சீர்காழி சட்டைநாதர் கோயில் ஆவணி மாத பிறப்பு சிறப்பு வழிபாடு
சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் ஆவணி மாத பிறப்பை ஒட்டி சிறப்பு கோ பூஜை வழிபாடு நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புராதன சிறப்பு வாய்ந்த மிகவும் பழமையான திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது.
இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது.
இத்தகைய பல்வேறு சிறப்பு மிக்க இக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் பிறப்பன்று சிறப்பு கோ பூஜை நடைபெறும். அந்த வகையில் இன்று தமிழ் மாதமான ஆவணி மாத பிறப்பை ஒட்டி சிறப்பு கோபூஜை, வழிபாடு நடந்தது. முன்னதாக கொடிமரத்து விநாயகர், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து கோசாலையில் இருந்து வரவழைக்கப்பட்ட புங்கனூர் குட்டை பசுமாடு கன்றுக்கு சிறப்பு வழிபாடு செய்து வஸ்திரம் சாத்தி தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பசு மாடு மற்றும் கன்றினை வலம் வந்து மலர் தூவி வழிபாடு செய்தனர்.
சீர்காழி அருகே மேலவல்லம் கிராமத்தில் பழமை வாய்ந்த பிரித்தியங்கரா தேவி ஆலய கும்பாபிஷேகம், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் கோபாலசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேலவல்லம் கிராமத்தில் பழமையான மிகவும் பிரசித்தி பெற்ற பிரத்தியங்கிரா தேவி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக சாலைகள், யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, புண்ணிய நதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட நீர் புனித கடங்களில் வைத்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாகுதியுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது.
மேளதாளங்கள் முழங்க புனித கடங்களில் உள்ள புனித நீர் ஊர்வலமாக கோயிலை சுற்றி எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களை அடைந்தது. பின்னர் வேத விற்பனர்கள் வேதங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மூலவர் பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.