Aadi Perukku 2023: தமிழர்களின் மிக பழமையான பண்டிகை.. நவதானியம் தூவி வழிபடும் நாள்.. ஆடிப்பெருக்கை ஏன் போற்றுகிறார்கள் ?
ஆடிப்பெருக்கு நாளில் எதற்காக வழிபாடு நடத்துகிறார்கள் என அறிந்தால் நம் முன்னோர்களின் தீர்க தரிசனத்தையும் அறிவையும் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.
தமிழர்களின் மிக பழமையான பண்டிகை ஆடி18 தான். ஆடி பட்டம் விளைவிக்க வரும் காவிரித்தாயை கர்ப்பிணியாக கருதி காதோலை, கருகமணி, நவதானியம் தூவி வழிபடும் நாள்.
இந்த நாளில் காவிரி ,வைகை,தாமிரபரணி என ஆறுகளின் கரையோரம் எல்லாம் மக்கள் சந்தோசமா ஆற்றுக்கு போய் குடும்பத்தோடு குளிச்சு கரையில் பொங்கல் வெச்சு வழிபடும் நாள் சிலப்பதிகாரத்தில் குறிப்பு இருக்கிறது. அதே போல் பல சங்க இலக்கியங்களில் ஆடி 18 குறித்து குறிப்புகள் உள்ளன.
அந்த வகையில் ஆடிப்பெருக்கு நாளில் எதற்காக வழிபாடு நடத்துகிறார்கள் என அறிந்தால் நம் முன்னோர்களின் தீர்க தரிசனத்தையும் அறிவையும் கண்டு வியக்காமல் இருக்க முடியாது. தட்சணாயன புண்ணிய காலமான ஆடி மாதத்தில்தான் பொறுமையின் சிகரமான பூமாதேவி அவதரித்ததாகச் சொல்கின்றன புராணங்கள்.
வைபவங்கள் பல உண்டு:
தட்சணாயன புண்ணிய காலம் என்று சூரியனின் தென்திசைப் பயணத்தைக் குறிப்பிடுவர். இதில் முதல் மாதமாக ஆடியில் விவசாயிகள் உழவுப்பணிகளைத் துவங்குவர். ஆடிப்பட்டம் தேடிவிதை என்று சொல்வதுண்டு. நாடு செழிக்கத் தேவையான நீரைப் போற் றிப் பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கத் தில் நதியைத் தெய்வமாகப் போற்றி வழி பட்டவர்கள் நம் முன்னோர். அதற்குரிய வழிபாட்டு நாளாக ஆடி பதினெட்டாம் நாளைத் தேர்ந்தெடுத்தனர்.
ஆடிப் பெருக்கு….
தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர்வரத்து அதிகமாகிப் பெருக் கெடுத்து ஓடும். நதிகளும் நீர் நிரம்பிக் காணப்படும். பயிர் செழிக்க வளம் அருளும் அன்னை காவிரி நதியைப் பெண்ணாக - தாயாகப் பாவித்து வணங்கிப் போற்றும் ஆடிப்பெருக்கு எனும் மங்களவிழா தொன்று தொட்டு நிகழ்த்தப்படும் விழாவாகும். அனைவரையும் வாழ வைக்கும் அந்தக் காவிரித்தாய்க்கும் மற்ற நதிகளுக்கும் நன்றி செலுத்தும் விதமாகவே, "ஆடி பதினெட்டாம் விழா' கொண்டாடப்படுகிறது.
முக்கியமாக தமிழகத்தில், காவிரி, வைகை, பொருநை பெண்னறு ஓடும் ஊர்களில் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. காவிரியைத் தவிர தாமிரபரணி நதிகள் ஓடுகிற ஊர்களிலும் ஆடிப்பெருக்கு சிறப்புறக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மழை கொட்டித்தீர்த்துள்ளது. ஆறுகள் பொங்கி பிரவாகம் எடுத்துள்ளன. காவிரி கரையோரங்களிலும், தாமிரபரணி ஆற்றங்கரைகளிலும் ஆடிப்பெருக்கு உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது.
ஆடிபதினெட்டு கொண்டாட்டம்:
ஆடி பதினெட்டிற்குப் பத்து நாட்கள் முன்பாக நவதானியங்களை ஒரு தட்டில் தூவி, மண் அல்லது எரு கலந்து மூடி வை ப்பார்கள். அது வெண்மையாக முளைத்து வளர்ந்திருக்கும். அதை முளைப்பாலிகை அல்லது முளைப்பாரி என்பார்கள்.
