Tirupati:பெருமாளே! திருப்பதி கோயிலுக்கு 6 கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த சென்னை பக்தர்!
TTD: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்னையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் 6 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.

உலகப் புகழ்பெற்ற கோயிலாக திகழ்வது ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆகும். இந்தியாவின் பணக்கார கடவுளாக திருப்பதி கோயில் திகழ்கிறது. திருப்பதி பெருமாளை தரிசிக்க தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் கோடிக்கணக்கில் பணத்தையும், நகைகளையும் காணிக்கையாக வழங்குகின்றனர்.
6 கோடி ரூபாய் நன்கொடை:
இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 6 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். சென்னையைச் சேர்ந்தவர் வர்தமான் ஜெயின். இவர் சென்னையில் தொழில் செய்து வருகிறார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள ரங்கநாயகுல மண்டபத்தில் வைத்து தேவஸ்தான அதிகாரிகளிடம் இந்த நன்கொடைக்கான காசோலையை அவர் வழங்கினார்.
இதில் 5 கோடி ரூபாய் திருப்பதி கோயிலுக்குச் சொந்தமான எஸ்.வி.பி.சி தொலைக்காட்சிக்கும், மீதமுள்ள 1 கோடி ரூபாய் கோயிலின் கீழ் இயங்கும் கோசம்ரக்ஷனா அறக்கட்டளைக்கும் வழங்கினார். இந்த கோசம்ரக்ஷனா அறக்கட்டளை திருப்பதி கோயிலின் சார்பில் வளர்க்கப்படும் பசுக்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குவியும் பக்தர்கள்:
எஸ்.வி.பி.சி. தொலைக்காட்சி திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இந்த தொலைக்காட்சி மூலமாக திருப்பதி கோயிலின் செயல்பாடுகளையும், திருப்பதி கோயில் தீபராதானை ஆகியவற்றை ஒளிபரப்பி வருகின்றனர். திருப்பதி கோயிலின் வளர்ச்சிக்காக 6 கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய வர்தமன் ஜெயினுக்கு தேவஸ்தான் அதிகாரிகள் நன்றிகளைத் தெரிவித்தனர்.
திருப்பதி கோயிலின் உண்டியலில் மட்டும் தினசரி கோடிக்கணக்கான ரூபாய் காணிக்கையாக பக்தர்களால் வழங்கப்படுகிறது. மேலும், உண்டியலில் பணம் மட்டுமின்றி தங்க்காசுகள், தங்க நகைகள், தங்க நாணயங்கள், கோடிக்கணக்கான ரூபாய்க்கான காசோலைகள் என பல மதிப்புமிக்க பொருட்களை காணிக்கையாக வழங்குகின்றனர்.
திருப்பதி பெருமாளை தரிசிக்க வழக்கமான நாட்களிலே லட்சக்கணக்கான பக்தர்கள் செல்லும் வேளையில், வைகுண்ட ஏகாதசி போன்ற பெருமாளுக்கு உகந்த நாட்களில் வழக்கத்தை விட பன்மடங்கு பக்தர்கள் குவிவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

