மோசமான நிலையில் கோசாலை - அமைச்சர் சேகர்பாபு அதிருப்தி
28 லட்சம் ரூபாயில் கோசாலை அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்க இந்துசமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவு.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் வருகின்ற 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக தொடங்க உள்ளது. இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வு டிசம்பர் மாதம் ஆறாம் தேதி அதிகாலை 4 மணியளவில் அண்ணாமலையார் திருக்கோவிலின் கருவரையில் உள்ளே பரணி தீபமும் மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் திருக்கோவிலில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலையின் மகா தீபம் ஏற்றப்படும்.
இந்த திருக்கார்த்திகை தீபத்திற்கு திருவண்ணாமலைக்கு 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் எதிர்பார்ப்பில் உள்ள நிலையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் பாதுகாப்பு வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் குறித்து அண்ணாமலையார் திருக்கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது தீபத் திருவிழாவின் போது பக்தர்கள் கோவிலுக்கு உள்ளே அனுமதிப்பது மற்றும் பக்தர்கள் தரிசனத்திற்கு தடையின்றி நீண்ட நேரம் காத்திருக்க விடாமல் விரைவாக தரிசனம் செய்யும் வகையில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் திருக்கோயில் இணை ஆணையர் ஆகியோருடன் கலந்து ஆலோசித்தார்.
அதன் பிறகு பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்பதால் தற்போது உள்ள பக்தர்கள் வரிசை குறுகலாக உள்ளதாகவும் இதனால் பக்தர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாவார்கள், மூச்சுத் திணறல் ஏற்படும் வகையில் வரிசைகள் உள்ளதாகவும் உடனடியாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் விரைவாக சாமி தரிசனம் மேற்கொள்ளும் வகையில் பக்தர்களின் வசதிக்காக பக்தர்கள் பொது தரிசன வரிசையை விரிவுபடுத்தவும் அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டார். அதன் பிறகு திருமஞ்சனம் கோபுரம் அருகே 28 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள கோசாலை பணிகளை துவக்க வந்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர், கோசாலை மிகவும் மோசமாக நிலையில் உள்ளதாகவும் , கோசாலையை சரியான முறையில் பராமரிக்க படாமல் வருவதாகவும், கோசாலையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கோசாலையை இங்கிருந்து வேற இடத்துக்கு மாற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அம்மணி அம்மன் கோபுரம் அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்து சமய அறநிலைத்துறை சார்பில் சமய நூலகத்தை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். நூலகத்தின் உள்ளே வைக்கப்பட்டுள்ள ஆன்மீகம் தொடர்பான வைக்கப்பட்டுள்ள நூல்களை அமைச்சர்கள் எ.வ.வேலு, பிகே சேகர்பாபு ஆகியோர் பார்வையிட்டனர்.
தொடர்ந்து தேரடி வீதிக்கு வந்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தேரோட்டத்திற்காக தயாராகி வரும் மரத்தேரினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.