Donald Trump: எல்லாருக்கும் நாங்க கொடுக்கறோம்...எங்களுக்கு யார் கொடுப்பாங்க.? புலம்பும் ட்ரம்ப்.!!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மற்ற நாடுகளுக்கு தாங்கள் நிதியுதவிகள் வழங்குவதாகவும், ஆனால் தங்களுக்கு யார் வழங்குவது என்பதுபோல் பேசியுள்ளார். எதனால் அவர் இப்படி பேசினார் தெரியுமா.?

இந்தியாவில் வாக்காளர் சதவீதத்தை அதிகரிக்க, அமெரிக்கா நிதியுதவி அளித்தது குறித்து சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இது குறித்து மறுபடியும் பேசியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எங்களுக்கு யார் நிதியுதவி அளிப்பார்கள் என்பது போல் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவிற்கான நிதியுதவியை நிறுத்திய ட்ரம்ப்
அமெரிக்காவில், அரசின் செலவினங்களை குறைக்கும் நடவடிக்கைகளில், அந்நாட்டின் அரசு செயல்திறன் துறை இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் வாக்காளர் சதவீதத்தை அதிகரிக்க, அமெரிக்க அரசு வழங்கி வந்த நிதியை நிறுத்துவதாக அறிவித்தது. ஏற்கனவே, 21 மில்லியன் டாலர்கள் நிதியுதவி அளிக்கப்பட்டது குறித்து பேசிய அதிபர் ட்ரம்ப், பைடன் அரசால் வழங்கப்பட்ட அந்த தொகை, இந்தியாவில் நடைபெற்ற தேர்தலில் குறுக்கிட்டு, வேறு யாரையாவது தேர்ந்தெடுக்கும் நோக்கில் வழங்கப்பட்டிருக்கலாம் என குற்றம்சாட்டினார். இந்நிலையில், இந்த நிதியுதவி குறித்து கடந்த 3 நாட்களாக அதிபர் ட்ரம்ப் பேசி வருகிறார்.
எங்களுக்கு யார் நிதியுதவி வழங்குவது என கேட்ட ட்ரம்ப்
இந்த சூழலில், மீண்டும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி குறித்து பேசிய ட்ரம்ப், 21 மில்லியன் டாலர்கள் தனது நண்பர் பிரதமர் மோடிக்கும், இந்தியாவுக்கும் சென்றதாக குறிப்பிட்ட அவர், இந்தியாவில் வாக்காளர் சதவீதத்தை அதிகரிக்க 21 மில்லியன் கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் நமக்கு என்று கேள்வி எழுப்பிய அவர், எனக்கும்தான் வாக்காளர் சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இதேபோல், வங்கதேசத்தில் அரசியல் கட்டமைப்புகளை வலுப்படுத்த 29 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த தொகை யாருமே கேள்விப்படாத ஒரு நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனத்தில் 2 பேர் மட்டுமே வேலை செய்வதாகவும் குறிப்பிட்டார் ட்ரம்ப். மேலும், 10 ஆயிரம், 20 ஆயிரம் என்று நன்கொடை பெற்றுக்கொண்டிருந்த அந்த நிறுவம், தற்போது அமெரிக்காவிடமிருந்து 29 மில்லியன் டாலர்களை பெற்று பணக்கார நிறுவனமாக மாறியுள்ளதாகவும், அந்த இருவரும் மகிழ்ச்சியாக இருப்பதாவும் கிண்டலாக கூறினார். அவர்கள் இருவரும் விரைவில் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படுவார்கள் என்றும் ட்ரம்ப் கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

