உக்ரைனில் கோரம்! கிராம நிர்வாகிகள் கூட்டத்தில் வெடிகுண்டு தாக்குதல் - 26 பேர் படுகாயம்
உக்ரைனில் உள்ள கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தனிநபர் ஒருவர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 26 பேர் காயம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக உக்ரைன் – ரஷ்யா போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்குவதற்கு முன்பிருந்தே நடைபெற்று வரும் உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக உலக நாடுகள் மிகுந்த வேதனையில் உள்ளன. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென உலக நாடுகள் வலியுறுத்தினாலும் இதுவரை முடிவுக்கு வரவில்லை.
வெடிகுண்டு தாக்குதல்:
இந்த நிலையில், மேற்கு உக்ரைனில் உள்ள கெரெட்ஸ்கை என்ற கிராமத்தில் கிராம நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த கிராமத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சுமார் 30 நபர்கள் வரை அந்த அறையில் அமர்ந்திருந்தனர். அப்போது, திடீரென ஒரு நபர் அந்த அறையின் கதவை திறந்து கொண்டு வந்தார்.
அவர் வந்ததை கூட கவனிக்காமல் அந்த அறையில் இருந்தவர்கள் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது, மிகவும் கூலாக சினிமாவில் வருவது போல தனது இரண்டு பைகளில் இருந்தும் கிரானைட் குண்டை எடுத்த அந்த நபர் அனைவர் முன்பும் சத்தமாக கூச்சலிட்டார். அவரது குரலை கேட்டு அனைவரும் திரும்பி பார்த்தபோது கிரானைட் குண்டின் பாதுகாப்பு பின்னை கழட்டி அந்த அறையின் தரையில் ஒன்றன் பின் ஒன்றாக கீழே போட்டார்.
26 பேர் காயம், 6 பேர் கவலைக்கிடம்:
அதைக்கண்ட அங்கிருந்தவர்கள் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்தனர். அதற்குள் அந்த கிரானைட் வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தால் அங்கிருந்தோர் அலறினர். இந்த கோர சம்பவத்தில் 26 பேர் படுகாயம் அடைந்தனர். 6 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். அந்த அறைக்குள் வெடிகுண்டுகளை வீசியவர் படுகாயங்களுடன் உயிரிழந்தார்.
ஏற்கனவே போரால் பதற்றத்தில் உள்ள அந்த நாட்டு மக்கள் இந்த சம்பவத்தால் மேலும் வேதனை அடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை அந்த நாட்டு போலீஸ் வெளியிட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர் யார்? அவருக்கு எப்படி கிரானைட் வெடிகுண்டு கிடைத்தது? என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. ரஷ்யாவுடனான போருக்கு பிறகு சாதாரண மக்கள் மத்தியில் ஆபத்திற்குரிய ஆயுதங்கள், வெடி மருந்துகள் மிக எளிதாக கிடைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: இஸ்ரேலிய பணயக்கைதிகளை தவறுதலாக கொன்ற இஸ்ரேல் ராணுவம்.. போரால் தொடர்ந்து நிலைகுலையும் காசா
மேலும் படிக்க: ராஜபக்சக்கள் திருடிய பணத்தை மீட்டால் வரி வசூலிக்க வேண்டிய அவசியம் இருக்காது: இலங்கை முன்னாள் அதிபர்