Diwali 2022: தீபாவளி ஏன் கொண்டாடப்படுகிறது ? அதன் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் என்ன?
இந்திய மக்களின் பாரம்பரிய மரபுகளை சார்ந்த இந்த தீபாவளியானது பல்வேறு மாநிலங்களிலும் உள்ள மக்களால் சற்று வித்தியாசமான முறையில் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அந்த வகையில் தீபாவளி திருவிழா இந்திய மக்களால் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
ஐப்பசி மாதத்தில் வரும் இந்த தீபாவளி பண்டிகையானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்திய மக்களின் பாரம்பரிய மரபுகளை சார்ந்த இந்த தீபாவளியானது பல்வேறு மாநிலங்களிலும் உள்ள மக்களால் சற்று வித்தியாசமான முறையில் கொண்டாடப்படுகிறது. வீடுகளை தூய்மைப்படுத்தி ,அலங்கரித்து பூஜை அறையை சுத்தப்படுத்தி அலங்கரித்தும், இனிப்பு பலகாரங்கள் செய்து, உற்றார் உறவினருடன் கூடி இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.
இதற்கென விசேஷமான விரதங்கள் இருந்து அன்றைய தினத்தை அனுசரிக்கிறார்கள் .வீடு முழுவதும் விளக்கேற்றி பிரகாசமாக இருக்கும் வகையில் அன்றைய தினம் முழுவதும் சிறப்பான அலங்காரங்களும் செய்கின்றனர். முன்னோர் காலம் தொட்டு தீபாவளி பண்டிகை எவ்வாறு கொண்டாடப்படுகிறதோ அந்த பழக்க வழக்கங்களை தற்போதைய தலைமுறையினரும் கடைப்பிடித்து வருகின்றனர்.
வருடம் முழுவதும் பல பண்டிகைகள் வந்தாலும் தீபாவளிக்கென தனிச்சிறப்பு உண்டு. அன்றைய தினம் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடில்லாமல் எல்லோரும் எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து, தீபம் ஏற்றிக் வழிபடுவது அவசியம் என்று புராணங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் திருவிழாக்களில் இந்தியாவில் முதன்மையானதாக மிகப்பெரிய திருவிழாவாக இந்த தீபாவளி காணப்படுகிறது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்கள் பல்வேறு வரலாற்று புராணக் கதைகளை முன்வைத்தது இந்த தீபாவளியை கொண்டாடுகின்றனர்.
இந்தியாவின் வடமாநில மக்கள் இராமாயணத்தில் உள்ளது போன்று மன்னன் ராவணனுடன் போரிட்டு, ராமர் வெற்றி பெற்று அயோத்திக்குத் திரும்பியதைக் குறிக்கும் வகையில் கொண்டாடுகின்றனர். இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது பதினான்கு வருட வனவாசத்தை முடித்து, மனைவி சீதை,சகோதரன் இலட்சுமணனுடன் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக வடமாநில மக்களால் கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேற்கிந்திய மக்கள் மகாவிஷ்ணு, அசுர ராஜா மகாபலியை பாதாள உலகத்தை ஆள அனுப்பிய தினத்தை தீபாவளியாகக் கொண்டாடுகின்றனர்.
அதேபோல் தென்னிந்திய மக்கள் கிருஷ்ணர் நரகாசுரனை தோற்கடித்த நாளாக கொண்டாடுகின்றனர். நரகாசுரன் என்ற ஒரு அரக்கன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்ததாக வரலாற்றில் கூறப்படுகிறது. இதை அறிந்த மகா விஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் நரகாசுரன் பூமி தாய்க்கு பிறந்தவன் என்றபடியால், தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்ததாக வரலாற்று பதிவுகளில் கூறப்படுகிறது.
எனவே நரகாசுரனை கொலை செய்ய தந்திர உபாயம் செய்த மகாவிஷ்ணு அவனுடன் போரிட்டார். மகாவிஷ்ணுவின் அம்புபட்ட நரகாசுரன் மயக்கம் அடைந்தவர் போல் கீழே விழுந்தார்.
இதை பார்த்த பூமியின் அவதாரமான சத்தியபாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். அன்னையின் அம்புக்கு பலியாகி விழுந்தான் நரகாசுரன். அப்போதுதான் சத்தியபாமா தனது தாயென நரகாசுரனுக்கு தெரிய வர ,தான் மறைந்த இந்நாளை தேவர்களும் மக்களும் இனிப்பு வழங்கி வெடி போட்டு கொண்டாட வேண்டும் என்று வேண்டியதாக கூறப்படுகிறது. இதை அடுத்த தான் நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக தென்னிந்திய மக்களால் கொண்டாடப்படுகிறது.
