சீனாவை தொடர்ந்து அமெரிக்காவும் உளவு பலூனை அனுப்பியதா? வெள்ளை மாளிகை சொன்ன பதில்...
சீனா மீது உளவு பலூன்களை பறக்கவிடவில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளதாக வெள்ளை மாளிகையை மேற்கோள்காட்டி அமெரிக்க செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனா மீது உளவு பலூன்களை பறக்கவிடவில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளதாக வெள்ளை மாளிகையை மேற்கோள்காட்டி அமெரிக்க செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 10 முறைக்கு மேல் அனுமதியின்றி தனது வான்வெளியில் அதிக உயரத்தில் பலூன்கள் பறந்ததாக சீனா குற்றம் சாட்டிய நிலையில் வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் பெய்ஜிங்கில் செய்தியாளர் சந்திப்பின் போது, “கடந்த ஆண்டு முதல், அமெரிக்காவின் உயரமான பலூன்கள், சீன வான்வெளியில் 10க்கும் மேற்பட்ட சட்டவிரோத விமானங்களை, சம்பந்தப்பட்ட சீன துறைகளின் அனுமதியின்றி வானில் பறக்கவிட்டுள்ளது. இருப்பினும், வட அமெரிக்க வான்வெளியில் அமெரிக்க ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட வான்வழி பொருட்களை பற்றி கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது. அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த பொருள் முதன்முதலில் சனிக்கிழமையன்று மொன்டானாவில் இராணுவ தளங்களுக்கு அருகில் பறந்தது என கூறப்படுகிறது. US North American Aerospace Defense Command (NORAD) இது ராணுவ அச்சுறுத்தலாக கருதவில்லை ஆனால் பாதுகாப்பு கருதியும், அதன் கண்காணிப்பு திறன் காரணமாகவும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறியுள்ளது.
சீனா உளவு பலூன்:
சீனாவின் உளவு பலூன் ஒன்று அமெரிக்காவின் அணு ஆயுத ஏவுதளத்திற்கு மேலே பறந்தது பெரிய சர்ச்சைக்கு உள்ளானது. அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளின்கன் பீஜிங்குக்கு செல்வதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த சர்ச்சை வெடித்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
வானில் பறந்த அந்த பலூன் ஆனது சுமார் 3 முழு நீள பேருந்துகளின் அளவிற்கு வடிவத்தில் பெரியது. அதில், அதிக எடையுடன் கூடிய இயந்திரங்களுடன், வழிகாட்டுதல் மற்றும் தகவல்களைச் சேகரிப்பதற்கான மின்னணுவியல், பெரிய சோலார் பேனல்களையும் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. மேலும் வானில் சுமார் 80 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அமெரிக்காவின் கைவசம் உள்ள அதிநவீன போர் விமானங்கள் கூட அதிகபட்சமாக 65 ஆயிரம் அடி உயரத்திற்கு தான் பறக்க முடியும். அதனால் அந்த பலூனை சுட்டு வீழ்த்துவது கடினமாக இருந்தது. அதேநேரம், தற்போதுள்ள ஆயுதங்களை கொண்டு அழிக்கப்படும் அளவிற்கு, எளிதான வடிவமைப்பையும் அது கொண்டிருக்கவில்லை.
அந்த பலூன் செய்யப்பட்டுள்ள பொருளின் தடிமனானது. ஒரு சாண்ட்வெஜ் அளவிலான தடிமனான பிளாஸ்டிக் பொருளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை அதிநவீன ஆயுதங்களை கொண்டு, அந்த பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தினாலும், அதிலுள்ள அதிக எடையிலான பொருட்கள் கீழே விழுந்தால் பொதுமக்கள் பாதிக்கப்படலாம் என்பதால், அமெரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது. இந்த சூழலில் கரோலினா கடற்கரையில் இருந்து அமெரிக்க இராணுவம் சீனா உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது.