மயூரநாதர் கோயில் கும்பாபிஷேகம் - காவிரி உள்ளிட்ட 9 நதிகளின் புனித நீர் அடங்கிய கடங்கலின் யாகசாலை பிரவேசம்
மயிலாடுதுறை மயூரநாதர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காவிரி உள்ளிட்ட 9 நதிகளின் புனித நீர் யானையின் மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு யாகசாலை பிரவேச நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. அம்மன் மயில் உருவில் இறைவனை பூஜித்ததாக புராண வரலாறு கூறும் இந்த ஆலயம் சமயகுரவர்களால் பாடல் பெற்ற சிறப்பு வாய்ந்ததாகும்.
இவ்வாலயத்தின் மகா கும்பாபிஷேகம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பர் மூன்றாம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, 123 யாக குண்டங்களுடன் பிரம்மாண்டமான யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக புனித நீர் எடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மயிலாடுதுறை புகழ்பெற்ற காவிரி துலா கட்ட ரிஷப தீர்த்தத்தில், வேதியர்கள் மந்திரம் முழங்க கடங்களில் புனித நீர் நிரப்பப்படது.
மேலும், கங்கை, யமுனா, சரஸ்வதி, சிந்து, கோதாவரி, நர்மதை, துங்கபத்ரா, மனோன்மனி ஆகிய ஆறுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் 9 கடங்களில் யானை மீது ஏற்றி ஊர்வலமாக ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டது. ஒன்பது தவில், ஒன்பது நாதஸ்வரங்கள் கொண்ட மல்லாரி இசை கச்சேரி முழங்க புனித ஊர்வலம் காவிரியில் இருந்து மயூரநாதர் ஆலயத்திற்கு புறப்பட்டது.
ஊர்வலத்தை திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ரிஷப கொடியசைத்து துவக்கி வைத்தார். குதிரை, ஒட்டகம் பசுமாடு உள்ளிட்ட மங்கள சின்னங்கள் முன்னே செல்ல பட்டாசு வெடி முழக்கத்துடன், முரசு உள்ளிட்ட இசையுடன் கோலகலமாக ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலை பிரவேச நிகழ்ச்சியும் சுவாமி மற்றும் அம்பாளுக்கு கலச அபிஷேகமும் நடைபெற்றது.
இன்று மாலை முதல்கால யாகசாலை பூஜைகள் துவங்கி மூன்றாம் தேதி வரை 8 கால யாகசாலை பூஜைகள் நடைபெறவுள்ளது. இதில் இன்றிலிருந்து தொடர்ந்து 82 மணி நேரம் 108 ஓதுவார்களைக் கொண்டு அகண்ட பாராயணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக ஆதீன குருமகா சன்னிதானம் தெரிவித்தார்.