Trump Gaza: “நான் ஒரு வார்த்தை சொன்ன உடனே நீங்க ‘காசா‘ல படைகள இறக்கலாம்“; இஸ்ரேலிடம் என்ன கூறினார் ட்ரம்ப்?
நான் ஒரு வார்த்தை சொன்ன உடன் நீங்கள் காசாவில் படைகளை இறக்கலாம் என இஸ்ரேலிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். அவர் எதற்காக இப்படி கூறினார் தெரியுமா.?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் தீவிர முயற்சியால், இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. அவரது 20 அம்ச திட்டத்தின் ஒரு பகுதி அமலாகியுள்ள நிலையில், பிணைக் கைதிகள் விடுதலை நடைபெற்றது. இந்நிலையில், நான் ஒரு வார்த்தை சொன்ன உடன் நீங்கள் காசாவில் படைகளை இறக்கலாம் என இஸ்ரேலிடம் ட்ரம்ப் கூறியுள்ளார். அவர் எதற்காக அப்படி கூறினார் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
“நான் சொன்ன உடன் காசாவில் படைகளை இறக்குங்கள்“
ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை பின்பற்றத் தவறினால், நான் சொன்ன உடன் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளை காசாவில் நிலைநிறுத்த முடியும் என ட்ரம்ப் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.
உயிருள்ள மற்றும் இறந்த பிணைக் கைதிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தத்தை ஹமாஸ் முழுமையாக கடைபிடிக்கவில்லை என்று இஸ்ரேல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நிலையில், ட்ரம்ப் இவ்வாறு கூறியதாக தெரிகிறது. ஹமாசுடன் என்ன நடக்கிறது.? அது விரைவில் சரி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
20 அம்ச அமைதித் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது என்ன.?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்ச அமைதித் திட்டத்தின்படி, இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் பகிரங்கமாக ஏற்றுக்கொண்ட 72 மணி நேரத்திற்குள், உயிருடன் உள்ள மற்றும் இறந்த அனைத்து பிணைக் கைதிகளும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி, உயிருடன் உள்ள 20 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதே நேரம், 4 உடல்கள் மட்டுமே திருப்பி அனுப்பப்பட்டன. அதில் ஒரு உடல் இஸ்ரேலிய பிணைக் கைதியினுடையது அல்ல என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அந்த 20 பிணைக் கைதிகளை ஒப்படைப்பது மிக முக்கியமானது என்று ட்ரம்ப் ஏற்கனவே கூறினார்.
இதனிடையே, ஹமாஸ் போட்டிக் குழுக்களை எதிர்கொள்ளும் நிலையில், பொது மரண தண்டனை சம்பவங்கள் உட்பட, காசாவில் வன்முறை மோதல்கள் தொடர்ந்து வருகின்றன. ஹமாஸ் நிராயுதபாணியாக்கப்பட வேண்டும், அல்லது நாங்கள் அவர்கள் நிராயுதபாணியாக்குவோம் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மேலும், காசாவை நிர்வகிப்பதில் ஹமாசுக்கு எந்த பங்கும் இருக்கக் கூடாது என்றம், அது ராணுவமயமாக்கப்பட்டு, சுயாதீனமாக கண்காணிக்கப்படும் என்றும் ட்ரம்ப்பின் அமைதித் திட்டம் கூறுகிறது.
இந்நிலையில், ஹமாஸ் ஆயுதங்களை கைவிட மறுத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து ட்ரம்ப்பிடம் கேட்டபோது, அதைப் பற்றி தான் யோசித்து வருவதாகவும், தான் சொன்ன உடன் இஸ்ரேல் தனது படைகளை காசாவில இறக்கி தாக்குதல் நடத்தலாம் என்று ட்ரம்ப் கூறியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
உள்ளூரிலேயே ஹமாசிற்கு எதிரான போராட்ட குழுக்கள் செயல்பட்டு வருவது அவர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் முழுமையாக கடைபிடிக்குமா.? அல்லது மீண்டும் போர் தொடங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.





