அதேவேளை ஸ்கந்தபுராணத்தின் படி, பார்வதி தேவி 21 நாள் கேதாரகெளரி விரதம் இருந்து சிவனில் ஒன்றிணைகிறார். விரத முடியும் இறுதி நாளில், சிவன் தன்னில் ஒரு பாதி சக்தி என்பதை ஏற்று அர்த்தநாரீஸ்வரர் உருவ மெடுக்கின்றார்,இவ்வாறு ஆணில் பெண் சரிபாதியாக இணையும் இந்த நாளினை நினைவுபடுத்தும் விதமாக தீபாவளி கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த கேதார கௌரி விரத வழிபாட்டு முறையை அதிகளவாக நாம் தமிழ்நாட்டில் காணக்கூடியதாக இருக்கிறது.
அதேபோல் சீக்கியர்கள் 1577 ல் இந்த நாளில், தங்கக் கோயில் கட்டுமான பணிகள் தொடங்கியதையே தீபாவளியாக கொண்டாடுகின்றனர் .
மேலும் சமணர்கள் மகாவீரர் முக்தி அடைந்த புனித தினத்தை நினைவுபடுத்தும் நாளே தீபாவளி என கொண்டாடி வழிபடுகின்றனர்.
ஆகவே இந்தியாவை பொறுத்த அளவில் புராணங்கள்,வரலாறு, பாரம்பரியம் என பல்வேறு கதைகள் இருந்த போதும் இந்த தீபாவளி நாளை மக்கள் எல்லோரும் தாம் வாழும் இடம், மண்வாசனை, சூழலுக்கு ஏற்ப வழிபட்டு கொண்டாடுகின்றனர்.
இந்தியா முழுவதும் இந்த தீபாவளி பண்டிகை ஒரே மாதிரியாக கொண்டாடப்படுவதில்லை. மாநிலத்துக்கு மாநிலம் சற்று வேறுபட்டு தான் இருக்கிறது . தென் மாநிலங்களை பொறுத்த அளவில் அதிகபட்சமாக இரண்டு நாட்கள் இந்த தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால் வட இந்தியாவிலோ இது ஐந்து நாள் பண்டிகையாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தீபாவளி முதல் நாளில் அன்றைய தினம் வீட்டைச் சுத்தப்படுத்துவது, தந்தேரஸ் எனப்படும் தங்கம் அல்லது வெள்ளி வாங்குவது என உலோகத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
தீபாவளியின் இரண்டாவது நாள் நரகசதுர்த்தி எனப்படுகிறது. அதைச் சின்ன தீபாவளி என்றும் கூறுவர். அன்றைய தினம் வீடுகளை அலங்கரித்து வர்ணக் கோலமிடுவது,என உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
தீபாவளி மூன்றாம் நாளான அமாவாசை அன்று பெரிய தீபாவளி பண்டிகை மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலையில் குளித்து புத்தாடை உடுத்தி, வீட்டில் லட்சுமி குபேர பூஜை செய்யப்படுகிறது. அன்றைய தினம் கோவிலுக்குச் சென்று மலர்கள், பழங்கள், இனிப்புகளை லட்சுமி தேவிக்கு படைத்து வழிபடலாம்.
அதேபோல் தீபாவளியின் நான்காவது நாள் கோவர்தன பூஜை செய்யப்படுகிறது. கிருஷ்ணன் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து யாதவர்களைக் காப்பாற்றியதன் நினைவாக இந்த பூஜை செய்யப்படுகிறது. மேலும் சில இடங்களில் மகாவிஷ்ணு வாமனனாக வந்து மகாபலியை வெற்றி கொண்ட தினமாகவும், ஒரு சில இடங்களில் ராமபிரான் அயோத்திக்குத் திரும்பிய நாளாகவும் கொண்டாடுகின்றனர். அதேபோல் வட இந்திய மக்கள் இந்த நாளை புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். இந்த நாளில் தான் அதிகளவான வட மாநில மக்கள் தமது புதிய தொழில்கள் மற்றும் தொழில் கணக்கை மீண்டும் தொடங்குவார்கள்.