ஆடி18 அன்று பிற்பகல் வேளையில் முளைப்பாலிகையை ஏந்தி ஊர்வலமாக ஆற்றுக்குச் செல்வர். தூய்மையான இடத்தில், பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைப்பர். அவரின் முன்னால், முளைப்பாலிகைகளை வரிசையாக வைப்பார்கள். அது முடிந்ததும் பச்சரிசி, சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, நீர் ஊற்றிக் கலந்து விநாயகரின் முன்னால் வைத்து வேண்டுவார்கள்.
வயதான சுமங்கலி ஒருவர், அங்கு வந்திருக்கும் பெண்களுக்கு மஞ்சள் தட விய நூலைக் கொடுப்பார். சிலர் கைகளிலும், சிலர் கழுத்திலுமாக கட்டிக் கொள்வார்கள். அதன் பின், அவரவர் கொண்டு வந்த முளைப்பாலிகை, பனை ஓலைகளால் செய்யப்பட்ட வட்டமான காதோலை, கருகுமணி ஆகியவற்றை நீரில் விடுவர். நுரைத்துச் சுழன்று வரும் காவிரித்தாயின் வரவால் பயிர் பச்சை எல்லாம் தழைக்கப் போகின்றன.
இந்த விழாவில் சிறப்பு அம்சமாக, ஆடிப்பெருக்கு அன்று ஆற்றங்கரையில் வைத்து சுமங்கலிப் பெண்கள் தாலிக்கு புது மஞ்சள்கயிறு மாற்றிக்கொள்வார்கள். ஏற்கனவே கழுத்திலிருந்த தாலிக்கயிற்றை, ஆற்றில் விட்டுவிட்டு, புதிய மஞ்சள் கயிற்றில் தாலியைக் கோர்த்து, கணவன் மூலமோ அல்லது சுமங்கலிப் பெண்கள் மூலமாகவோ தங்கள் கழுத்தில் அணிந்து கொள்வார்கள். இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.
காவிரிக்குச் சூல்:
காவிரித்தாய் இப்போது அவள் கருவுற்று இருக்கிறாள் என்ற ஐதீகத்தில் தான் இவையெல்லாம் செய்யப்படுகின்றன. சிறுவர்கள் சப்பரம் என்ற ஒன்றை (தேர் போல சிறியதாக இருக்கும்) அழகாக அலங்கரித்து, அதிகாலையிலிருந்தே வீதிகளி ல் சத்தமிட்டு இழுத்தபடி ஓடுவார்கள். மாலையில், அந்தச் சப்பரத்தின் உள்ளே, ஒரு சிறிய அகல்விளக்கை வைத்து மெது வாக இழுத்து வருவார்கள்.
சிறுமிகளும் கன்னியரும் சுமங்கலியரும் காவிரி நதிக்கரையில் கூடி - தலை வாழையிலையில் - காதோலை கருகும ணி, வளையல்கள், தாம்பூலம், எலுமிச்சங்கனி, விளாம்பழம், நாவற்பழம், வாழைப் பழம், பூச்சரம் இவற்றுடன் காப்பரிசியும் படைத்து தீபம் ஏற்றி தேங்காய் உடைத்து கற்பூரங்காட்டி வணங்கி - மஞ்சள் தடவிய நூலினை பழுத்த சுமங்கலிகளின் கையால் வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டு காவிரியில் பூச்சரங்களுடன் தீபங்களை மிதக்க விடுவது - பரவசமான மங்கல நிகழ்ச்சியாகும்.
ஸ்ரீ ரங்கநாதர் தங்கைக்குச் சீர்:
ஆடிப்பதினெட்டு அன்று - ஸ்ரீரங்கத்தில் காவிரிக்கரையின் அம்மா மண்டப படித். துறையில் - நம்பெருமாள் எழுந்தருளி - யானையின் மீது சீர்வரிசை கொண்டு வந்து கங்கையினும் புனிதமான காவிரி தாய்க்குச் சகல மரியாதையுடன் சமர்ப்பிக்கின்றார்.
புராணக் கதை :
குருச்ஷேத்திரப் போரின் முதல் நாள், பாண்டவர் படைகள் அபிமன்யுவால் காக்கப்பட்டும், பீஷ்மரின் அம்புகளால் பலத்த சேதமடைந்தது. உத்தரனும், சுவேதனும், சல்லியனாலும், பீஷ்மராலும் கொல்லப் பட்டனர். பாண்டவர் படைகள் முதல் நாள் போரில் படுதோல்வி அடைந்ததை சரிகட்ட, பீஷ்ம ரைக் கொல்ல அணி வகுத்தனர். ஆனால் கௌரவர் படைகள் பீஷ்மரைக் காத்து நின்று போரிட்டது.
