Maha Shivaratri 2024: மகா சிவராத்திரி வழிபாட்டால் ராகு, கேது தோஷம் நீங்குமா? பரிகாரம் என்ன?
Maha Shivaratri 2024: மகா சிவராத்திரி தினத்தில் சிவனை எப்படி வழிபட்டால் ராகு - கேது தோஷம் நீங்கும் என்பதை கீழே காணலாம்.
Maha Shivaratri 2024: மகா சிவராத்திரி வரும் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. சிவராத்திரியன்று கோயில்களில் சிறப்பு வழிபாடும், பூஜைகளும் கோயில்களில் நடைபெறும்.
சிவராத்திரியும் - ராகு, கேதுவும்:
இன்று பெரும்பாலான ஜாதகங்களில் இருப்பது ராகு-கேது தோஷம். இந்த தோஷத்தால் ஜாதகருக்கு வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய முக்கியமான நன்மைகள் கிடைக்காமல் போகிறது. நவகிரகங்களில் ராகு கேதுக்கள் தான் மிக சக்தி வாய்ந்தவையாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, ராகு எண்ணற்ற ஆசை உடையவர்.
அதேபோல் கேது எந்த விஷயத்திலும் பற்று இல்லாதவர். இப்படியான நிலையில் உங்கள் ஜாதகத்தில் ராகு கேதுக்கள் அமரும் இடத்தில் உங்களுக்கு கிடைக்கக்கூடிய விஷயத்தில் தடை தாமதங்கள் ஏற்படலாம். இதற்காக பல வழிகளில் பரிகாரங்கள் இருந்தாலும் மகா சிவராத்திரி அன்று சிவனை வழிபடும் அதே சமயத்தில் ராகு கேதுக்களையும் வழிபட்டால் ராகு கேது தோஷங்கள் விலகும்.
ராகு-கேதுக்களின் வலிமை என்ன ?
ஒருவர் ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் ராகு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். மனது நிலையாக ஒரு இடத்தில் இருக்காது. உதாரணத்திற்கு அவர்கள் சிரிக்க ஆரம்பித்தால் அளவற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதே சமயத்தில் அவர்கள் துக்கப்பட ஆரம்பித்தால் 10 பேர் வந்து சமாதானப்படுத்தும் அளவிற்கு அவர்களுடைய துக்கம் நீண்டு கொண்டே போகும். சிறிய விஷயத்தில் தங்களின் உணர்வுகளை அபாரமாக வெளிப்படுத்தக் கூடியவர்கள்.
ஐந்தில் ராகு:
நமக்கு ஒரு காரியம் பிடிக்கவில்லை என்று கூறும்போது சாதாரணமாக சொல்லுவோம். ஆனால் ஐந்தில் ராகு இருப்பவர்கள் ஒரு காரியத்தை பிடிக்கவில்லை என்று சொல்லும் போது, அதை அழுது கொண்டே கூறுவார்கள். இப்படியாக எந்த ஒரு விஷயத்தையும் பெரிதாக காட்டுவது தான் ராகுவின் வேலை. பெரும்பாலும் இவர்களுக்கு புத்திர பாக்கியம் தள்ளிப் போகும். அப்படியே மற்ற கிரக சூழ்நிலையின் காரணமாக புத்திரர்கள் பிறந்தாலும் பெற்றவர்களை விட்டு விட்டு அயல் நாட்டிலும் தூர தேசத்திலும் வசிப்பார்கள்.
இதுவே ஐந்தாம் இடத்தில் கேது இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம். அவர்கள் எந்த ஒரு காரணத்திற்காகவும் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள். நீங்கள் அவர்களை திட்டினாலும் ஓ அப்படியா என்று சாதாரணமாக கடந்து விடுவார்கள். அவர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் பெரிதாக ஒன்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த மாட்டார்கள். ஐந்தாம் இடத்தில் கேது இருப்பவர்களுக்கு 11-ஆம் இடத்தில் ராகு இருக்கும். அப்படி என்றால் பதினொன்றாம் இடம் லாப ஸ்தானம் தங்களுக்கு கிடைக்க கூடிய லாபங்களை தேடி செல்ல ஆரம்பிப்பார்கள். வாழ்க்கையில் எவ்வளவு கொடுத்தாலும் அவர்களுக்கு போதாது என்ற மனநிலை இருக்கும். நான் மேலே சொன்ன காரணங்கள் இரண்டு கிரகங்களை வைத்து மட்டுமே கூறி இருக்கிறேன். ஆனால் ஒரு ஜாதகத்தில் ஒன்பது கிரகங்களுக்கும் பங்கு உண்டு என்பதால் மற்ற கிரகங்களின் வலிமையை வைத்து ராகு கேதுக்களின் வலிமையை தீர்மானம் செய்ய முடியும்.
