தஞ்சாவூர் மூலை அனுமார் கோயிலில் அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு
அனுமன் ஜெயந்தி வழிபாட்டில் தஞ்சாவூர் நகர் பகுதி மட்டுமின்றி அருகிலுள்ள பிற மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மூலை அனுமாரை தரிசனம் செய்து சிறப்பு வழிபாடுகள் நடத்தினர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மேலவீதி மூலை அனுமார் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மேலவீதியில் புகழ்பெற்ற மூலை அனுமார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 திருக்கோயிலில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த கோயில் தஞ்சையை ஆண்ட பிரதாப சிம்மனால் கட்டப்பட்டதாகும்.
தஞ்சை நான்கு ராஜ வீதிகளில் வாயு மூலையில் கொடிமரத்துடன் கூடிய தனிப்பெரும் கோவிலாக இந்த அனுமார் திகழ்கிறது. பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் தலமாக உள்ளது. இந்த மூலை அனுமார் கோயிலில் சனிபகவான் உட்பட நவக்கிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். இத்தலம் சனி தோஷம் மற்றும் வாஸ்து தோஷம் போக்கும் ஸ்தலமாகவும் விளங்குகிறது.
மார்கழி மாதம் அமாவாசை அன்று அனுமன் பிறந்தமையால் இத்தலத்தில் பிரதி அமாவாசை தோறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்கோயிலில் அமாவாசையன்று 18 முறை வலம் வந்து வழிபட்டால் அனுமன் அருள் நிச்சயமாக கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு காலை 7 மணிக்கு இலட்ச ராம நாமம் ஜெபமும் தொடர்ந்து காலை10 மணிக்கு வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாகும் தேங்காய் துருவல் அபிஷேகம் மற்றும் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலையில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மூலை அனுமாருக்கு சிறப்பு மலர் அலங்காரம் நடந்தது.
இதையடுத்து மான் வாகனத்தில் நான்கு ராஜ வீதிகளில் சுவாமி புறப்பாடு நடந்தது. இந்த அனுமன் ஜெயந்தி வழிபாட்டில் தஞ்சாவூர் நகர் பகுதி மட்டுமின்றி அருகிலுள்ள பிற மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மூலை அனுமாரை தரிசனம் செய்து சிறப்பு வழிபாடுகள் நடத்தினர்.
இந்த அனுமன் ஜெயந்தி விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் அமாவாசை மற்றும் மூல நட்சத்திரம் வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.