Air India Flight: புறப்பட்டது அமெரிக்காவுக்கு.. சென்றது ரஷ்யாவுக்கு.. தீவிர கண்காணிப்பில் ஏர் இந்தியா விமானம்..!
தங்கள் நாட்டிற்கு வரவேண்டிய ஏர் இந்தியா விமானம் ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தங்கள் நாட்டிற்கு வரவேண்டிய ஏர் இந்தியா விமானம் ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பொதுவாக விமானப்பயணம் மேற்கொள்ளும் போது வானிலை, மருத்துவ உதவி, விமானக் கோளாறு உள்ளிட்ட பல காரணங்களால் அருகிலுள்ள வேறு நாட்டிலோ, அல்லது மாநில விமான நிலையங்களிலேயோ அவசரமாக தரையிறக்கப்படுவது வழக்கம். அப்படியான நிலையில் நேற்றைய தினம் டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவுக்கு AI173 விமானம் புறப்பட்டது.
இந்த விமானத்தில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக ரஷ்யாவில் உள்ள மகதானுக்கு திருப்பி விடப்பட்டது. இதனை ஏர் இந்தியா நிறுவனம் நேற்று மாலை வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த விமானத்தில் 216 பயணிகள் மற்றும் 16 பணியாளர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விமானம் கட்டாய சோதனைக்கு உட்பட்டு வருவதாகவும், பயணம் செய்தவர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. தொடர்ந்து பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மனப்பூர்வமாக வருந்துகிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டது
இந்நிலையில் அமெரிக்கா செல்லும் விமானம் ரஷ்யாவில் அவசரமாக தரையிறங்க வேண்டியிருந்தது என்பதை நாங்கள் அறிவோம் என அமெரிக்க அரசின் முதன்மை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் தெரிவித்துள்ளார். மேலும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். இந்த நேரத்தில் விமானத்தில் எத்தனை அமெரிக்க குடிமக்கள் இருந்தனர் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். பழுதான விமானத்துக்குப் பதிலாக மாற்று விமானம் ஒன்றை அனுப்பி வைப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்ததாகவும் வேதாந்த் குறிப்பிட்டுள்ளார்.
உலகில் ராணுவ பலத்தில் மிகப்பெரிய நாடுகளாக விளங்குவது அமெரிக்காவும், ரஷ்யாவும் ஆகும். பல ஆண்டு காலமாகவே ரஷ்யாவிற்கும், அமெரிக்காவிற்கும் பனிப்போர் இருந்து வருகிறது. சமீபத்தில் கூட ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நேரடி மோதல் தொடர்பான சம்பவங்கள் படிப்படியாக அதிகரித்து வருவதாக TASS செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. இதனிடையே , கடந்த மார்ச் மாதம் ரஷ்ய விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் ஒன்று கருங்கடல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவிற்கு சொந்தமான ட்ரோன் மீது மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.