தஞ்சை மாவட்டத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட ஆடிப் பெருக்கு விழா
இன்று ஆடி 18-ம் நாள் விழா எனப்படும் ஆடிப்பெருக்கு விழாவை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதை ஒட்டி தஞ்சை மாவட்டத்தில் நீர் நிலைகளில் கோலாகலமாக கொண்டாடினர்.
தஞ்சாவூர்: இன்று ஆடி 18-ம் நாள் விழா எனப்படும் ஆடிப்பெருக்கு விழாவை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதை ஒட்டி தஞ்சை மாவட்டத்தில் நீர் நிலைகளில் புதுமணத் தம்பதிகள் உட்பட பொதுமக்கள் ஆடிபெருக்கு விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.
ஆடிப்பெருக்கு விழாவை எதற்காக கடைப்பிடித்து வருகிறோம் என அறிந்தால் நம் முன்னோர்களின் தீர்க்க தரிசனத்தையும் அறிவையும் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.
தக்ஷிணாயன புண்ணிய காலமான ஆடி மாதத்தில்தான் பொறுமையின் சிகரமான பூமாதேவி அவதரித்ததாகச் புராணங்கள் வாயிலாக அறியமுடிகிறது. இந்த மாதத்தில் வரும் திதி, நட்சத்திரம் மற்றும் கிழமைகள் யாவும் மகிமை வாய்ந்தன என்று ஜோதிட சாஸ்திர நூல்கள் பலவும் சிறப்பிக்கின்றன. ஆடிப்பிறப்பு, சர்வ நதி ரஜஸ்வலா, ஆடிப்பதினெட்டில் ஆடி பெருக்கு, நாக தோஷ பூஜை, புதுமணத் தம்பதிக்கு ஆடிப்பால் அளித்தல் இப்படி, நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஆடிமாத விசேஷ வைபவங்கள் பல உண்டு.
தக்ஷிணாயன புண்ணிய காலம் என்று சூரியனின் தென்திசைப் பயணத்தைக் குறிப்பிடுவர். இதில் முதல் மாதமாக ஆடியில் விவசாயிகள் உழவுப்பணிகளைத் துவங்குவர். ஆடிப்பட்டம் தேடி விதை என்று சொல்வதுண்டு. நாடு செழிக்கத் தேவையான நீரைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நதியைத் தெய்வமாகப் போற்றி வழிபட்டவர்கள் நம் முன்னோர். அதற்குரிய வழிபாட்டு நாளாக ஆடி பதினெட்டாம் நாளைத் தேர்ந்தெடுத்தனர்.
தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர்வரத்து அதிகமாகிப் பெருக்கெடுத்து ஓடும். நதிகளும் நீர் நிரம்பிக் காணப்படும். பயிர் செழிக்க வளம் அருளும் அன்னை காவிரி நதியைப் பெண்ணாக - தாயாகப் பாவித்து வணங்கிப் போற்றும் ஆடிப் பெருக்கு எனும் மங்கள விழா தொன்று தொட்டு நிகழ்த்தப்படும் விழாவாகும். அனைவரையும் வாழ வைக்கும் அந்தக் காவிரித்தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாகவே, "ஆடி பதினெட்டாம் விழா' கொண்டாடப்படுகிறது.
அதன்படி தஞ்சையில் பெருக்கெடுத்து ஓடும் கல்லணை கால்வாய் படித்துறைகளில் இன்று காலை முதலே பொதுமக்கள் குவிய தொடங்கினர். புதுமண தம்பதிகள் தங்களது மாங்கல்யத்தை கோர்த்து புதிதாக அணிந்து கொண்டனர். இதேபோல் புகழ்பெற்ற திருவையாறு காவிரி புஷ்ய மண்டபதுறையில் காவிரியின் இருகரைகளிலும் திரண்ட பொதுமக்கள் பூ, பழம், மஞ்சள், காதோலை, கருகமணி உள்ளிட்ட மங்கலப் பொருட்களை வைத்து, காவிரித்தாயை வழிபட்டனர். மேலும் புதுமண ஜோடிகள், காவிரி கரைக்கு வந்து தங்களது திருமணத்தின் போது அணிந்திருந்த மாலையை ஆற்றில் விட்டனர்.
சுமங்கலி பெண்கள் தாலியை பிரித்து புதுத்தாலியை கட்டிக் கொண்டனர். மேலும் கும்பகோணம் மகாமககுளத்திலும் ஏராளமான பொதுமக்கள் ஆடிப்பெருக்கு விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.