(Source: ECI/ABP News/ABP Majha)
Sadhguru : சத்குருவின் சிறப்பு கட்டுரை: 'நகரத்திற்கு புலம்பெயரும் மக்களை தடுக்க இதுதான் ஒரே வழி..' : தீர்வை சொன்ன சத்குரு..!
நகரத்திற்கு புலம்பெயரும் மக்களை தடுக்க கிராமங்களை நவீனப்படுத்துவதே (ஒரே) தீர்வு என சத்குரு தெரிவித்துள்ளார்.
சத்குரு: 'சில நாட்களுக்கு முன் மும்பைக்கு சென்றிருந்தோம். விண்ணை முட்டும் பிரம்மாண்டமான நவீன கட்டிடங்கள் ஒருபுறம், மறுபுறம் குடிசைகள் நிறைந்த சேரிப் பகுதி. அப்போதுதான் மழைக்காலம் முடிந்திருந்த சமயம் அது. பொதுவாகவே மழைக் காலங்களில் கழிவுநீர் கால்வாய்கள் பெருக்கெடுத்து ஓடும். சுமார் 150 ஏக்கர் அல்லது அதற்குமேல் பரப்பளவு கொண்ட அந்த பகுதி முழுவதிலும், சுமார் ஒரு அடி உயரத்திற்கு கால்வாயில் வந்து சேர்ந்திருந்த கழிவுகள் தேங்கி நின்றிருந்தது. அங்கிருந்த எல்லோருமே சாதாரணமாக அதன் மீது நடமாடியபடி, அதிலேயே வாழ்ந்துகொண்டும் இருந்தார்கள். நகரங்களை நோக்கி புலம் பெயர்ந்த மக்களின் வாழ்க்கை இந்த நிலையில்தான் இருக்கிறது.
சுமார் 11-12 கோடி மக்கள், இந்திய நகர மக்கள்தொகையில் சுமார் 26 சதவீதம் பேர் சேரிகளில் வசிக்கிறார்கள். வரும் 2035ம் ஆண்டிற்குள் 22 கோடி மக்கள் இந்திய கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி புலம்பெயர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நிகழ்ந்தால், நகரங்களின் நிலை என்னவாகும் என்பதை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள். நாம் வாழும் நகரங்கள் ஒவ்வொன்றிற்கும் பத்து லட்சம் பேர் அதிகமானால், யாரொருவரும் நலமாக வாழமுடியாது.
ஆனால், காலம்காலமாக வாழ்ந்து வரும் சொந்த மண்ணை விட்டு, தங்கள் உறவினர்களைப் பிரிந்து, நகரங்களை நோக்கி மக்கள் நகர்வதற்கு என்ன காரணம்? தங்கள் வாழ்வாதாரத்திற்கு என்று ஏதுமில்லாத காரணத்தினால் அங்கிருந்து தப்பிவிட மக்கள் விரும்புகிறார்கள். தங்கள் கிராமங்களில் ஓரளவு நல்லபடியாக வாழ்க்கை நடந்தாலே பெரும்பாலான மக்கள் இப்படி அவசரகதியில் வெளியேற மாட்டார்கள். தங்கள் குடும்பத்தில் இருந்து யாராவது ஒருவரை மட்டும் அனுப்பி, நகர வாழ்க்கை எப்படி இருக்கிறது, எப்படி பொருள் சம்பாதிப்பது, எப்படி வீடு கட்டிக்கொள்வது என்று பார்த்துவிட்டு பிறகு செல்வார்கள். ஆனால் இப்போது எந்த திட்டமும் இல்லாமல் ஒட்டுமொத்த குடும்பமும் நகரம் நோக்கி புலம்பெயர்கிறது, ஏனென்றால் அவர்கள் அந்த நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
நகரம் நோக்கிய குடிப்பெயர்வை நாம் தடுக்க வேண்டுமென்றால், இந்தியாவின் கிராமங்களை நாம் நவீனப்படுத்த வேண்டும். இந்த நோக்கத்தில் நாம் எளிதாக செய்யக்கூடிய முதல் படி, அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவதுதான். கட்டிடங்களும் கட்டுமானங்களும் அங்கே ஏற்கனவே இருக்கிறது, ஆனால் கற்றுத் தருவதற்கு தேவையான கட்டமைப்பும், கல்வி கலாச்சாரமும் பெரும்பாலான இடங்களில் இல்லை. இந்த தேசத்தில், 15-16 வயதிற்கு உட்பட்ட சுமார் 8 முதல் 10 லட்சம் பேர் தாங்கள் கல்வி பெற்றிருப்பதாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவர்களால் இரண்டையும் இரண்டையும் கூட்ட முடியாது. இந்தப் பள்ளிகளை எந்த நிபந்தனைகளும் இன்றி தனியார் அமைப்புகளிடம் வழங்கினால், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் என்று பலரும் இணைந்து அரசின் நிதியுதவியோடு தங்களது சொந்த நிதியையும் பயன்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளை மிக சிறப்பாக மேம்படுத்திவிட முடியும்.