பீஷ்மரைக் கொல்ல சிகண்டியைப் போர்க்களத்தில் பீஷ்மருக்கு எதிராக நிறுத்திப் போரிட கிருஷ்ணர் ஆலோசனை கூறினார். கிருஷ்ணரின் ஆலோசனையின் படி சிகண்டியை பீஷ்மருக்கு எதிராகப் போரிட போர்க்களத்திற்கு அனுப்பினர்.
இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சிகண்டியின் பின் இருந்து, அர்ஜூனன் தனது அம்புமழையால் பீஷ்மரின் உடலை சல்லடையாக துளைத்தெடுத்து, அம்புப்படுக்கையில் கிடத்தினான். இப்படி தொடர்ந்து 15 நாள் போர் நடக்க ஒவ்வொருவராக போரில் இறந்து கொண்டே வந்தனர்.
16ஆம் நாள் போரில் கௌரவர்களின் தலைமைப் படைத்தலைவராக கர்ணன் நியமிக்கப்பட்டான். கர்ணனின் தேரை சல்லியன் ஓட்டினார். கர்ணன் போரில் இலட்சக்கணக்கான பாண்டவப்படைகளைக் கொன்றான். அர்ஜூ னன் தனது கூர்மையான அம்புகளால் கர்ணனின் தாக்குதலைத் தடுத்து நிறுத்தினான்.
கர்ணன், தருமரையும் சகாதேவனையும் போரில் வென்றாலும், தன் தாய் குந்திக்கு வழங்கிய வரத்தின்படி, கொல்லாமல் விட்டு விட்டான். ஆயிரக்கணக்கான பாண்டவப்படைகளைத் தனது கூரிய அம்புகளால் கொன்று பின் அர்ஜூனனைக் கொல்ல அம்பு மழை பொழிந்து கடுமையாக போரிட்டான்.
ஒரு நேரத்தில், கர்ணன் அர்ஜூனனை கொல்ல, அர்ஜூனனின் கழுத்துக்கு குறி வைத்து நாகபாணத்தை ஏவினான். அப்போது கிருஷ்ணர், அர்ஜூனனின் தேரை ஒரு அடி கீழே அழுத்தினார். அர்ஜூனனின் தேர் பூமிக்குக் கீழ் ஒரு அடி இறங்கியது. அதனால் கர்ணன் ஏவிய நாகபாணம், அர்ஜூனனின் கழுத்தை தாக்காது, அவனின் தலைக்கவசத்தை தாக்கியதால், அர்ஜூனனின் தலைக்கவசம் மட்டுமே கீழே விழுந்தது. கிருஷ்ணரி ன் போர் தந்திரத்தால் அர்ஜூனன் உயிர் பிழைத்தான்.
குருச்ஷேத்திரப் போரின் இறுதியில் கர்ணனின் தேர்ச்சக்கரம் சகதியில் மாட்டிக் கொண்டது. கர்ணன் தேரைச் சகதியில் இருந்து மீட்கும் நேரத்தில், கிருஷ்ணர் அர்ஜூனனை கர்ணனின் மீது அம்புகள் ஏவச் சொன்னார். இந்திரன், கர்ணனின் கவச குண்டலங்கள் தானமாகப் பெற்றுக் கொண்டபடியால், தெய்வீகக் கவசம் இல்லாத கர்ணனின் மீது செலுத்தப்பட்ட அர்ஜூனனின் கூரிய அம்புகள் கர்ணனின் நெஞ்சைச் சல்லடை யாக துளைத்தன. அதனால் கர்ணன் போரில் மடிந்தான்.
அதர்மம் அழிக்கப்பட்டு, தர்மம் நிலைநாட்டப்பட்ட இந்த நாள் தான் பதினெட்டாம் போர் என்று அழைக்கப்படும் ஆடி 18 ஆம் நாளாகும்.
🌺நடந்தாய் வாழி காவேரி...
நாடெங்குமே செழிக்க.....
நன்மையெல்லாம் சிறக்க.....
நடந்தாய் வாழி காவேரி...
கட்டுரையாளர்: கே.எஸ். ராதாகிருஷ்ணன் - சமூக, அரசியல் ஆய்வாளர்