Mayuranathar Temple: சிவபெருமானும், பார்வதி தேவியும் மயில் உருவம் எடுத்த மாயூரநாதர் கோயிலின் சிறப்பும், வரலாறும்
Mayuranathar Temple History in Tamil: மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலின் வரலாறு சிறப்புகளை இக்கட்டுரையில் காண்போம்.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருந்து திருவாரூர், நாகப்பட்டினம் பிரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் கடைசி 38 -வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் ஏராளமானோர் வரலாற்று சிறப்பு மிக்க கோயில் அமைந்த ஆன்மீக மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக, நவ கிரகங்களில், செவ்வாய், புதன், கோது, ஆகிய மூன்று கோயில்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேலும் பல சிவாலயங்களும் இங்கு பிரசித்தி பெற்று விளங்கி வருகிறது. அதில் ஒன்றுதான் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அபயாம்பிகை உடனாகிய மயூரநாதர் ஆலயம். மாயவரம் எனப்படும் மயிலாடுதுறை நகரத்தில் புகழ்பெற்ற ஒரு கோயில் தான் இந்த மாயூரநாதர் கோயில்.
கோயில் வரலாறு:
பார்வதி தேவியின் தந்தை தட்சன் நடத்திய யாகத்துக்கு சிவனை அழைக்காத காரணத்தால் சிவன் பார்வதி தேவியை யாகத்துக்கு செல்ல அனுமதிக்கவில்லை. ஆனால் சிவனின் பேச்சை மீறி யாகத்திற்கு பார்வதி தேவி சென்றுள்ளார். அதனால் சினம் கொண்ட சிவபெருமான், வீரபத்திரர் அவதாரம் எடுத்து யாகத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். மேலும், தன் சொல்லை மீறி யாகத்திற்கு சென்றதால் அம்பாள் பார்வதி தேவியை மயில் வடிவம் எடுக்கும்படி சிவன் சாபம் இட்டார். அதனால் மயிலாக மாறிய அம்பாள் பார்வதி இந்த கோயில் இருக்கும் இடத்திற்கு வந்து சிவனை நோக்கி தவமிருந்தார். சிவனும் இங்கு மயில் வடிவத்தில் வந்து அம்பாளின் தவத்தில் மகிழ்ந்து அவருக்கு கெளரி தாண்டவ தரிசனம் தந்து அம்பாளின் சுயரூபம் பெற அருள் செய்தார். சிவபெருமான் மயில் வடிவத்தில் வந்து அருள் செய்ததால் இவ்வாலயத்தில் உள்ள சிவன் மாயூரநாதர் என பெயர் பெற்றார்.
இந்த வரலாற்றின் அடிப்படையில் உருவான கோயில் இதுவாகும்.
பாவங்கள் போக்கும் கோயில்:
செய்த பாவங்களுக்கு இங்குள்ள துலா கட்ட காவேரியில் நீராடி மயில் வடிவத்தில் சிவனை நோக்கி வணங்கி இருக்கும் அம்பாளையும், சிவனையும் தரிசித்தால் செய்த பாவங்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது இக்கோயிலில் ஐதீகம். மேலும் நந்தியின் கர்வத்தை சிவபெருமான் நீக்கிய இடமாகவும், மற்றும் கங்கை உள்ளிட்ட புனிய நதிகள் இங்கு நீராடி தன் பாவங்களை போக்கி கொண்டதால் இந்த இடம் மிகுந்த புண்ணிய இடமாக கருதப்படுகிறது.
கோயிலின் மற்றோரு தனி சிறப்பு: எல்லா கோயில்களிலும் பார்வதி தேவியிடம்தான் முருகன் வேல் வாங்கி சூரசம்ஹாரம் நடக்கும், இங்கு மட்டும் சிவனிடம் வாங்கி சூரசம்ஹார விழா நடக்கிறது.
கோயில் அமைப்பு:
மாயூரநாதர், அபயாம்பிகை கோயிலில் 4 பக்கம் சுற்று மதில்களும், கிழக்கே பெரிய கோபுரமும், மற்ற 3 பக்கம் மொட்டை கோபுரங்களும் வீதி உட்பட 5 பிரகாரங்களைக் கொண்டுள்ளது. கிழக்கில் அமைந்துள்ள ராஜகோபுரம் 9 நிலைகளையும், உட்கோபுரம் 3 நிலைகளையும் கொண்டுள்ளது. ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே சென்றால் இடதுபுறம் திருக்குளம், வலதுபுறம் குமரக்கட்டளை அலுவலகமும் அமைந்துள்ளது.
முக்கிய விழா:
சுமார் 1500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்கள் துலா உற்சவம் நடைபெறும். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நடைபெறும் புகழ்வாய்ந்த துலா உற்சவத்தில் கங்கை முதலான புன்னிய நதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் முழுவதும் புனித நீராடி தங்கள் பாவ சுமைகளை போக்கிகொண்டதாக புராண வரலாறு கூறுகிறது. இதனால் காவிரி துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் இருந்து சுவாமி புறப்பட்டு காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.
மேலும் ஐப்பசி 30 -ம் தேதி நடைபெறும் கடைமுகத் தீர்த்தவாரியில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி இறைவனை வழிபட்டு செல்வார்கள். அதுமட்டுமின்றி ஆண்டு தோறும் வரும் மகா சிவராத்திரி விழா இங்கு வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.