இந்த கல்வி முறையில் இன்னொரு இழப்பு என்னவென்றால், குழந்தைகள் தங்கள் பெற்றோர்களிடம் இருந்து விவசாயம் அல்லது தச்சு வேலை போன்றவற்றைக்கூட கற்றுக் கொள்வதில்லை. அவர்களிடம் போதுமான கல்வித் திறமும் இல்லை, மேற்படிப்புக்கும் செல்வதில்லை. இது எந்நேரமும் வெடிக்கக்கூடிய வெடிகுண்டைப் போன்றது, ஏனென்றால் வேலைவாய்ப்பை பெறமுடியாத இளைய சமுதாயம்தான் குற்றச் செயல்கள், தீவிரவாதம் என தேசத்திற்கும் சமுதாயத்திற்கும் எதிர்மறையான செயல்களில் ஈடுபடுபவர்களாக இருக்கிறார்கள். எனவே அவர்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு திறனுள்ளவர்களாக இருப்பது அவசியம். ஒவ்வொரு கிராமத்திலும் திறன் மேம்பாட்டு மையங்களை கொண்டுவர முடியாவிட்டாலும், ஒவ்வொரு தாலுகா அளவிலாவது நிச்சயமாக திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் கொண்டுவரப்பட வேண்டும். இதை தனியார் அமைப்புகள் முன்னெடுப்பது அவசியம், ஏனென்றால் அரசாங்கமே அனைத்தையும் செய்யட்டும் என்று காத்துக்கொண்டிருப்பது நேர விரயமாகும்.
அடுத்ததாக ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு திரையரங்கத்தைத் துவக்க வேண்டும். ஏனென்றால் திரைப்படம் பார்ப்பதற்கென்றே மக்கள் நகரங்களுக்கு வருகிறார்கள். ஒருமுறை நகரத்திற்கு வந்தவர்கள் அப்படியே தங்கிவிடுகிறார்கள், மீண்டும் தங்கள் இல்லங்களுக்கு திரும்புவதில்லை. அதேவிதமாக ஏதாவது சில விளையாட்டு வசதிகளும் நிச்சயமாக ஏற்படுத்தப்பட வேண்டும். உடனடியாக பெரும் விளையாட்டு அரங்கங்களை நிர்மாணிக்க முடியவில்லை என்றாலும், சிறிய அளவிலான உடற்பயிற்சி கூடங்களாவது இளைஞர்களுக்கு நிச்சயமாக தேவைப்படுகிறது. ஏனென்றால் அதிகரித்து வரும் குடிப்பழக்கம் மற்றும் போதைப்பொருட்களின் பயன்பாடு அடுத்த 10-15 ஆண்டுகளில் தேசத்தில் பெரும் பிரச்சனையாக உருவாகப்போகிறது. ஒருமுறை, சேரிப்பகுதி ஒன்றில் வாழ்ந்த மக்களோடு நாம் செயல்பட்டபோது, அவர்களில் சுமார் 80 சதவீதம் பேர் தினமும் மாலையில் குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள். அந்தப் பகுதியில் ஒரு உடற்பயிற்சி கூடத்தை நிறுவி, இளைஞர்கள் அனைவரையும் உள்ளே கொண்டுவந்த பிறகு, சுமார் 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் குடிப்பழக்கத்தில் இருந்து வெளியே வந்தார்கள். ஏனென்றால் தங்கள் உடல் கட்டுக்கோப்பாக இருக்கவேண்டும் என்பதில் அவர்கள் அக்கறை கொள்கிறார்கள்.
கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு பொழுதுபோக்கு, விளையாட்டு, கல்வி மற்றும் திறன் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கச்செய்ய வேண்டும். நம்மால் இதை செய்ய முடிந்தால், கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி புலம்பெயரும் மக்களை நிச்சயமாக நம்மால் தடுக்க முடியும். வலுக்கட்டாயமாக நம்மால் அதை தடுக்க முடியாது. தேவையான கட்டமைப்புகளை நிறுவுவதன் மூலம், கிராமங்களும், சிற்றூர்களும் வாழ்வதற்கு உகந்த சூழ்நிலை கொண்டவையாக, மக்களை ஈர்ப்பவையாக மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே நம்மால் இதை செய்ய முடியும்.
இந்தியாவின் ஆற்றல்மிக்க 50 மனிதர்களில் ஒருவராக அறியப்படும் சத்குரு அவர்கள் யோகியாக, மறைஞானியாக, தொலைநோக்கு பார்வை கொண்டவராக, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் அதிக விற்பனையாகும் எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்கிறார். பொதுமக்களின் சேவையைப் பாராட்டி இந்திய அரசு வழங்கும் உயரிய விருதான பத்ம விபூஷன் விருது 2017ம் ஆண்டு சத்குருவிற்கு வழங்கப்பட்டது. இதுவரையில் உலகம் முழுவதும் 3.91 கோடி மக்களின் ஆதரவைத் திரட்டி, உலகின் மாபெரும் மக்கள் இயக்கமாக வெற்றிகண்டுள்ள 'விழிப்புணர்வான உலகம் - மண் காப்போம்' இயக்கத்தையும் சத்குரு நிறுவியுள்ளார்.
(மேற்கண்ட கட்டுரையில் இடம் பெற்றுள்ள அனைத்தும் சத்குருவினுடைய கருத்துகள் மட்டுமே ஆகும்)