Masi Magam 2024: ஸ்ரீ முத்தியாஜலஈஸ்வரர் கோயில் மாசிமக திருவிழா; பெருமுக்கல் மலையில் குவிந்த பக்தர்கள்
புராதன காலத்தில் `சஞ்சீவி மலை' என்று நம் மகரிஷிகளால் போற்றி வணங்கப்பட்ட இந்தத் தலத்தில் உள்ள மலையின் மீது முக்யாசலேஸ்வரா் திருக்கோயில் அமைந்திருக்கிறது.
திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் மலை மீதுள்ள ஸ்ரீ முத்தியாஜலஈஸ்வரர் கோயிலில் மாசிமக திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது. பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும். தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுவர். இந்த நிலையில் திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் மலை மீதுள்ள ஸ்ரீ முத்தியாஜலஈஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது, ஸ்ரீ முத்தியாஜலஈஸ்வரர் காலை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது, தொடந்து சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வரிசையில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பிரம்மதேசம் காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சஞ்சீவி மலை வரலாறு :
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் சாலையில் அமைந்திருக்கும் அழகிய ஊர் பெருமுக்கல். சோழா் கால வரலாற்றுப் பக்கங்களின் பொக்கிஷமாகத் திகழும் கல்வெட்டுகள் நிறைந்த அற்புதத் தலம் ஆகும், புராதன காலத்தில் `சஞ்சீவி மலை' என்று நம் மகரிஷிகளால் போற்றி வணங்கப்பட்ட இந்தத் தலத்தில் உள்ள மலையின் மீது முக்யாசலேஸ்வரா் திருக்கோயில் அமைந்திருக்க, அடிவாரத்தில் தாழக் கோயிலான காமாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. திருக்காமகோட்ட நாச்சியாா் கோயில் என்று கல்வெட்டுகள் குறிப்பிடும் இந்தக் கோயில், சிதிலமடைந்த நிலையில் திகழ்கிறது. எனினும் முற்காலச் சோழா் காலம் முதல் தமிழக வரலாற்றினை அறிந்துகொள்ள அரிய ஆவணங்களாக, இக்கோயிலின் கல்வெட்டுத் தொடா்கள் அமைந்துள்ளன. 60 கல்வெட்டுகள் இங்குள்ளனவாம். இவற்றின் மூலம் சோழா், பாண்டியா், காடவராயா், சம்புவரையா் மற்றும் விஜயநகர மன்னா்களின் ஆட்சிக் காலத்தில் திருக் கோயிலுக்கு அளிக்கப்பட்ட கொடைகள் குறித்த செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது.
இங்குள்ள கல்வெட்டுகளில் மிகவும் பழைமையானவை உத்தம சோழன் காலத்துக் கல்வெட்டுகளாகும். இவற்றையடுத்து முதலாம் குலோத்துங்கச் சோழன் மற்றும் விக்கிரமச் சோழன் காலத்துக் கல்வெட்டுகளும் உள்ளன. விக்கிரமச் சோழனின் காலத்தில்தான் மலைமீது உள்ள திருக்கோயில் புனரமைக்கப்பட்டுக் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிக்காக ஏராளமான கைங்கா்யங்கள் செய்த காக்கு நாயகனின் திருவுருவச் சிலையும், கோயிலின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட பெரியான் திருவனான சிறுத்தொண்டனின் சிலையும், திருக்கோயிலின் அா்ச்சகரான திருச்சிற்றம்பலமுடையான் அன்பா்க்கரசு பட்டனின் திருவுருவச்சிலையும் இங்கே அமைத்திருப்பது அற்புதம் ஆகும்.
இவ்வூரானது கல்வெட்டுகளில் ஜெயங் கொண்ட சோழ மண்டலத்து ஒய்மா நாடான விசய இராசேந்திர வளநாட்டு பெருமுக்கிலான கங்கைகொண்ட நல்லூா் என்று குறிப்பிடப்படுகிறது. முதலாம் ராசேந்திரன் காலத்தில் இவ்வூர் கங்கைகொண்ட நல்லூர் என்று பெயா் மாற்றப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் சரித்திர ஆய்வாளர்கள். பெருமுக்கலில் அமைந்துள்ள மலையானது திருமலை என்றும் முக்கியசைலம் என்றும் வணங்கப்பட்டுள்ளது. மலையின் மீது அருளும் ஈசனுக்கு ஸ்ரீமுக்தியாலீஸ்வரா், ஸ்ரீதிருவான்மிகை ஈஸ்வரமுடையாா் ஸ்ரீ பெருமுக்கல் உடையாா் என்று பல திருப் பெயர்கள் வழங்கப்படுகின்றன.