World's Dirtiest Man : 50 ஆண்டுகளாக குளிக்காத ‘ உலகின் அழுக்கு மனிதர்’ ! - குளித்த ஒரே மாதத்தில் உயிரிழப்பு !
அமு ஹாஜிக்கு குளிப்பது என்றாலே பயம்தான் . காரணம் அவர் குளித்தால் தான் உயிரிழந்துவிடுவதாக நம்பினார்.
நோய் வந்துவிடுமோ என்ற பயத்தில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக குளிக்காமல் இருந்த உலகின் அழுக்கு மனிதர் ('World's Dirtiest Man' ) என அழைக்கப்பட்ட நபர் ஈரானில் உயிரிழந்தார்.
துவைக்காத உடைகள் , உடலெங்கும் அழுக்கு என தனிமையில் வாழ்ந்து வந்த அமு ஹாஜி என்ற 94 வயது முதியவர் ஈரானின் தெற்கு மாகாணமான ஃபார்ஸில் உள்ள தேஜ்கா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக குளிக்காமல் , சுத்தமே இல்லாமல் தனிமையில் வசித்து வந்த அமு ஹாஜிக்கு குளிப்பது என்றாலே பயம்தான் . காரணம் அவர் குளித்தால் தான் உயிரிழந்துவிடுவதாக நம்பினார். அந்த ஊரில் அவரை சிலர் துறவியாக கருதுகின்றனர். சிலரோ அவர் சிறு வயதில் தண்ணீரால் சில அவமானங்களையும் , உணர்வு அடிப்படையிலான பின்னடைவையும் சந்தித்திருக்கலாம் , அதனால்தான் அவர் தண்ணீர் என்றாலே வெறுத்து ஒதுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என கூறுகின்றனர்.
அந்த ஊர் கிராம மக்கள் பலமுறை அமு ஹாஜியை குளிக்க வைக்க முயற்சித்துள்ளனர். ஒரு முறை தொண்டு நிறுவனம் ஒன்று அவரை காரில் அழைத்துச்சென்று அருகில் உள்ள ஆற்றில் குளிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறது. முதலில் எங்கேயோ அழைத்து செல்கிறார்கள் என நினைத்தவர் பின்னர் குளிக்க அழைத்து செல்வதை அறிந்து ஓடும் காரிலிருந்து குதித்திருக்கிறார். புதிதாக சமைக்கப்பட்ட உணவுகள் ஹாஜிக்கு சுத்தமாக பிடிக்காதாம் . அதுவும் தன்னை கொன்றுவிடும் என அவர் நம்பினார். இதனால் அவர் அழுகிய நிலையில் இருக்கும் மாமிசங்களை மட்டுமே சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதே போல விலங்குகளின் கழிவுகளை ஒரு குழாயில் அடைத்து அதைத்தான் புகைத்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில்தான் சமீபத்தில் உள்ளூர் வாசிகள் சிலர் அங்கிருந்த குளியலறை ஒன்றில் அவரை குளிக்க வைத்திருக்கின்றனர். இந்த சம்பவம் நடந்து சரியாக ஒரு மாதத்தில் ஹாஜி உயிரிழந்துவிட்டார். ஹாஜியின் இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை இரவு ஃபராஷ்பந்த் நகரில், ஃபார்ஸ் பகுதியில் நடைப்பெற்றது. கடந்த 2013 ஆம் ஆண்டு "தி ஸ்ட்ரேஞ்ச் லைஃப் ஆஃப் அமு ஹாஜி" என்ற தலைப்பில் ஹாஜியின் வாழ்க்கை ஆவணப்படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலகின் அழுக்கு மனிதர் என்ற பட்டத்தை வைத்திருந்த ஈரானின் ஹாஜி உயிரிழந்ததால் , அவருக்கு அடுத்து அந்த பட்டம் மேற்கு மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 67 வயதான முதிவருக்கு கிடைத்திருக்கிறது. இவர் கடந்த 30 ஆண்டுகளாக குளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.