World Television day: வீட்டுக்குள்ளேயே உலகம்..மக்களின் ஆதர்சம்...உலக தொலைக்காட்சி தினம் ஒரு பார்வை!
டிவி இன்று ஒவ்வொரு வீட்டிலும் இன்றியமையாத அங்கமாக வளர்ந்துள்ளது. தகவல், பொழுதுபோக்கு மற்றும் கல்வி தொடர்பான அனைத்தையும் அதில் காணலாம்.
”உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக...” எனத் தொலைக்காட்சிகளில் அடிக்கடி கனீர் குரல் ஒளிப்பதைக் கேட்டிருப்போம். அந்தத் தொலைக்காட்சிதான் நமக்கு சூப்பர் நோவா முதல் சூப்பர் ஸ்டார் வரை அனைத்தும் அறிமுகப்படுத்தியது என்றால் மிகையல்ல. இன்று அந்தத் தொலைக்காட்சிகளின் தினம். நவம்பர் 21 அன்று, தொலைக்காட்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட நாளாக அனுசரிக்கப்படுகிறது. ஒரு தொழில்நுட்பமாக தொலைக்காட்சியை அனுகுவதை விட தொலைக்காட்சி என்கிற யோசனையைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த நாள் அங்கீகரிக்கப்படுகிறது. நவீன உலகில், தொலைக்காட்சி என்பது தகவல் தொடர்பு மற்றும் உலகமயமாக்கலின் பிரதிநிதித்துவம் ஆகும். ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, திரை அளவுகள் மாறினாலும், மக்கள் பல்வேறு தளங்களில் உள்ளடக்கத்தை உருவாக்கி, பகிர்ந்து, பார்க்க உலகளவில் தொலைக்காட்சிகளைக் கொண்ட வீடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பாரம்பரிய மற்றும் சமகால ஒளிபரப்பு வடிவங்களின் கலவையானது தொலைக்காட்சி மக்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் உலகளாவிய பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்கான தளமாக இயங்குகிறது.
ஃபிலோ டெய்லர் ஃபார்ன்ஸ்வொர்த் என்கிற ஒரு அமெரிக்க கண்டுபிடிப்பாளர் 1927ல் முதல் மின் தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தார். சார்லஸ் பிரான்சிஸ் ஜென்கின்ஸ் கட்டிய முதல் இயந்திர தொலைக்காட்சி நிலையமான W3XK அதன் முதல் நிகழ்ச்சியை தொலைக்காட்சி கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வருடம் கழித்து ஒளிபரப்பியது. டிசம்பர் 17, 1996 அன்று, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை நவம்பர் 21 ஐ உலக தொலைக்காட்சி தினமாக தீர்மானம் மூலம் அறிவித்தது.
தொலைக்காட்சியின் வளர்ந்து வரும் செல்வாக்கை அதிகரிப்பதற்காக இந்த அறிவிப்பை ஐநா வெளியிட்டது. தொலைக்காட்சிகள் மூலம், உலகில் நடக்கும் அனைத்தையும் நாம் வாழும் அறைகளுக்குள் இருந்தபடியே பார்த்துக் கொள்ளலாம்.
தொலைக்காட்சிக்கு இல்லாத முந்தைய வாழ்க்கை முறை பற்றி நம் தாத்தா, பாட்டி அல்லது பெரியவர்களிடம் கேட்டால், அவர்கள் வானொலியைக் கேட்பது மட்டுமல்லாமல் செய்தித்தாள்களையும் புத்தகங்களையும் படிப்பார்கள் என்று அடிக்கடி குறிப்பிடுகிறார்கள்.
டிவி இன்று ஒவ்வொரு வீட்டிலும் இன்றியமையாத அங்கமாக வளர்ந்துள்ளது. தகவல், பொழுதுபோக்கு மற்றும் கல்வி தொடர்பான அனைத்தையும் அதில் காணலாம். பண்பாட்டு அசைவுகளைக் கடத்துவதற்கு தொலைக்காட்சி இப்போது ஒரு முக்கியமான ஊடகமாக உள்ளது. கலாச்சாரம் மற்றும் பொது கருத்து ஆகியவற்றின் அடிப்படையில் தொலைக்காட்சி நிகழ்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
நவீன சமூகம் தொலைக்காட்சியால் கணிசமாக பாதிக்கப்படுகிறது. தொலைக்காட்சி ஒளிபரப்பும் செய்திகள் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பொதுமக்களின் நடத்தை மற்றும் மனநிலை ஆகியவை இந்த செய்திகளால் பாதிக்கப்படுகின்றன.
மொத்தத்தில் உணவு, உடை இருக்க இடம் போல தொலைக்காட்சியும் இன்றி அமையாத அம்சமாக மாறிவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.