கார்த்திகை பௌர்ணமி: சீர்காழி சட்டைநாதர் கோயிலில் 'சிவாய நம' மந்திரம் முழங்க பக்தி பரவசத்தில் பக்தர்கள் கிரிவலம்.
சீர்காழி சட்டைநாதர் கோயிலில் கார்த்திகை மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசம் பொங்க சிவாய நம ஓம் என்ற மந்திரங்கள் முழங்க கோயிலை சுற்றி கிரிவலம் சென்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் அதன் தொன்மை, கட்டிடக்கலை மற்றும் புராணப் பின்னணி காரணமாக இந்து சமயத்தில் தனிச்சிறப்பிடம் பெற்று விளங்குகிறது. இந்நிலையில் கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு வெகுவிமரிசையாக நடைபெற்ற கிரிவலத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
மூன்று நிலைகளில் அருளும் இறைவன்
இக்கோயில் 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததுடன், தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14-வது தலமாக விளங்குகிறது. இங்குள்ள இறைவன் சுயம்பு லிங்கமாக பிரம்மபுரீஸ்வரர் வடிவில் அருள்பாலிக்கிறார்.
இத்தலத்தின் தனித்துவமே, சிவபெருமான் பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் அருள்பாலிப்பதுதான். ஒவ்வொரு நிலையும் பக்தர்களுக்கு ஒரு தனிப்பட்ட பலனைக் கொடுக்கிறது.
* பிரம்மபுரீஸ்வரர்: முதல் நிலையில் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார்.
* தோனியப்பர்: பிரளய காலத்தில் சிவபெருமான் தோணியில் வந்ததாக ஐதீகம் உள்ளதால், மலைமீது உமாமகேஸ்வரராகக் காட்சியளிக்கிறார்.
* சட்டைநாதர்: இக்கோயிலின் மூலவர் அல்லாத, ஆனால் மிகவும் சக்தி வாய்ந்தவராக வழிபடப்படும் இவர், சட்டச் சிக்கல்கள், எதிரிகள் தொல்லைகள், பில்லி, சூனியம் போன்ற தீவினைகளை நீக்கிப் பாதுகாப்பு அளிப்பவராக நம்பப்படுகிறார்.
திருஞானசம்பந்தர் வரலாறு
மேலும், சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து, இங்குள்ள அம்பாளிடம் ஞானப்பால் அருந்திய திருஞானசம்பந்தர் தனது மூன்றாவது வயதில் 'தோடுடைய செவியன்' என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளியது இந்தத் தலத்தில்தான். அவருக்கு இங்கு தனி சன்னதியும் உள்ளது.
22 தீர்த்தங்கள் மற்றும் அஷ்ட பைரவர் சன்னதி
இக்கோயிலில் பிரம்ம தீர்த்தம் உட்பட மொத்தம் 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இத்தனை தீர்த்தங்கள் கொண்ட சில சிவாலயங்களில் இதுவும் ஒன்று.
அனைத்துச் சிறப்புகளுக்கும் மணிமகுடமாக, இத்தலத்தில் அஷ்ட பைரவர்கள் (எட்டு பைரவர்கள்) காசிக்கு இணையாக ஒரே ஸ்தலத்தில் அருள்பாலிக்கின்றனர். இதனால், இந்தத் தலம் பைரவ வழிபாட்டிற்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக, சொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செல்வம் மற்றும் செழிப்பிற்கு மிகவும் புகழ்பெற்றது.
பௌர்ணமி கிரிவலம்
இத்தகைய மகத்தான சிறப்புகளைக் கொண்ட இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கிரிவலத்திற்கு பிரசித்தி பெற்ற மாதமான கார்த்திகை பௌர்ணமியை முன்னிட்டு இன்று டிசம்பர் 04 -ம் தேதி கிரிவலம் நடைபெற்றது. கிழக்கு ராஜகோபுரத்தில் இருந்து தொடங்கிய இந்த பக்திப் பயணம், கீழ வீதி, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி என நான்கு வீதிகளையும் சுற்றி மீண்டும் கோயிலை வந்தடைந்தது.
கிரிவலத்தின்போது பக்தர்கள் வழியில் உள்ள ஆபத்து காத்த விநாயகர், சொர்ணாகர்ஷன பைரவர் சன்னதிகள் உட்பட அனைத்துக் கோயில்களிலும் சூடம் ஏற்றி வழிபட்டனர். வழிநெடுகிலும் பக்தர்கள் "சிவாய நம ஓம்" என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே சென்றது, பக்திப் பரவசத்தை ஏற்படுத்தியது.
சட்டச் சிக்கல்கள், எதிரிகள் தொல்லைகள் நீங்க சட்டைநாதர் மற்றும் அஷ்ட பைரவர்களை வேண்டி, நாள்தோறும் அரசியல் பிரமுகர்கள், உயர் அதிகாரிகள் உட்படப் பொதுமக்களும் இக்கோயிலில் திரளாக வந்து வழிபாடு செய்து செல்வது குறிப்பிடத்தக்கது.






