பரிகாரம் என்ன?
இதற்கு எதிர் மாறாக ராகு கேதுக்கள் உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை கூட செய்யலாம். குறிப்பாக பதினொன்றாம் இடத்தில் இருக்கக்கூடிய ராகு உங்களை உயர்ந்த இடத்திற்கு யாருமே கூட்டி செல்லாத இடத்திற்கு கூட்டிச்செல்லலாம். வரலாற்றில் இடம் பிடிக்கும் ஒரு நபராக கூட பதினொன்றாம் வீட்டில் இருக்கும் ராகு மாற்றிவிடும். ராகு கேதுக்கள் ஜாதகரின் ஏதோ ஒரு இடத்தை நிச்சயமாக தடை பண்ணுவார்கள் அல்லது தாமதம் செய்வார்கள்.
ராகு கேதுக்கள் ஒரு விஷயத்தை கொடுத்து இன்னொரு விஷயத்தை எடுப்பார்கள் இப்படியான ராகு கேதுகளுக்கு பரிகாரம் என்று பார்த்தால் சிவபெருமானின் நாமத்தை உச்சரிப்பவர்களுக்கு ராகு கேதுக்கள் பெரியதாக எந்த பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை. தலையில் பாம்பை சூடி இருக்கும் சிவபெருமானுக்கு ராகு கேதுக்கள் கட்டுப்படுவார்கள்.
சிவராத்திரியில் ராகு கேது பூஜை :
சிவராத்திரி அன்று இரவு அரை வயிற்றுடன் சிவனை நோக்கி பக்தியுடன் தியானத்தில் ஈடுபட வேண்டும். அந்த சமயத்தில் ராகு கேதுக்களின் தோஷ பரிகார நிவர்த்தி பாடல்களை நாம் பாடலாம். மேலும் எலுமிச்சம் பழத்தை இரண்டாக துண்டித்து அதை மேலே பார்த்தார் போல் பிளந்து விளக்கு போன்ற வடிவம் வந்தவுடன் அதில் நல்லெண்ணையை ஊற்றி எலுமிச்சை பழ விளக்கு ஏற்றலாம். சிவராத்திரி அன்று எலுமிச்சை விளக்கை ஏற்றி பூஜையறையில் சிவனை நினைத்து மனம் உருகி தவம் இருந்தால் ராகு கேதுக்களின் தோஷம் முற்றிலுமாக விலகிவிடும்.
சூரியனுடன் ராகு கேதுக்கள் :
ஜாதகத்தில் சூரியனுடன் யாருக்கெல்லாம் ராகு கேதுக்கள் 1,5,9 எனும் ஸ்தானங்களில் இணைந்து இருக்கிறதோ அவர்கள் நிச்சயமாக சிவராத்திரி அன்று விரதம் இருக்க வேண்டும். குறிப்பாக சிவனை நினைத்து தியான கோலத்தில் அமர்ந்தவாறே, கண்களை மூடி பக்தி உடன் வழிபட வேண்டும். இப்படி செய்து வர நிச்சயமாக சூரியனை கவ்விக் கொண்டிருக்கும் ராகு கேதுக்கள் உங்களுக்கு நன்மையே செய்வார்கள். சூரியனுடன் ராகு கேதுக்கள் சேர்ந்து இருந்தால், அவர்கள் சிவன் கோவிலுக்கு நாக பிரதிஷ்டை செய்ய வேண்டும். ராகு கேதுக்களின் விக்கிரகத்தை ஏதாவது ஒரு சிவன் கோவிலில் பிரதிஷ்டை செய்து அதை முக்கியமான நாட்கள் ஆன சிவராத்திரி போன்ற தினத்தில் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டு வர உங்களுக்கு மட்டுமல்ல உங்களுடைய வம்சத்தார் அனைவருக்கும் ராகு கேது தோஷங்கள் விலகும்.