Maha Shivaratri 2023: தஞ்சை பெரிய கோவில் சிவராத்திரி விழா - சிறப்பு அபிஷேகம், பூஜைகள்
தஞ்சை பெரிய கோவிலில் மஹா சிவராத்திரியை ஒட்டி சிறப்பு அபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்
![Maha Shivaratri 2023: தஞ்சை பெரிய கோவில் சிவராத்திரி விழா - சிறப்பு அபிஷேகம், பூஜைகள் Maha Shivaratri 2023 Thanjavur Special Abhishekam Thanjavur Big Temple TNN Maha Shivaratri 2023: தஞ்சை பெரிய கோவில் சிவராத்திரி விழா - சிறப்பு அபிஷேகம், பூஜைகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/19/b198f9ccba27c6415b60111320e475d11676783368951113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தஞ்சாவூர்: மஹா சிவராத்திரி பெருவிழாவை ஒட்டி உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்கள் அதிகளவில் சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூரில் காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயில், ராஜராஜேச்சரம், பெருவுடையார் கோயில், பிரஹதீஸ்வரர் ஆலயம் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. 1003க்கும் 1010ஆம் ஆண்டிற்கும் இடையில் சோழ மன்னனான ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோயில், திராவிடக் கோயில் கலையின் உன்னதமான சான்றாகக் கருதப்படுகிறது.
கோயிலின் சில பகுதிகள் பிற்காலப் பாண்டியர்கள், விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டன. முன்தாழ்வாரம், நந்தி மண்டபம், அம்மன் சன்னிதி, சுப்ரமணியர் சன்னிதி போன்ற இந்தப் பகுதிகளைத் தவிர கோயில் மற்ற பகுதிகள் ராஜராஜ சோழன் காலத்திலேயே கட்டப்பட்டவை. இக்கோயிலுக்கு தஞ்சை மட்டுமின்றி பிற மாவட்ட, மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இதேபோல் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் பெரியகோயிலுக்கு வந்து அதன் கட்டிடக்கலையை கண்டு மகிழ்ந்து செல்கின்றனர்.
இத்தகைய பெருமை வாய்ந்த இக்கோயிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு பெருவுடையாருக்கு பால் சந்தனம் தயிர் எலுமிச்சை சாறு உள்ளிட்ட அபிஷேக பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
மஹா சிவராத்திரி பெருவிழா நாடு முழுவதும் மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் காலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் காலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தஞ்சை மட்டும் அல்லாது பல்வேறு மாநிலம் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பெருவுடையாருக்கு விபூதி, பால், சந்தனம் தயிர் ,எலுமிச்சை சாறு, மஞ்சள் திரவிய பொடி உள்ளிட்ட அபிஷேக பொருட்களைக் கொண்டு பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டது .
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் நந்தி மண்டபத்தில் 500க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்கும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவராத்திரியை முன்னிட்டு பக்கதர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்வதற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் ஒருவழி பாதையாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தஞ்சை மாநகராட்சி திலகர் திடலில் அரசு சார்பில் சிவராத்திரி விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்க பட்டிமன்றம், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடி, குச்சிப்புடி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)