WHO: இருமல் மருந்தால் 18 குழந்தைகள் பலியான விவகாரம்.. 2 இந்திய மருந்துகளை எடுக்க வேண்டாம் என WHO எச்சரிக்கை
உஸ்பெகிஸ்தான் நாட்டில் இருமல் மருந்து குடித்து 18 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட இரண்டு மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உஸ்பெகிஸ்தான் நாட்டில் இருமல் மருந்து குடித்து 18 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட இரண்டு மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் உயிரிழந்தது. இந்த சம்பவம் உலக நாடுகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி உஸ்பெகிஸ்தான் நாட்டில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது. கடுமையான சுவாச நோயால் பாதிக்கப்பட்ட 21 குழந்தைகளில் 18 பேர் இந்திய மருந்து நிறுவனம் தயாரித்த மருந்துகளை உட்கொண்டதால் உயிரிழந்ததாக உஸ்பெகிஸ்தானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த குழந்தைகள், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்னால் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட Doc-1 Max syrup மருந்தை அதிகமாக எடுத்துக் கொண்டது கண்டறியப்பட்டது. அதாவது நாள் ஒன்றுக்கு 3 அல்லது 4 முறை 2.5-5 மில்லி அளவில் ஒரு வார காலமாக மருந்தை உட்கொண்டுள்ளனர்.
மேலும் மருந்தின் முலக்கூறு பாராசிட்டமால் என்பதால், டாக்-1 மேக்ஸ் சிரப்பை பெற்றோர்கள் சளிக்கு எதிரான மருந்தாக நினைத்து, மருந்தக விற்பனையாளர்களின் பரிந்துரையின் பேரில் தவறாகப் பயன்படுத்தினார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது வாந்தி, மயக்கம், வலிப்பு, இருதய பிரச்சினைகள் மற்றும் கடுமையான சிறுநீரக செயலிழப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது.
குழந்தைகள் இறந்த சம்பவத்தில் கவனக்குறைவாக இருந்ததற்காக மொத்தம் ஏழு ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதுதொடர்பான விசாரணையில் உஸ்பெக் மாநில பாதுகாப்பு சேவை நான்கு பேரை கைது செய்தது. அதேசமயம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துமாறும், மருந்துக் கடைகளில் மருந்துச் சீட்டு மூலம் மட்டுமே மருந்துகளை வாங்குமாறும் அமைச்சகம் கேட்டுக் கொண்டது.
இந்நிலையில் உஸ்பெகிஸ்தான் நாட்டில் குழந்தைகள் மரணத்திற்கு காரணமான இந்தியாவின் நொய்டாவைச் சேர்ந்த மரியன் பயோடெக் தயாரித்த Ambronol and DOK-1 Max ஆகிய இரண்டு இருமல் மருந்துகளை குழந்தைகளுக்குப் பயன்படுத்தக்கூடாது என்று உலக சுகாதார அமைப்பு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.