“காசா உடன் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல்“; அறிவித்த ட்ரம்ப் - என்ன கூறியுள்ளர் தெரியுமா.?
காசா உடனான 60 நாட்கள் போர்நிறுத்தத்திற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டள்ளார்.

இஸ்ரேல் - காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே 2 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இதை முடிவுக்கு கொண்டுவர, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், காசாவில் 60 நாட்கள் போர் நிறுத்தத்தை மேற்கொள்வதற்கான அனைத்து நிபந்தனைகளுக்கும், இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக ட்ரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ட்ரம்ப் வெளியிட்ட பதிவு என்ன.?
இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், காசா தொடர்பாக, இஸ்ரேலுடன் தனது பிரதிநிதிகள் நீண்ட நேர பேச்சுவார்த்தை நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த பேச்சுவார்த்தையின்போது, 60 நாட்கள் போர்நிறுத்தம் மேற்கொள்வதற்கு தேவையான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அந்த நேரத்தில், போரை நிறுத்துவது குறித்து அனைத்து தரப்பினரிடமும் இணைந்து செயல்படுவோம் என அவர் கூறியுள்ளார்.
கத்தார் மற்றும் எகிப்து நாடுகள் அமைதியை கொண்டுவருவதற்கு மிகவும் உழைத்ததாகவும், இறுதி முன்மொழிவை வழங்குவோம் என தெரிவித்துள்ள ட்ரம்ப், இதை ஹமாஸ் ஒப்புக்கொண்டால், மத்திய கிழக்கிற்கு நல்லது என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.
ஹமாஸிற்கு இதைவிட சிறந்தது கிடைக்காது, ஒப்புக்கொள்ளாவிட்டால் இதைவிட நிலைமை மோசமாகத் தான் ஆகும் எனவும் ட்ரம்ப் தனது பதிவில் எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் - காசா(ஹமாஸ்) போர்
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் அமைப்பினர், ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என சுமார் 1,200 பேரை கொன்றதோடு, நூற்றுக்கணக்கானோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதையடுத்து, காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது.
ஹமாஸ் அமைப்பினருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, காசா பகுதியில் போர் விமானங்கள், ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. போரின் போது, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படுள்ள அகதிகள் மீதும் இஸ்ரேல் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஐ.நா ஊழியர்கள் 50 பேர் கொல்லப்பட்டனர். அதோடு, ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவளிக்கும் மற்ற நாடுகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதும், ஏமனில் உள்ள ஹைதிக்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இந்த போரில் இதுவரை 46,000-த்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர்.
போரை நிறுத்த ட்ரம்ப் முயற்சி
இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர, ட்ரம்ப் முயற்சி மேற்கொண்டார். அதன்படி ஒரு போர் நிறுத்த ஒப்பந்தமும் போடப்பட்டது. அதன்படி, பல கட்டங்களாக பிணைக் கைதிகளை விடுவிப்பது என ஒப்புக்கொள்ளப்பட்டது.
ஆனால், அதில் சிக்கலை ஏற்படுத்தியதாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டினர். இதனால், இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
மறுபுறம், பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த நிலையில், தற்போது, போர் நிறுத்தத்திற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த முறையாவது வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.





















