சீர்காழி கீழத்தெரு பத்ரகாளி அம்மன் கோயில் தீமிதி திருவிழா- தீமித்த பச்சை காளி, பவளக்காளி!
சீர்காழி கீழத்தெரு பத்ரகாளி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு 300க்கும் மேற்பட்டோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் காளிபுரம் என்ற புராண பெயர் உடைய சீர்காழியில் திரும்பும் திசையெல்லாம் காளியம்மன் கோயில்கள் இருப்பது சிறப்பு. இதில் பிடாரி தெற்கு வீதியில் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் தீமிதி உற்சவம் பத்து நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம்.
இவ்வாண்டு தீமிதி உற்சவம் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி காப்பு கட்டி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8ம் நாள் உற்சவமான தீமிதி திருவிழா நேற்றிரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் அய்யனார் கோவிலில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு காவடி எடுத்து நான்கு வீதிகளையும் வலம் வந்தனர்.
Erode East Election: விஷயம் தெரியாமல் பேசும் தலைவர்கள்.. பொன்னையன்லாம்..? - அண்ணமலை விளக்கம்
பின்னர் பக்தர்கள் எடுத்து வந்த பாலைக் கொண்டு பத்ரகாளியம்மனுக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்பாளுக்கு பக்தர்கள் மாவிளக்கு போட்டு சிறப்பு வழிபாடு செய்தனர். தீமிதி திருவிழாவை முன்னிட்டு கீழத்தெரு பெப்சி பாய்ஸ் சார்பாக 500க்கும் மேற்பட்டவர்களுக்கு பட்டாசு வெடித்து 4 -ம் ஆண்டாக தொடர்ந்து அன்னதானங்கள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பச்சை காளி , பவள காளி ஆட்டங்களுடன் சக்தி கரம் முன்னே செல்ல 300க்கும் மேற்பட்ட விரதம் இருந்த பக்தர்கள் கோயிலில் முன் இருந்த தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.