Karthigai 2024: இன்று கார்த்திகை முதல் சோமவாரம்! வீட்டிலே பூஜை செய்வது எப்படி?
கார்த்திகை மாதத்தின் முதல் சோமவாரமான முதல் திங்கள்கிழமை இன்று என்பதால் பக்தர்கள் எப்படி வீட்டிலே பூஜை செய்வது. விரதம் இருப்பது என்பதை கீழே காணலாம்.
தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியமான மாதம் கார்த்திகை மாதம். கார்த்திகை மாதமானது சிவபெருமான், விநாயகர், முருகன், ஐயப்பன் என பல தெய்வங்களுக்கும் உகந்த மாதம் ஆகும். பொதுவாக வாரத்தின் முதல் வேலைநாளான திங்கட்கிழமை சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாள் ஆகும்.
சிவபெருமானுக்கு உகந்த இந்த திங்கட்கிழமையை சோமவாரம் என்று கூறுவார்கள். கார்த்திகை மாதத்தில் இன்று முதல் சோமவாரம் ஆகும். சோமவாரத்தில் எப்போதும் சிவாலயங்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடும் நடத்தப்படுவது வழக்கம் ஆகும்.
பூஜை செய்வது எப்படி?
- கார்த்திகை மாதத்தின் முதல் சோமவாரமான இன்று காலையிலே தலைக்கு குளித்துவிட வேண்டும்.
- வீட்டில் உள்ள அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
- வீட்டில் உள்ள சிவபெருமானின் படம், சிவ லிங்கத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பூஜைக்காக எடுத்துக் கொள்ளப்படும் சிவன் படத்திற்கோ அல்லது சிவலிங்கத்திற்கோ வில்வ இலைகள் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.
- வில்வ இலைகள் கிடைக்காத பட்சத்தில் மற்ற பூக்கள் கொண்டு பூஜை செய்யலாம்.
- பூஜைக்காக நைவேத்தியம் படைக்க வேண்டும். கற்கண்டு, பால், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் ஆகியவற்றை வைத்து நைவேத்தியம் படைக்கலாம்.
- நைவேத்தியம் முழுவதும் படைக்க இயலாதவர்கள் தங்களுக்கு கிடைத்தவற்றை வைத்து நைவேத்தியம் படைக்கலாம்.
விரதம்:
சோமவார விரதம் இருக்க விரும்பும் பக்தர்கள் ஒரு வேளை சாப்பிட்டோ அல்லது மாலை வரையோ விரதம் இருக்கலாம். பக்தர்கள் தங்கள் உடல்நலத்திற்கு ஏற்றவாறு விரதம் இருக்கலாம். கண்டிப்பாக சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.
விரதத்தை நிறைவு செய்வது எப்படி?
சோமவார விரதம் இருப்பவர்கள் சிவபூஜையின்போது சிவ புராணம், சிவமந்திரம் படிப்பது சிறப்பு ஆகும் மாலையில் பூஜையை நிறைவு செய்து, நைவேத்தியமாக படைக்கப்பட்டதை சாப்பிட்டு தங்களது விரதத்தை மாலையில் நிறைவு செய்து கொள்ளலாம்.
முருகனுக்கு பூஜை:
கார்த்திகை மாதமானது முருகருக்கும் உகந்த மாதம் என்பதால் இந்த சோமவார பூஜையில் முருகனையும் வழிபடலாம். முருகர் சிலை அல்லது முருகன் படத்தை எடுத்து மலர்களால் முருகனுக்கு பூஜை செய்யலாம். முருகன் வழிபாட்டின்போது கந்தசஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், திருப்புகழ் ஆகியவை படிப்பது நல்லது ஆகும்.