பேட்டை வழியாக, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, கோவை செல்லவும்,மேல்மலையனூர் - திருவண்ணாமலை வழியாக பெங்களூர் செல்லவும் வசதி உள்ளது.
பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில், திருவிழா காலங்களில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. செஞ்சி , திண்டிவனம், பாண்டிச்சேரி, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், ஆரணி, சேத்துப்பட்டு, பெங்களூர் ஆகிய ஊர்களில் இருந்து மேல்மலையனூருக்கு நேரடியாக செல்ல சிறப்பு பேருந்து வசதி உள்ளது. மேலும் பலதரப்பட்ட ஊர்களில் இருந்து வருபவர்கள் இந்த ஊர்களுக்கு வந்து செஞ்சி, சேத்துப்பட்டு, வளத்தி வழியாக மேல்மலையனூர் வந்தடையலாம்.

