(Source: ECI/ABP News/ABP Majha)
Karthigai Deepam 2023: அரோகரா அரோகரா... பக்தர்கள் கோஷத்துடன் பெருமுக்கல் சஞ்சீவி மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்
பெருமுக்கல் சஞ்சீவி மலைமேல் அமைந்துள்ள ஸ்ரீமுக்தியாஜல ஈஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 1008 லிட்டர் நெய் தீபம் ஏற்றப்பட்டது.
விழுப்புரம்: திண்டிவனம் அருகே பெருமுக்கல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுத்தியாஜல ஈஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் - மரக்காணம் சாலை, பெருமுக்கல் கிராமத்தில் சஞ்சீவி மலைமேல் பிரசித்தி பெற்ற ஸ்ரீமுக்தியாஜல ஈஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி நெய் தீபம் ஏற்றப்படுவது வழக்கம். கார்த்திகை தீப பெருவிழாவை முன்னிட்டு, மாலை 5 மணிக்கு, முக்தியாஜல ஈஸ்வரருக்கு பால், பன்னீர், தயிர், மோர், நெய், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 21 வகையான வாசனை பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக முக்தியாஜல ஈஸ்வரர் விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின், நந்தியின் முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
மாலை 6 மணிக்கு, சிவன் பாடல்கள் முழங்க, 1008 லிட்டர் நெய் கொண்டு 7 அடி உயர கொப்பரையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றி வைக்கப்பட்டது. இந்த மகாதீபத்தை காண ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கனக்காண பொது மக்கள் மலைமீது ஏறி சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டும் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பெருமுக்கல் கிராம பொதுமக்கள், மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காத வகையில் பிரம்மதேசம் காவல் நிலைய போலீசார் 30 க்கும் மேற்பட்டோர் பதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
`சஞ்சீவி மலை' வரலாறு :
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் சாலையில் அமைந்திருக்கும் அழகிய ஊர் பெருமுக்கல். சோழா் கால வரலாற்றுப் பக்கங்களின் பொக்கிஷமாகத் திகழும் கல்வெட்டுகள் நிறைந்த அற்புதத் தலம் ஆகும், புராதன காலத்தில் `சஞ்சீவி மலை' என்று நம் மகரிஷிகளால் போற்றி வணங்கப்பட்ட இந்தத் தலத்தில் உள்ள மலையின் மீது முக்யாசலேஸ்வரா் திருக்கோயில் அமைந்திருக்க, அடிவாரத்தில் தாழக் கோயிலான காமாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
இங்குள்ள கல்வெட்டுகளில் மிகவும் பழைமையானவை உத்தம சோழன் காலத்துக் கல்வெட்டுகளாகும். இவற்றையடுத்து முதலாம் குலோத்துங்கச் சோழன் மற்றும் விக்கிரமச் சோழன் காலத்துக் கல்வெட்டுகளும் உள்ளன. விக்கிரமச் சோழனின் காலத்தில்தான் மலைமீது உள்ள திருக்கோயில் புனரமைக்கப்பட்டுக் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிக்காக ஏராளமான கைங்கா்யங்கள் செய்த காக்கு நாயகனின் திருவுருவச் சிலையும், கோயிலின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட பெரியான் திருவனான சிறுத்தொண்டனின் சிலையும், திருக்கோயிலின் அா்ச்சகரான திருச்சிற்றம்பலமுடையான் அன்பா்க்கரசு பட்டனின் திருவுருவச்சிலையும் இங்கே அமைத்திருப்பது அற்புதம் ஆகும்.
இவ்வூரானது கல்வெட்டுகளில் ஜெயங் கொண்ட சோழ மண்டலத்து ஒய்மா நாடான விசய இராசேந்திர வளநாட்டு பெருமுக்கிலான கங்கைகொண்ட நல்லூா் என்று குறிப்பிடப் படுகிறது. முதலாம் ராசேந்திரன் காலத்தில் இவ்வூர் கங்கைகொண்ட நல்லூர் என்று பெயா் மாற்றப் பட்டிருக்கலாம் என்கிறார்கள் சரித்திர ஆய்வாளர்கள். பெருமுக்கலில் அமைந்துள்ள மலையானது திருமலை என்றும் முக்கியசைலம் என்றும் வணங்கப்பட்டுள்ளது. மலையின் மீது அருளும் ஈசனுக்கு ஸ்ரீமுக்தியாலீஸ்வரா், ஸ்ரீதிருவான்மிகை ஈஸ்வரமுடையாா் ஸ்ரீ பெருமுக்கல் உடையாா் என்று பல திருப் பெயர்கள் வழங்கப்படுகின்றன.
தற்போது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளில் மேற்கொள்ளப்படும் கட்டுமானம் மற்றும் மராமத்துப் பணிகளுக்காக பகிரங்க ஏலம் விடப்படுவதை அறிவோம். இவ்வாறே நம் மன்னர்களின் ஆட்சிக்காலத்திலும் திருப்பணி களுக்காகக் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்ததற்கான தகவல்கள் பெருமுக்கல் தலத்தின் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.
நாட்டில் அறம் குறையக் கூடாது என்பதற்காக இத்திருக்கோயிலில் அறமிறங்கா நாட்டுச் சந்தி என்று ஒரு கூட்டு வழிபாடு முக்யாசலேஸ்வரப் பெருமானுக்கு நடத்தப்பட்டது குறித்தும் கல்வெட்டு தெரிவிக்கிறது. மெளரிய சாம்ராஜ்ஜியம் கோலோச்சிய கி.மு. 3-ம் நூற்றாண்டில் புகழ் வாய்ந்த சமயமாகத் திகழ்ந்தது ‘ஆசீவகம்.’ இம்மதம் பற்றிய பல்வேறு தகவல்கள் பாலி மற்றும் வடமொழி நூல்களில் இருந்தாலும், இச்சமயத்தின் ஆணி வோ் தமிழகமே என்று வரலாற்று ஆய்வாளா்கள் சிலர் தெரிவிக்கின்றனா். ஆசீவக மரபில் பிறவிப்பெருநோயைக் கடந்து வீடுபேற்றினை அடைந்த மூவரில் ‘நந்த வாச்சா’ என்பவரும் ஒருவா். மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகிலுள்ள மாங்குளத்தில் கணிநந்தாசிரியன் எனும் ஆசீவகத் துறவிக்கு, தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் மற்றும் அவன் வாரிசுகள் கற்படுக்கைகள் அமைத்துக்கொடுத்துள்ளனா். அங்கு காணப்படும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நந்தாசிரியன் எனும் பெயரே, பாலி மொழியில் நந்தவாச்சா என வழங்கப்பட்டுள்ளது. நந்தவாச்சா வானியல் அறிவியலில் நிபுணத்துவம் பெற்றிருந்த காரணத்தினால் `கணிநந்தாசிரியன்' எனவும் சிறப்பிக்கப்பட்டுள்ளாா். இவர் பெருமுக்கல் மலையில் முக்தி அடைந்ததாகவும், இதனால் `முக்கல் ஆசான் நல்வெள்ளையாா்” என இவா் புகழப்பட்டதாகவும் இத்திருத்தலம் குறித்த வரலாறு தெரிவிக்கின்றது. இதனால் இத்தல இறைவன் முக்தியாலீஸ்வரா் என்று வணங்கப்படுவதாகத் தெரிவிக் கின்றனர் ஆசீவக அறிஞா்கள்.