சவப்பெட்டிக்குள் தாயின் உடையுடன் வேறு உடல்.. அதிர்ந்த குடும்பம்..!
அமெரிக்காவின் வட கரோலினாவைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் தங்கள் தாயை புதைப்பதற்கு வைத்திருந்த சவப்பெட்டிக்குள் வேறு ஒருவரின் உடல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
ஜெனிபர் டெய்லர் மற்றும் ஜென்னெட்டா ஆர்ச்சர் ஆகியோர் அஹோஸ்கி சவ அடக்க இல்லத்தில் செப்டம்பர் 7-ஆம் தேதி தங்கள் தாயின் உடலைப் பார்க்கச் சென்றபோது அங்கு நடந்திருந்த தவறை கண்டுகொண்டதாக, வேவி என்னும் உள்ளூர் செய்தி சேனல் தெரிவித்துள்ளது. இறுதி சடங்கு நடக்கும் இடத்தின் உள்ளே சென்று பார்க்கையில் அவர்களின் தாயாரின் உடையில் வேறு ஒரு பெண்ணின் உடல் இருந்துள்ளதை கவனித்திருக்கிறார்கள்.
ஜெனிபர் டெய்லர் மற்றும் ஜென்னெட்டா ஆர்ச்சர் ஆகிய இருவரின் தாயார் மேரி கடந்த மாதம் இறந்துவிட்டார். இறுதிச் சடங்கிற்காக வந்தபோது, அவர்களுக்கு தெரியாத யாரோ ஒரு பெண்ணின் உடல் உள்ளே இருப்பதை கண்டனர். "இது எப்படி நடக்கும் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை," என்று டெய்லர் இந்த வாரம் ஒரு நேர்காணலில் உள்ளூர் செய்தி சானலில் கூறியிருந்தார். "அதில் இருந்த நபருக்கும் எங்கள் அம்மாவுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை" என்று ஆர்ச்சர் கூறினார். "முற்றிலும் வேறாக இருந்தது, அவரை என் தாயுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறியவர் என்பதால் பார்த்தவுடன் அறிந்துகொள்ள முடிந்தது" என்றார். அஹோஸ்கியில் உள்ள ஹன்டரின் ஃப்யூனரல் ஃபார்மில், பெட்டிக்குள் இருந்த நபர் வேறு யாரோ என்றும் தனது தாயார் இல்லை என்றும் அந்த சகோதரிகள் மறுத்து அங்குள்ள எம்பாமிங் அறையில் தேடினார்கள். அவர்களின் தாயாரின் உடல் எம்பாமிங் அறையில் வைக்கப்பட்டிருந்தது என்று அறிக்கை கூறுகிறது. உடனடியாக உடல்களை மாற்றித் தந்துவிட்டார்கள் எனும்போதும், அவ்வாறு உடல்களுக்கு உடைகள் மாற்றும் வேலை எதற்கு என்று சகோதரிகள் சந்தேகப்படுகிறார்கள்.
"சவ அடக்க இல்லத்தில் வேலை செய்பவர்கள் தவறு செய்யவில்லை என்று காட்ட, அவர்கள் உடனடியாக முன் வந்து எங்களிடம் பேசி இருந்தால் அது வேறு சூழ்நிலையாக இருந்திருக்கும், இப்போது வந்து வருத்தம் தெரிவிப்பதில் ஏதோ மர்மம் உள்ளது" என்று ஆர்ச்சர் கூறினார். உடல்கள் விரைவாக மீண்டும் மாற்றித் தரப்பட்டன. மேரி ஆர்ச்சரின் இறுதிச்சடங்கு வேலைகள் தொடர்ந்தன. இருப்பினும், அந்த நிலைமையை அவ்வாறு கையாண்டதில் தங்களுக்கு அதிருப்தி இருப்பதாக சகோதரிகள் கூறினர். அதனால் தங்களுக்கு பெரும் அளவில் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், ஒருவிதமான அவமான உணர்வு ஏற்பட்டதாகவும் கூறியிருந்தனர். சவ அடக்க இல்லத்தின் தரப்பில் விசாரித்தபோது, மன்னிப்புக் கேட்க குடும்பத்தை அணுகியதாகக் கூறியது, ஆனால் டெய்லர் மற்றும் ஆர்ச்சர் அவர்கள் இறுதிச் சடங்கி அமைப்பிலிருந்து அழைப்பு வரவில்லை என்றும், அவர்களின் கேள்விகளுக்கான பதிலுக்காகக் காத்திருப்பதாகவும் கூறினர்.