(Source: ECI/ABP News/ABP Majha)
Aadi Pooram 2024: இன்று ஆடிப்பூரம்! அம்மனுக்கு வளைகாப்பு, திருக்கல்யாணம் - குவியும் பக்தர்கள்!
Aadi Pooram 2024: ஆடி மாதத்தில் மிகவும் நன்மைகள் நிறைந்த நாளாக கருதப்படும் ஆடிப்பூர நன்னாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக கோயில்களில் திருக்கல்யாணமும், அம்மனுக்கு வளைகாப்பும் நடைபெற உள்ளது.
தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாதமும், ஆன்மீகமான மாதமாக இருப்பது ஆடி மாதம். ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு நாளும் சிறப்பு வாய்ந்த நாள் ஆகும். அந்த வகையில் ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.
ஆடிப்பூரம்:
ஒவ்வொரு மாதத்திலும் வரும் பூரம் நட்சத்திரம் சிறப்பு என்றாலும், ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம் தனிச்சிறப்பு வாய்ந்தது ஆகும். இதுவே ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது. இன்று ஆடிப்பூர நன்னாள் ஆகும். இந்த நன்னாளிலே பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் அவதரித்தாக புராணங்கள் கூறுகிறது. மேலும், உமையாள் தேவி தோன்றிய நாளும் இதே ஆடிப்பூர நாள் என்று கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோயில்களிலும், சைவ மற்றும் வைணவ தலங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடிப்பூர நன்னாளான இன்று அனைத்து அம்மன் கோயில்களிலும் காலை முதல் சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. அதிகாலையிலே கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருக்கல்யாணம், வளைகாப்பு:
அம்மன் கோயில்களில் அம்மனுக்கு வளைகாப்பு பூஜை நடைபெற உள்ளது. இந்த வளைகாப்பில் அம்மனுக்கு வளையல்களால் மாலை அணிவித்து சிறப்பு பூஜை நடத்தப்படும். இந்த வளைகாப்பில் பெண்கள் பங்கேற்பது சிறப்பானது என்று கருதப்படுகிறது. அம்மனுக்கு அணிவித்த வளையல்களில் அணிவதால் குழந்தைப் பேறு இல்லாத பெண்களுக்கு குழந்தை உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்,
வைணவ தலங்களிலும் ஆடிப்பூரம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆண்டாள் அவதரித்த நாளாக கருதப்படும் இன்று புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஸ்ரீரங்கநாதனார் – ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும். ஆண்டாள் கோயில் மட்டுமின்றி வைணவ தலங்களில் ஆண்டாள் – ரங்கநாதன் திருக்கல்யாணம் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். திருக்கல்யாணத்தில் பங்கேற்று வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத் தடை நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும்.
போலீஸ் பாதுகாப்பு:
புகழ்பெற்ற ஆண்டாள் கோயில், மீனாட்சியம்மன் கோயில், சமயபுரம் அம்மன் கோயில் என புகழ்பெற்ற கோயில்களில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் குவிவார்கள் என்பதால் முன்னேற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது. முக்கியமான கோயில்களில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.