Trump Vs 'NO KINGS' Protest: அமெரிக்காவில் வெடித்த “நோ கிங்ஸ்“ போராட்டங்கள்; “நான் ராஜா இல்ல“; ஏஐ வீடியோவுடன் ட்ரம்ப் பதில்
அமெரிக்கா முழுவதும் அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக “நோ கிங்ஸ்“ என்று குறிப்பிட்டு போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், நான் ராஜா இல்லை என்று கூறியுள்ளதோடு, சில ஏஐ வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை அரசராக சித்தரித்து, அமெரிக்கா முழுவதும் “நோ கிங்ஸ்“, அதாவது, “அரசர்கள் இல்லை“ என்று எழுதப்பட்ட வாசகங்களுடன் மக்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர். இதற்கு, தான் அரசன் இல்லை என்று பதிலளித்துள்ள ட்ரம்ப், அவரை கிண்டல் செய்யும் சில ஏஐ வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்கா முழுவதும் வெடித்த “அரசர்கள் இல்லை“ போராட்டங்கள்
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குடியேற்றம், பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பான கொள்கைகளை எதிர்த்து அமெரிக்கா முழுவதும் 2,500-க்கும் மேற்பட்ட பேரணிகளை போராட்டக்காரர்கள் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ட்ரம்பின் கீழ் அரசாங்கம் சர்வாதிகாரத்திற்குள் விரைவாக நகர்வதை பங்கேற்பாளர்கள் கண்டித்துள்ளனர்.
வாஷிங்டன், பாஸ்டன், அட்லாண்டா, சிகாகோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பல மாகாணங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி நடத்தினர். குடியரசுக் கட்சி தலைமையிலான பல மாகாணங்களில் தலைநகரங்களுக்கு வெளியேயும், மொன்டானாவின் பில்லிங்ஸில் உள்ள நீதிமன்ற வளாகத்திலும், நூற்றுக்கணக்கான சிறிய பொது இடங்களிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, "போராடுவதை விட தேசபக்தி எதுவும் இல்லை" அல்லது "பாசிசத்தை எதிர்ப்போம்" போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை மக்கள் ஏந்திச் சென்றனர்.
எதற்காக இந்த போராட்டம்.?
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின், அரசின் பொருளாதார கொள்கைகளை மாற்றினார். அதன் அடிப்படையில் அமெரிக்க அரசின் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையிலும் இறங்கினார். அதைத் தொடர்ந்து, அமெரிக்க தயாரிப்புகளுக்கு வெளிநாடுகள் விதிக்கும் அதே அளவு வரியை, பரஸ்பர வரி என்ற பெயரில் அந்தந்த நாடுகளுக்கும் விதித்தார்.
மேலும், அரசு ஊழியர்களை எளிதாக பணிநீக்கம் செய்யும் வகையில் அதிகாரத்தை வலுப்படுத்துவது, சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோரை அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்புவது, திருநங்கையரின் பாலினத்தை அங்கீகரிக்க மறுத்து உத்தரவு, ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தடை ஆகிய முடிவுகளையும் டிரம்ப் எடுத்தார்.
அதோடு, ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து, ஏராளமான அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஏழை அமெரிக்கர்களுக்கான மருத்துவ காப்பீடு உதவித் திட்ட நிதியையும் பெருமளவு குறைத்துள்ளார். அவரது இத்தகைய நடவடிக்கைகள் தான் தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளன.
ட்ரம்ப்பின் பதில்
இந்த போராட்டங்கள் குறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில்,'இந்த போராட்டங்கள் அர்த்தமற்றது' என்று கூறியுள்ளார். போராட்டக்காரர்கள் தன்னை ஒரு மன்னர் என குறிப்பிடுவதாகவும், ஆனால், தான் மன்னர் இல்லை, அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்றும், அமெரிக்க நலன்களை உறுதி செய்யவே இத்தகைய நடவடிக்கைகளை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில், அவரை க்ரீடத்துடன் மன்னராக சித்தரித்து வெளியான வீடியோக்களையும், அவரை கிண்டல் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட ஏஐ வீடீயோவை பகிர்ந்த துணை அதிபர் ஜே.டி. வான்சின் பதிவையும் ட்ரம்ப் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவில் 50 மாகாணங்களிலும் ட்ரம்ப்புக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் அதில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.





















