துப்பாக்கி முனையில் கடத்தல்..! கைக்குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை...! அமெரிக்காவில் இந்தியர்களுக்கு நிகழ்ந்த கொடூரம்..!
அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கைக்குழந்தை உள்பட 4 பேர் துப்பாக்கி முனையில் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் மிகப்பெரிய வல்லரசு நாடாக வலம் வரும் அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த பலரும் வசித்து வருகின்றனர். அமெரிக்காவின் பிரபல மாகாணமான கலிபோர்னியாவிலும் இந்தியாவைச் சேர்ந்த பலரும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கலிபோர்னியாவில் வசித்து வந்த பஞ்சாபைச் சேர்ந்த சீக்கிய குடும்பத்தினரை துப்பாக்கி முனையில் கடத்தி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வந்தவர் ஜஸ்தீப்சிங். அவருக்கு வயது 36. அவரது மனைவி ஜஸ்லின் கவுர், வயது 27. இவர்களுக்கு அரூஹி தேரி என்ற 8 மாதக் கைக்குழந்தை இருந்தது. இவர்களுடன் ஜஸ்தீப்சிங்கின் அண்ணன் அமன்தீப்சிங் ( வயது 39) வசித்து வந்தார். இந்த நிலையில், அவர்களது வீட்டு அருகே உள்ள பழத்தோட்டம் அருகே கலிபோர்னியா நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் நான்கு பேரும் சடலமாக இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
BREAKING: The Merced County Sheriff says “their worst fears have been confirmed” and deputies have found the bodies of each of the 4 family members, including the 8 month old, who we were kidnapped on Monday. @KSEE24 @CBS47 pic.twitter.com/75p7Mh1eQj
— Katherine Phillips (@KatPhillipsTV) October 6, 2022
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த மாகாண போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் நான்கு பேரும் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சி.சி.சி.டி. கேமராக்களை ஆய்வு செய்தபோது இவர்களை துப்பாக்கி முனையில் ஒருவர் மிரட்டி அழைத்துச் சென்றது தெரியவந்தது.
இப்போது, போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் ஜூசஸ் மானுவேல் சலாடோ என்ற நபரை கைது செய்துள்ளனர். அவர் உயிரிழந்த ஒருவரின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தியுள்ளார். மேலும், சலோடா தற்கொலைக்கு முயற்சி செய்ததையடுத்து, அவரை மருத்துவமனையில் தற்போது கண்காணிப்பில் உள்ளார்.
சி.சி.டி.வியில் சந்தேகத்திற்குரிய நபர் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை மிரட்டி டிரக்கில் அழைத்துச்செல்வது தெளிவாக பதிவாகியுள்ளது. அந்த டிரக் உயிரிழந்த அமன்தீப்சிங்கிற்கு சொந்தமானது. ஜஸ்லினை கடைசியாக தான் அந்த சந்தேகத்திற்குரிய நபர் டிரக்கில் அழைத்துச் சென்றுள்ளார். மேலும், தீயணைப்பு துறையினர் அமன்தீப்பின் டிரக் தீப்பற்றி எரிவதையும் கண்டுபிடித்துள்ளனர்.
ஜஸ்தீப் – ஜஸ்லின் இடையே கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர், கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் அமெரிக்காவிற்கு குடியேறினர். உயிரிழந்த ஜஸ்தீப்சிங் தனது குடும்பத்தினருடன் அடுத்தாண்டு ஜனவரி மாதம் ஜஸ்லின் குடும்பத்தினருக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். தங்களது பேரக்குழந்தையை முதன்முறையாக பார்ப்பதற்காக ஆவலுடன் இருந்த ஜஸ்லினின் குடும்பத்தினர் இந்த சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
ஜஸ்தீப்சிங் குடும்பத்தினரும் இந்த சோகம் தாங்க முடியாமல் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த சம்பவம் பஞ்சாப் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவத்திற்கு பஞ்சாப் முதலமைச்சர் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க : Nobel Prize 2022 Literature: இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆனி எர்னாக்ஸ்-க்கு அறிவிப்பு; எதற்கு தெரியுமா?
மேலும் படிக்க : Thailand Mass Shooting; தாய்லாந்தில் குழந்தைகள் காப்பகத்துக்குள் திடீர் துப்பாக்கிச் சூடு: 34 பேர் உயிரிழப்பு - என்ன நடந்தது?