Trump Vs Russia: ரஷ்யா ஒரு 'காகிதப்புலி' - ட்ரம்ப்; நாங்கள் புலி அல்ல, 'கரடி' - ரஷ்யா பதிலடி - அங்க என்னதான் நடக்குது.?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்யாவை ‘காகிதப்புலி‘ ட்ரம்ப் விமர்சனம் செய்த நிலையில், நாங்கள் புலி அல்ல, உண்மையான கரடி என ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது. இந்த சுவாரஸ்ய நிகர்வு குறித்து பார்க்கலாம்.

ஐ.நா பொதுச் சபையின் கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசினார். அதன்பின் பேசியபோது, ரஷ்யாவை காகிதப் புலி என்று அவர் விமர்சித்துள்ளார். இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுத்துள்ள ரஷ்யா, தாங்க ஒரு கரடி என கூறியுள்ளது. இந்த சுவாரஸ்ய நிகழ்வு குறித்து தற்போது பார்க்கலாம்.
“ரஷ்யா ஒரு தனித்துவ நாடு அல்ல, உண்மையில் அவர்கள் காகிதப்புலி“
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சமீபத்தில் ஐ.நா பொதுச்சபையின் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். மேலும், அதன் ஒரு பகுதியாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் அவர் சந்தித்து பேசினார். அப்போது, ரஷ்யா பலவீனத்துடன் இருக்கிறது, இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அவர்கள் கைப்பற்றிய அனைத்து பகுதிகளையும் திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும் என ஜெலன்ஸ்கிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
அதன்பின் பேசிய அவர், ஐரோப்பிய யூனியனுடன் இணைந்து, தங்களுடைய பகுதிகளை உக்ரைன் திரும்ப எடுத்துக் கொள்ளும், அதற்காக போரிட்டு வெற்றி பெறும் என நினைக்கிறேன் என நம்பிக்கை தெரிவித்தார்.
அதோடு, உண்மையான ராணுவ அதிகாரம் கொண்ட எந்த ஒரு நாடும், போரில் வெற்றி பெறுவதற்கு ஒரு வாரம் போதும். இப்படி மூன்றரை ஆண்டுகளை எடுத்துக்கொள்ளாது எனவும் ட்ரம்ப் கூறினார். அதனால், ரஷ்யா ஒன்றும் தனித்துவமான நாடு அல்ல, உண்மையில் அவர்கள் ஒரு காகிதப்புலி போன்று இருக்கிறார்கள் என கிண்டலடித்தார்.
“நாங்கள் உண்மையான கரடி“ - ரஷ்யா பதிலடி
ட்ரம்ப்பின் இந்த விமர்சனத்திற்கு ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது. பல தடைகளை விதித்தபோதும், பொருளாதார ரீதியில் தாங்கள் நிலைத்து நிற்பதாகவும், ரஷ்யா ஒன்றும் காகிதப் புலி அல்ல, ஆனால், தாங்கள் உண்மையான கரடி என்றும் ரஷ்யா கூறியுள்ளது.
இது குறித்து பேசிய ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ட்ரம்ப்பின் கூற்றை மறுத்ததுடன், ஜெலன்ஸ்கி கூறிய விவரங்களை கேட்டுவிட்டு ட்ரம்ப் அவ்வாறு கூறுவதாக தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைனில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து முன்னேறி வருவாதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
ரஷ்யா மீது பல கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் விதிக்கப்பட்டபோதும், அதனை எல்லாம் தகர்த்து முன்னேறுவதாகவும் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். மேலும், தங்களுடைய தாக்குதல் திறனை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும், அவை ஆழ்ந்து சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவுகள் எனவும் அவர் கூறியுள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் போரை தொடங்கிய ரஷ்யா, தற்போது வரை தாக்குதல்களை நிறுத்தவில்லை. எனினும், உக்ரைனும் பல நாடுகளின் உதவியுடன் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்து தாக்குப்பிடித்து வருகிறது.
இந்நிலையில், இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடுத்த அனைத்து முயற்சிகளும் பலனில்லாமல் போனது. அதற்கு காரணம் ரஷ்ய அதிபர் புதின் போரை நிறுத்த விரும்பாதது தான் என்று கூறப்படுகிறது.
இதனால் தான், ட்ரம்ப்பும் புதின் மீது கோபத்தில் இருக்கிறார். அதன் வெளிப்பாடாகவே, ரஷ்யாவை அவர் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.






















