Trump Vs Putin: “உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு
நீங்கள் உண்மையாகவே அமைதியை விரும்புகிறீர்கள் என்பதை 2 வாரத்தில் நிரூபிக்க வேண்டும், அப்படி இல்லையென்றால் விளைவுகள் ஏற்படும் என்று, ரஷ்ய அதிபர் புதினுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கெடு விதித்துள்ளார்.

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துவரும் நிலையில், பேச்சுவார்த்தைகளும் ஒருபுறம் நடந்து வருகிறது. இந்நிலையில், நீங்கள் உண்மையிலேயே அமைதி ஏற்பட விரும்புகிறீர்கள் என்பதை 2 வாரங்களில் நிரூபிக்க வேண்டும் என, ரஷ்ய அதிபர் புதினுக்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கெடு விதித்துள்ளார்.
பேச்சுவார்த்தையில் தீர்க்க முடியாத ரஷ்யா-உக்ரைன் போர்
உக்ரைன் நேட்டோவில் இணைவதை எதிர்த்த ரஷ்யா, கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன், உக்ரைன் தாக்குப்பிடித்து போராடி வருகிறது. இந்நிலையில், இந்த போரை நிறுத்த நடத்தப்பட்ட பல்வேறு பேச்சுவார்த்தைகள் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன.
ஏற்கனவே, ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்த ட்ரம்ப் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இரு நாட்டு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, சிறப்பு தூதராக ஸ்டீவ் விட்காஃபை நியமித்து, அவரும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகளுடன் நடத்தினார். எனினும், அவை எல்லாம் தோல்வியிலேயே முடிவடைந்தன. இதனிடையே, ரஷ்யா மற்றும் உக்ரைன் நேரடியாகவும் அவர்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், அதுவும் தோல்வியிலேயே முடிவடைந்தது.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், உக்ரைன் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை என்று ரஷ்யாவும், ரஷ்யா தான் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை என்று உக்ரைனும் கூறி வருவதுதான்.
இந்நிலையில், சமீபத்தில் உக்ரைன் மீது நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வைத்து ரஷ்யா மிகப்பெரிய தாக்கதலை நடத்தியதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின் பைத்தியம் போல் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
புதினுக்கு 2 வாரங்கள் கெடு விதித்த ட்ரம்ப்
இப்படிப்பட்ட சூழலில், தற்போது, ரஷ்ய அதிபர் புதினுக்கு ட்ரம்ப் 2 வாரங்கள் கெடு விதித்துள்ளார். அதாவது, நீங்கள் உண்மையாகவே அமைதியை விரும்புகிறீர்கள் என்பதை 2 வாரங்களில் நிரூபிக்க வேண்டும் என புதினுக்கு அவர் நேரம் அளித்துள்ளார். அப்படி செய்யாவிட்டால், விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் எனவும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தீவிர தாக்குதல் நடத்திவரும் நிலையில், ட்ரம்ப் இவ்வாறு கெடு விதித்துள்ளார். உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா ராக்கெட் தாக்குதல்களை நடத்துவது நல்லதல்ல என்றும், சமீபத்தில் ரஷ்யாவின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களால் தான் பெரும் ஏமாற்றமடைந்ததாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஏனெனில், ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த ட்ரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். ஆனால், அதற்கு பிடி கொடுக்காமல் ரஷ்யா நழுவி வருகிறது. ஆனால், ஒரு பக்கம், உக்ரைன் தான் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை என்று ரஷ்யா கூறி வருவதாலேயே, ட்ரம்ப் இத்தகைய கெடுவை ரஷ்யாவிற்கு விதித்துள்ளார்.
இதற்கு புதினின் பதில் என்னவாக இருக்கப் போகிறது.? அப்படி அவர் ஒத்துவரவில்லை என்றால், ட்ரம்ப் எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறார் என்பதை தெரிந்துகொள்ள, 2 வாரங்கள் பொறுத்திருக்க வேண்டும்.





















