Diwali 2022 Date: தீபாவளி எப்போது கொண்டாடப்படுகிறது? 5 நாள் சிறப்புகள் என்ன?
Diwali 2022 Date 5 Days: வட மாநிலங்களில் நரகாசுர வதம் 5 நாட்கள் திருவிழாவாக கடைபிடிக்கப்படுகிறது.
தீபாவளி ,இந்தியாவைப் பொருத்தமட்டில் நாடு தழுவிய அளவில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சேர்ந்து கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றாகும்.
இந்த தீபாவளி திருநாளையொட்டி, நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள்,கல்விக்கூடங்கள் என 2022 திங்கள் அன்று விடுமுறை விடப்படுகிறது. தில்லி, ஹரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், கோவா, கேரளா, பஞ்சாப், தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், தீபாவளி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த தீபாவளி திருநாள் கொண்டாட்டங்கள்,மாநிலங்களுக்கு மாநிலம்,வேறுபடுகிறது. சில மாநிலங்களில் ஐந்து நாள் திருவிழா நாளாக கொண்டாடப்படுகிறது. சில மாநிலங்களில் மூன்று நாள் திருவிழாக்களாக கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி திருநாளில் பொதுவான கொண்டாட்டத்திற்கான காரணம் என்னவென்று பார்க்கும் போது, தீமைகள் அழிந்து,நன்மை வெற்றி பெறும் என்பதாக இருக்கிறது. தீமை அல்லது இருள் என்ற அஞ்ஞானத்தை அகற்றி,அறிவு அல்லது கடவுளை அடைவது தீபாவளி என்றும் ஒரு சாராரால் கொண்டாடப்படுகிறது.
சில மாநிலங்களில்,கொடுங்கோல் ஆட்சி புரிந்து,நல்லவர்களை கொடுமைப்படுத்திய நரகாசுரன் வதம் செய்யப்பட்ட இந்த நாளை தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.
வட மாநிலங்களில் எல்லாம் இத்தகைய நரகாசுர வதம் 5 நாட்கள் திருவிழாவாக கடைபிடிக்கப்படுகிறது. அக்டோபர் 22 ஆம் தேதி த்ரயோதசி துவங்கி, அக்டோபர் 24ஆம் தேதி அமாவாசை தீபாவளி கொண்டாட்டம் முடிந்து 26 ஆம் தேதி வரை கொண்டாட்டங்கள் களைகட்டுகின்றன.
அக்டோபர் 22ஆம் தேதி சனிக்கிழமை அன்று,தங்கம் வெள்ளி மற்றும் வைர நகைகள் வாங்குவதற்கு உகந்த நாளாக குறிக்கப்பட்டு,அன்றைய தினத்தில் இந்த பொருட்கள் சிறிதேனும் வாங்கப்படுகிறது.
அக்டோபர் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று,வண்ணக் கோலங்கள் போடுவது, வீடுகளை அலங்கரிப்பது மற்றும் பலகாரங்கள் தயார் செய்வது,என சொந்த பந்தங்களோடு மகிழ்ச்சியான தருணங்களாக கழிகிறது.
அக்டோபர் 24ஆம் தேதி திங்கட்கிழமை அன்று காலையில், பலகாரங்கள் செய்து,கடவுளுக்கு படைத்த பின்னர்,இனிப்புகளோடும் புத்தாடைகளோடும் மற்றும் வெடிகள், வான வேடிக்கைகள் என அன்றைய தினம் முழுவதும் தீபாவளி பண்டிகை களை கட்டுகிறது.
அக்டோபர் 25-ஆம் தேதி கிருஷ்ணருக்காக ஒதுக்கப்பட்டு, அவருக்கான படையல்கள் சிறப்பாக செய்யப்படுகிறது.அன்றைய தினம், கிருஷ்ணர் கோவில்களுக்கு சென்று பூஜை செய்து கொண்டாடுகிறார்கள்.
அக்டோபர் 26-ஆம் தேதி அன்று, வீட்டில் இருக்கும் சகோதர சகோதரிகளுக்காக ஒதுக்கப்பட்டு, அவர்களுக்கான சிறப்புகள் மற்றும் செய்முறைகள் செய்யப்படுகிறது. இப்படியாக வட இந்தியாவில் தீபாவளி ஐந்து நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
சில மாநிலங்களில் இந்த நிகழ்வு ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் கூட, கௌரி நோன்பு எனப்படும் நோன்பு, சில மாநிலங்களில் கடைபிடிக்கப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை சிவனுக்கு என,தனியாக பூஜைகள் செய்வதற்காக,வீட்டில் மண்ணினால் ஆன சிவலிங்கம் பிடிக்கப்பட்டு, அதற்கு இனிப்பு மற்றும் பலகாரங்கள் தயார் செய்து படைக்கப்படுகிறது.
அன்றைய தினம் வீட்டில் இருக்கும் குழந்தைகள்,பெரியவர்கள்,பெண்கள் என அனைவருக்கும் எண்ணெய்க்குளியல் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டு,புத்தாடை உடுத்தி அதிகாலையில் தீபாவளியை கொண்டாடுகிறார்கள் பின்னர் உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும், இனிப்புகளை தருவது,அவர்களின் இல்லங்களுக்கு செல்வது என்று, கொண்டாடுகிறார்கள்.மாலை பொழுதில் வான வேடிக்கைகள் பட்டாசுகள் என சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகத்தில் திளைக்கிறார்கள்.
தீபாவளிக்கு மறுநாள் கௌரி நோன்பு என்று அழைக்கப்படும் நோன்பானது,வீட்டில் இருக்கும் பெண்களால்,கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம்,மண்ணால் தயார் செய்யப்பட்ட சிவலிங்கத்திற்கு, காலையிலிருந்து உணவு ஏதும் அருந்தாமல் விரதம் இருந்து மாலையில் வில்வம்,அரச இலை மற்றும் ஆல இலை ஆகியவற்றை கொண்டு சிவனுக்கு பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு, மறுநாள் காலை வரை பூஜைகள் செய்யப்படுகிறது.
பின்னர் விரதம் நிறைவு பெற்று பெண்கள் பால் பழம் அல்லது சிறு உணவை எடுத்துக் கொண்டு விரதத்தை முடிக்கிறார்கள்.
இந்த தீபாவளி திருநாள் ஆனது,வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவில் சில மாநிலங்கள்,என ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்றார் போல,வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.