5 தலைமுறையாக தொடரும் பாரம்பரியம்.. மார்கழியில் மகாபலிபுரம் சிறப்பு என்ன ?
Margazhi : மாமல்லபுரத்தில் நவநீத கிருஷ்ணன் கோயிலில் 5 தலைமுறையாக, பழமை மாறாமல் நடைபெற்று வரும் மார்கழி பஜனை.
Margazhi Month 2024 - மார்கழி மாதம்: மார்கழி மாதம் என்றாலே நமக்கு நினைவு வருவது குளிர் மற்றும் பனிதான். அதேபோன்று மார்கழி மாதம் பல்வேறு கோயில் காலை மற்றும் மாலை வேலைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவதும் வழக்கமாக உள்ளது. மார்கழி மாதம் வந்தாலே பல்வேறு கோவில்களில் காலை வேலையில் பஜனை நடைபெறுவதும் வழக்கமான ஒன்றாக உள்ளது.
நவநீதகிருஷ்ணன் கோயில்
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள நவநீதகிருஷ்ணன் கோயில் 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிருஷ்ணர் கோயிலாகும். இந்த ஆலயத்தில் குடிகொண்ட கிருஷ்ணர் பல்லவர் மன்னர்கள் காலத்தில் அங்குள்ள மலை பாறைக்குன்றில் வெண்ணையை உருட்டி, திரட்டி வைத்ததாகவும், அதுவே பிற்காலத்தில் வெண்ணை உருண்டை கல் என அழைக்கப்பட்டு, தற்போது பார்வையாளர்களுக்கு அவை காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மார்கழி மாதத்தை முன்னிட்டு 30 நாட்கள் வரை இக்கோயில் சார்பில் பஜனை நடைபெறுகிறது. காலை கடும் குளிரில் காலை 6 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்ட மார்கழி பஜனை முக்கிய வீதிகள் வழியாக சென்றது. தலசயன பெருமாள் கோயில் மண்டபம், கிருஷ்ணரதம், கணேசரதம், வெண்ணை உருண்டை கல் ஆகிய இடங்களில் நின்றுபஜனை குழுவினர் ஆண்டாள் திருப்பாவை பாசுரங்கள் பாடி கிருஷ்ணரை போற்றி வணங்கினர். அப்போது சுமங்கலி பெண்கள், பக்தர்கள் பஜனை குழுவினர் கொண்டு வந்த அனையா விளக்கில் பூக்கள், சில்லரை காசுகளை காணிக்கையாக போட்டு வழிபாடு செய்தனர். சிலர் அனையா விளக்கில் எண்ணெய் ஊற்றியும் வணங்கினர்.
பஜனையில் கலந்து கொள்ளும் சிறுவர்கள்
சிறுவர்கள் தங்கள் நெற்றியில் நாமம் இட்டு பாரம்பரிய வேட்டி அணிந்து வந்து ஆர்வமாக இந்த பஜனையில் பங்கேற்றதை காண முடிந்தது. அடுத்த தலைமுறைக்கு இதனை கொண்டு செல்லும் வகையில் வைணவ மூத்த பாகவதர்கள் பாடும் ஆண்டாள் திருப்பாவை பாடலுக்கு ஏற்ப மிருதங்கம், ஆர்மோனிய பெட்டி, வெண்களதாளம் போன்ற இசை கருவிகள் மூலம் பக்தர்கள் இசைத்தனர்.
நம் பழமைகள் தற்போது ஒவ்வொன்றாக மறைந்து வருகிறது. ஆனால் மாமல்லபுரத்தில் முன்னோர்கள் விட்டுச்சென்ற பணியை தற்போதும் இடைவிடாமல் பக்தி மனம் கமழும் வகையில் மார்கழி பஜனையை தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் பல இடங்களில் ஒரு தலைமுறையோடு மார்கழி பஜனைகள் காணாமல் போய்விட்டன. இதில் மாமல்லபுரத்தில் இன்றளவும் தொன்றுதொட்டு பழமைமாறாமல் 5 தலைமுறையாக மார்கழி பஜனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மார்கழி மாதம் சிறப்புகள் என்ன ?
இந்து புராண நம்பிக்கையின் அடிப்படையில் தேவர்களுக்கு ஒரு நாள் என்பது, மனிதர்களுக்கு ஒரு வருடம் என நம்பப்படுகிறது. அந்த வகையில் பார்க்கும்போது ஆடி மாதம் முதல் மார்கழி வரை தேவர்களுக்கு இரவு பொழுதாக இருக்கும் எனவும் நம்பிக்கை உள்ளது. பொதுவாக சிறந்த நேரம் என்பது பிரம்ம முகூர்த்தம் கருதப்படுகிறது. அதை வைத்துப் பார்க்கும்போது , மார்கழி மாதம் தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்தமாக இருக்கிறது. எனவே தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்தமாக இருக்கும் இந்த நேரம் என்பது, கடவுளை வழிபடுவதற்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படுகிறது.
காக்கும் கடவுளாக பார்க்கக்கூடிய மகாவிஷ்ணு " மாதங்களில் நான் மார்கழி" என தெரிவித்ததாக கூற்றும் இருக்கிறது. அதனால்தான் விஷ்ணு கோயில்களில் மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும் மாதமாக இருந்து வருகிறது.