ஐப்பசி அன்னாபிஷேகம் எப்போது? - சிவபெருமானை வழிபட்டால் இவ்வளவு பலன்களா?
அக்டோபர், நவம்பர் மாதங்களில் பூமிக்கு மிக அருகில் நிலவு வந்து தனது முழு ஒளியையும் வீசி நிலப்பரப்பை பிரகாசமடைய செய்கிறது

இந்து மதத்தைப் பொறுத்தவரை வருடத்தின் அனைத்து நாட்களும் விசேஷ நாட்கள் என்னும் அளவுக்கு மிகச் சிறப்பாக பஞ்சாங்கத்தால் கணிக்கப்பட்டுள்ளது. வளர்பிறை மற்றும் தேய்பிறை அடிப்படையில் திதிகள் கணக்கிடப்படுகிறது. இந்த நிலையில் ஐப்பசி மாதம் வந்து விட்டாலே பலருக்கும் சிவபெருமானுக்கு நடைபெறும் அன்னாபிஷேகம் தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு மிகச்சிறப்பு வாய்ந்தது. அந்த மாத பௌர்ணமி நாளில் நடைபெறும் இந்த அன்னாபிஷேக நிகழ்வு அனைத்து சிவாலயங்களிலும் நடைபெறும்.
சாஸ்திரத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாத பௌர்ணமி நாளிலும் அந்த நட்சத்திரத்திற்குரிய பொருளால் சிவபெருமானுக்கு வழிபாடு செய்யப்படுகிறது. அந்த வகையில் ஐப்பசி மாதம் அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. மற்ற மாதங்களை விட ஐப்பசி மாதம் தான் சந்திரன் தனது சாபம் முழுமையாக நீங்கி முழு பொலிவுடன் 16 கலைகளுடன் காட்சி தருவதாக ஐதீகம் உள்ளது. அதனால் தான் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பூமிக்கு மிக அருகில் நிலவு வந்து தனது முழு ஒளியையும் வீசி நிலப்பரப்பை பிரகாசமடைய செய்கிறது என நம்பப்படுகிறது.
ஐம்பூதங்களும் அடைக்கலாகும்
அதேசமயம் நவக்கிரகங்களில் சந்திரனுக்கு உகந்த தானியமாக அரிசி பார்க்கப்படுகிறது. அதனால் இன்றைய நாளில் சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்தால் உலகம் முழுவதும் மக்கள் சுபிக்ஷமாக திகழ்வார்கள் என்பது ஐதீகமாகும். அன்னாபிஷேகம் அன்று பயன்படுத்தப்படும் பொருட்களால் சிவபெருமான் அகமும், புறமும் குளிரும். இதனால் உலகம் குளிர்ந்து மக்கள் அனைத்து வித பலன்களையும் பெற்று மகிழ்ச்சியடைவார்கள் என்பது நம்பிக்கையாகும்.
இந்த அன்னாபிஷேகம் பின்னணியில் ஒரு சிறப்பு சொல்லப்படுகிறடு. அதாவது ஆகாயம் பிறக்கும் காற்றின் துணையுடன் தீ எரியும். அதனால் நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகும். இது நீரில் மூழ்கி வேக வைக்கப்பட்டு அன்னமாகிறது. ஆக இந்த ஐம்பூதங்களும் இணைந்து அபிஷேகமாகி இறைவனின் மேனி முழுவதும் படர்ந்து அவனுள் அடைக்கலமாகிறது. அதுவே பரம்பொருள் என சிவபெருமானை அழைக்க காரணமாகவும் அமைகிறது.
அன்னாபிஷேக வழிபாட்டின் பலன்கள்
இன்றைய நாளில் சிவலாயங்களில் நடக்கும் அன்னாபிஷேக நிகழ்வை கண்டால் சொர்க்கம் நிச்சயம் என சொல்லப்படுகிறது. இதுதான் சோறு (அன்னாபிஷேகம்) கண்ட இடம் சொர்க்கம் என சொல்லப்படுகிறது. அதேபோல் தொழில் வளர்ச்சி, வியாபாரத்தில் பிரச்னை, குழந்தையின் கல்வி வளர்ச்சி, திருமண தடை போன்ற பல விஷயங்களில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என நம்பப்படுகிறது.
அதன்படி 2025 ஆம் ஆண்டு ஐப்பசி மாத பௌர்ணமி நவம்பர் 5ம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இன்றைய நாளில் விரதமிருந்து வழிபடாம். ஆலயங்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் விதிமுறைகளைப் பின்பற்றி வழிபடலாம். அனைவரும் ஐப்பசி அன்னாபிஷேகத்தின் சிறப்பு பற்றியும், அதன் பாரம்பரியம் பற்றியும் அறிந்திருக்க வேண்டும் என ஆன்மிக அன்பர்கள் தெரிவித்துள்ளனர்.





