தீபாவளியின் ஐந்தாவது நாளில் பாய் தோஜ் எனப்படும் சகோதர சகோதரிகள், உறவைகளிடையே பரிசு பொருட்களை பரிமாறிக் கொள்ளும் திருவிழா நடைபெறுகிறது. அன்றைய நாளில் சகோதர சகோதரிகள் நலனுக்காகவும், உறவினர்கள் நலமாக வாழவும் சிறப்பு வழிபாடுகளை செய்வார்.
இந்த ஆண்டு லக்ஷ்மி பூஜை அக்டோபர் 24 அன்று கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினம் தான் விரதம் இருந்து சுவாமியை வழிபடுவர். அக்டோபர் மாதம் 22ஆம் தேதி துவாதசி திதியில் தந்தேரசுடன் தீபாவளிப் பண்டிகை தொடங்குகிறது. ஆகவே தீபாவளிக்கு முன்னதாக வீடுகளை சுத்தப்படுத்தி வண்ணமயப்படுத்துவார்கள். வீட்டில் ஒவ்வொரு பகுதிகளும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்படும்.
லட்சுமி தேவியும், விநாயகப் பெருமானும் நன்கு தூய்மையான நறுமணமிக்க, ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வீட்டிற்குள் மட்டுமே நுழைவார்கள் என்று என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. வீடு சுத்தமாக ,அலங்கரிக்கப்பட்டு, பிரகாசமாக இருப்பது நேர்மறை எண்ணங்களையும், நல்ல சக்திகளையும் தானாகவே உள்ளீர்த்துக் கொள்ளும். ஆகவே அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி என்பது நீட்டிக்கும்.
தீபாவளியன்று பூக்கள் மற்றும் விளக்கு அலங்காரங்கள் இல்லாமல் அன்றைய நாள் பூர்த்தி அடையாது என சொல்லப்படுகிறது. ஆகவே பாரம்பரிய வழக்கப்படி ,கையால் செய்யப்பட்ட மண் விளக்குகளில் எண்ணெய் அல்லது வெண்ணெய் நிரப்பி ஒளி ஏற்றி வழிபடுவது மிகவும் சிறப்பு என கூறப்படுகிறது. இந்த மண் விளக்கு ஒளியானது வீட்டிற்கு நீண்ட கால சந்தோஷத்தையும் சகல வளங்களையும் அளிப்பதாக நம்பப்படுகிறது.
தீபாவளிக்கான முன் அலங்காரங்களில் வீட்டு வாசலில் போடப்படும் ரங்கோலி கோலமும் ஒன்றாகும். இது வீட்டின் நுழைவாயிலை அலங்கரிப்பதற்கு மட்டுமல்ல புராண வரலாறுகளின் படி திருவிழா காலங்களில் தீய சக்திகள் உள் நுழையாதவாறு நன்மையான விஷயங்களை மட்டுமே ஈர்த்துக் கொள்ளும் என கூறப்படுகிறது.
வரலாற்று குறிப்புகளின் படி 14 ஆண்டுகள் வனவாசத்திற்குப் பிறகு ராமர் தனது சகோதரர் லட்சுமணன் மற்றும் மனைவி சீதாவுடன் நாடு திரும்பியதை கொண்டாடும் வகையில் இந்த தீபாவளி சிறப்பிக்கப்படுகிறது. ஆகவே இந்த நாளை நினைவுபடுத்தும் விதமாகவும், அந்த மகிழ்ச்சியினை தொடரும் விதமாகவும், உறவினர்கள், நண்பர்கள், ஒன்றிணைந்து பாரம்பரிய பழக்க வழக்கப்படி பரிசு பொருட்களை, இனிப்புகள், உணவுகள், ஆடைகள் என இவற்றை பரிமாறி மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கின்றனர்.
மிக முக்கியமாக தீபாவளி நாளன்று குடும்பமாக மகாலட்சுமிக்கு பூஜை செய்து, அன்னையிடம் குடும்பத்துக்கான வளங்களையும், செல்வங்களையும் ஆசீர்வாதத்தையும் நாடுகின்றனர். குடும்ப செழிப்பு, அதிர்ஷ்டம் , குழந்தைகளுக்கு நல்ல ஞானம் அறிவு போன்ற வரங்களை பெறவும் முன்னேற்றத்திற்குரிய தடைகள் நீங்கப் பெறவும் விநாயகப் பெருமானை வழிபடுகின்றனர்.